“இ
ன்னா மாமே, ஏரியா பக்கமே ஆஜராவே மாட்டேன்றே. ஊட்ல ஞாயித்துக்கெழம கூழ் ஊத்தறாங்க, ஒரு தபா வாயேன். நம்ம தோஸ்த்துங்கெல்லாம் வருவாங்க, இன்னா சொல்றே, கஜா”.
“யாரு… தொட்டி பாபு, கண்டிப்பா வர்றேன் நைனா” என்றான் கஜா என்று அவனுடைய சகாக்களால் அன்போடு அழைக்கப்படும் கஜேந்திரன். வட சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியில்தான் கஜா பிறந்தது, வளர்ந்தது, படித்தது, சேட்டை செய்தது எல்லாம். இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் பூர்வீக வீட்டை விற்று விட்டு, விரிவடைந்த மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்டிருந்தாலும், சென்னைக்கு வெகு தொலைவிலிருக்கும் ஒரு வத்திப்பெட்டி ஃபிளாட்டில் குடியிருப்பவன். வெள்ளிக்கிழமையிலிருந்தே பழைய நண்பர்களைச் சந்திக்கும் சந்தோஷத்தில் மூழ்கத் தொடங்கினான் கஜேந்திரன்.
ஞாயிற்றுக்கிழமை பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கு வெளியே பூவு (பூவழகன்) வண்டியோடு காத்திருந்தான். “இன்னாடா பூவு, நாரு மாதிரி ஆயிட்டே” கலாய்த்தான் கஜா.
“தோ பார்றா, காஜா போன பட்டனெல்லாம் நம்மளக் கலாய்க்குது” என்று பதிலுக்கு கஜாவைக் கலாய்த்தான் பூவு.
தொட்டி பாபு வீட்டில் பாட்சா, கிச்சா, சுருட்ட முடி செந்திலு எல்லாம் தயாராக இருந்தனர். ஸ்பானரும் கையுமாவே இருக்கும் சூரி மட்டும் கூட்டத்தில் ஆப்சென்ட். கூழ் சாப்பிட்டு முடித்ததும், அப்படியே ஏரியாவை ஒரு ரவுண்ட் வரலாமா என்றான் பாட்சா. ‘சர்தாம்பா’ என்று கிளம்பியது தொட்டி பாபு டீம்.
கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே சிவஞானம் பூங்காவில் கொஞ்ச நேரம் நாவாட உட்கார்ந்தார்கள். அப்போது சூரியும் அங்கே வந்தான்.
“மச்சான் ரொம்ப நாளா ஒரு டவுட்டு. நம்ம ஏரியாவுல வால்டாக்ஸ் ரோடுன்னு இருக்கே, இன்னாத்துக்கு அந்தப் பேர்ல சொல்றாங்கன்னு தெரியலையே…” என்றான் தொட்டி பாபு.
“நாம இருக்கிற இந்த கொண்டித்தோப்பு, முத்தியாலுபேட்டை, ஏழுகிணறு, பெத்துநாயக்கன் பேட்டை எல்லாத்தையும் அப்போ பிளாக் டவுன்னு சொல்வாங்களாம்பா. வெள்ளக்காரங்க ஆட்சியில இருந்தப்போ அவங்களுக்கும் பிரெஞ்சுக்காரங்களுக்கும் பெரிய சண்டை வந்திருக்கு மாமு. ஒருவாட்டி பிரெஞ்சுக்காரங்கிட்ட வெள்ளக்காரங்க தோத்துட்டாங்களாம். அதுக்கப்புறம் மறுபடியும் கெலிச்ச வெள்ளக்காரங்க, இன்னொரு தபா பிரெஞ்சுக்காரன் எவனும் பிளாக் டவுனுக்குள்ளே நுழையாம இருக்கணும்னு ஒத்தக்கால்ல நின்னுருக்காங்கபா. அதுக்காக பக்கிங்காம் கால்வாயிலிருந்து இப்போ இருக்கிற சென்ட்ரல் வரைக்கும் ஒரு சுவத்த நீளமா எழுப்பியிருக்காங்க. அந்தச் சுவரைக் கட்டுனதுக்குக்கூட நம்ம ஜனங்கள்ட இருந்தே வரியா வசூலிச்சாங்களாம். அந்தச் சுவத்த ஒட்டி போட்ட ரோட்டுக்கு ஒத்தவாடை சாலைன்னு பேரு. இந்தச் சுவத்த தாண்டி வர்றவங்களுக்கு வரி போட்டதாலதான் சுவர் வரி சாலைன்னு (Wall Tax Road) பேர் வந்துச்சாம்…” இதெல்லாம் எங்க வூட்டுல இருந்துச்சே பெருசு, அது சொல்லிக் கேட்டிருக்கேன் மாமு என்றான் பாட்சா.
“அதுல இன்னொரு விசயத்த வுட்டுட்டியே மாமே… இந்த ஒத்தவாடை சாலைல இருந்த நாடக கொட்டாலதான் எம்.ஜி.ஆர்., அவங்க அண்ணன் சக்ரபாணி எல்லாம் நடிச்சிருக்காங்கபா…” – பாட்டுக் கச்சேரில பொட்டி வாசிப்பாரே குணாளன் அண்ணன், இத்தை அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும் மாமே என்றான் பூவு.
“மச்சி எனக்கு இன்னொரு டவுட்டு. ‘பிராட்வே’ன்னா பெரிய வழின்னு அர்த்தம் எம்பொண்ணு சொல்லிச்சுபா. ஆனா இவ்ளோ சின்ன ரோட்டுக்குப் போயி அந்தப் பேரையா வெப்பாங்க?’’ அங்கலாய்த்தான் சுருட்ட செந்திலு.
“இன்னைக்கு என்னாபா, ஒவ்வொருத்தனும் டவுட்டுன்னு கூவுறீங்க. ஆனா, அதைப் பத்தி மெய்யாலுமா ஒரு கதை இருக்கு நைனா. செயின்ட் ஜார்ஜ் கோட்டைய வெள்ளக்காரங்க கட்டின காலத்துல அதுக்குப் பக்கத்துல நரிமேடுன்னு ஒரு சின்ன குன்று இருந்துச்சாம். அந்தக் குன்று சிதைச்சு கிடைச்ச மண்ண கொண்டுவந்து போட்ட இடம்தான் பக்கத்துல இருக்கே மண்ணடி, அந்த இடம். அப்படியும் மண்ணும் கல்லும் மிச்சம் இருந்துச்சாம். அதைக் கொண்டுவந்து சாக்கடையா இருந்த இடத்திலே கொட்டி மோடாக்கினாங்களாம். அதுதான்பா இந்த பிராட்வே. ஆரம்பத்துல பேருக்கேத்த மாதிரி பெருசாதான் இருந்துச்சு. போகப் போக நம்ம ஜனங்க கடை, கழனிய போட்டு ரோட்டை ஆக்கிரமிச்சு சின்னதாயிடுச்சுபா…” - இதை ஒரு பொஸ்தகத்துல படிச்ச ஞாபகம் என்றான் கஜா.
“ஏரியாவுல பழைய கொட்டாயெல்லாம் ஒண்ணும் இல்லாம போகுதே...” என்று வருந்தினான் பூவு.
“ஆமாப்பா பத்மநாபா, கிரவுண், கிருஷ்ணா, பிரபாத், பிராட்வே, செலக்ட், முருகன், நடராஜ் கொட்டாயில்லாம் காலி. வண்ணாரப்பேட்டை பிரிட்ஜுக்குக் கீழே பாரத் மட்டும் இருக்கு. லோன்ஸ்கொயர் ஏரியாவுல இருந்த மினர்வா இப்போ அய்யா பேர்லதான் ஓடுது…” எனப் பீத்திக்கொண்டான் பாட்சா!
“வால்டாக்ஸ் ரோடுக்கு அர்த்தம் சொன்னியே… தங்கசாலைன்னு இருக்கே, வெள்ளக்காரங்க காலத்துல கோல்டுல ரோடு போட்டாங்கன்னு சொல்லிடாதடா மச்சி” என்று கொக்கரித்தான் தொட்டி பாபு.
“தங்கத்துல ரோடு போட்டாங்கன்னு சொல்ற அளவுக்கு நான் கொட்லு கெடையாது மச்சி. மெய்யாலுமே இன்னான்னா தங்கத்துல, வெள்ளில, வெண்கலத்துல, ஜார்ஜ் மன்னர், விக்டோரியா ராணி உருவம் பொறிச்ச நாணயங்களை அச்சடித்தது, மின்ட் நாணய சாலைலதான். அதனாலதான் தங்கசாலைன்னு பேர் வந்துச்சி. அப்புறம், பகோடான்னா துண்றதுதான் ஒனக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனா, அப்ப நாணயத்துக்கான பேரே பகோடாதான். தொண்டி காலணாலேர்ந்து பல நாணயங்களை அச்சடிச்சிருக்காங்க. இங்க அச்சடிச்ச நாணயங்கள்தான் இந்தியா முழுக்க போச்சு…” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னான் கஜா.
“கூல் மச்சி கூல், சரி வா அப்படியே கொத்தவால்சாவடி போய், அங்கிருந்து உன்னை பார்க் ஸ்டேஷன்ல விட்டுடுறேன் என்று நண்பர்கள் கிளம்பினர்.
கொத்தவால் சாவடி ஆசியாவிலேயே மக்களால் மிகப் பெரிய சந்தையாக உருவாக்கப்பட்ட பெருமை கொண்ட சந்தை என்ற நினைவும், தங்கள் வீட்டில் நடந்த ஒவ்வொரு திருமணத்துக்கும் காய்கறி வாங்க அதிகாலை 4 மணிக்குக் கொத்தவால்சாவடிக்கு வந்த நினைவுகளும் கஜாவின் மனதில் அலையடித்தன.
பைக்கில் எந்த டிராஃபிக்கும் இல்லாமல் சுளுவா கொத்தவால்சாவடியை தொட்டி பாபுவின் டீமால் கடக்க முடிந்தது. வண்டி மூர் மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது, சூரி உசுப்பேத்தினான். “டேய் கஜா, நீ கப்பீஸ் மீனு வாங்கிக்கொடுத்தே ஒரு கோல்ட் ஃபிஷ்ஷ உஷார் பண்ணியே… ஞாபகம் இருக்காடா?”.
“எனக்கு 1985-ல மர்மமான முறையில மூர்மார்க்கெட் எரிஞ்சதுதான் நெனவுல இருக்கு. ஹேர்பின்லேர்ந்து காஷ்மீர் சால்வைவரைக்கும் எல்லாமே கிடைச்ச இடம்பா அது. ஒரு குட்டி இந்தியாவே மூர் மார்க்கெட்ல இயங்கிட்டிருந்த அந்த நாளை இப்ப நெனச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சி...” என்ற கஜாவின் நேர்மையான ஃபீலிங்ஸை சூரி கண்டுகொள்ளவே இல்லை.
“ஏன்பா, அந்த கோல்டன் ஃபிஷ்ஷ அப்புறம் நீ பாக்கவேயில்லையா’’ என்று நண்பர்கள் விடாமல் கேட்கவே, பார்க் ஸ்டேஷனுக்கு வேகமாக வண்டியை விட்டு, அங்கிருந்து வீடு கிளம்பினான் கஜா!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago