ஹாலிவுட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நேரிடும் ஒரு விபத்தால் ஒரு சிறிய நகரில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு தூண்டுகோலாக மாறித் தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார், வேட்டையாடப்படுவது யார் என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.
குழந்தைப் பருவ பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்கக் காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய்ப் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மவுன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்க முடியாத பாவங்களுக்குத் துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு "வெளிப்படையாகத் தெரிவதை நம்பாதே" என்ற கருத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
அலசல் பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் சேர்ந்து ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.
ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் ‘இரவே... இருளே... கொல்லாதே!' ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கிராபிஃக் நாவல். இதில் குறியீடாகப் பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராகச் சொல்லப்பட்டு இருப்பதாலும் ஆழ்ந்து, கூர்ந்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபல ஹாலிவுட் டிவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில் இடை யிடையே காட்சிகள் பின்னப் பட்டுள்ளதால், அதைப் பற்றியும் ஓரளவுக்கு விவரம் தெரிந்திருந்தால் வாசிப்பின் சுவை கூடும்.
ஆசிரியர் பயிற்சியைப் பாதியில் கைவிட்டுவிட்டு கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் கெட்டவர்களும் இல்லை என்ற ஜோயலின் டெம்ப்ளேட்தொடங்கியது இந்தக் கதையில்தான்.
பின்தொடரும் நிழலாக வரும் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப் போலச் சரியான நேரத்துக்காக காத்துக் கிடக்கின்றன.
உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்லத் தலைதூக்கும் மனிதத்தன்மை... வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாகவும் இருக்கிற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே சிலிர்க்க வைக்கின்றன.
இணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில் ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரஸ்யத்துடன் எழுதுவதைப்போலப் பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வது எளிதான வேலையில்லை. அதைச் செம்மையாகச் செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன்.
முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களைப் போல வேகமாக நகர்கின்றன. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.
ஒரு நேர்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான B Grade ஹாலிவுட் படத்துக்கு இணையான இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர் ஜோயல்.
தமிழில் காமிக்ஸ் / கிராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை லயன் காமிக்ஸ் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரம், அடுத்து எந்தக் கட்டத்தை படிக்க வேண்டும் என்பதை உணர்த்தப் போடப்பட்டு இருக்கும் அம்புக்குறிகள், காமிக்ஸ் படித்து வருபவர்களின் அறிவுத்திறனைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தெரிகிறது.
தீர்ப்பு: நான்கு தோட்டாக்கள் (4/6).
கிங் விஸ்வா,
காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com
இரவே.. இருளே.. கொல்லாதே!
மூலம் : Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.
கதை : ஜோயல் கல்லெட்
ஓவியம் : டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்
தமிழாக்கம் : எஸ். விஜயன்
வெளியீடு : லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.
விலை : 150 ருபாய் (மூன்று பாகங்கள்)
வகை : அமானுஷ்ய த்ரில்லர் (18 +)
கதைக் கரு : தொடர் கொலைகளைச் செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago