கிராஃபிக் நாவல்: இந்திய சூப்பர் ஹீரோ சக்ரா

By கிங் விஸ்வா

ரத் தேவராஜனும் கோத்தம் சோப்ராவும் கோத்தம் காமிக்ஸ், வர்ஜின் காமிக்ஸில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் ‘கிராஃபிக் இந்தியா’ என்ற காமிக்ஸ் நிறுவனத்தை உருவாக்கினர். இந்த நிறுவனத்துக்காக ஸ்பெஷலாக ஏதாவது ஒரு காமிக்ஸ் தொடரைப் படைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஏற்கெனவே, இந்திய ஸ்பைடர்மேன் காமிக்ஸ் தொடரை உருவாக்கியபோது, அதன் படைப்பாளர் ஸ்டான் லீயுடன் அவர்களுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அதனால், இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்குமாறு ஸ்டான் லீயை அணுகினார்கள். அப்படி அவர் உருவாக்கியதுதான், சக்ரா.

சூப்பர் சிறுவன்

பெற்றோர்களை விபத்தில் இழந்த பிறகு, விஞ்ஞானியாக வேண்டுமென்று ஆசைப்படும் சமீர், தம்பி ராஜுவுக்காகச் சிறுவயதிலேயே வேலைக்குப் போகிறான். ராஜுவைப் படிக்கவைத்து, மும்பையின் பிரபல விஞ்ஞானியான டாக்டர் சிங்கிடம் உதவியாளராகச் சேர்த்து விடுகிறான் சமீர். டாக்டர் சிங், ஓர் அசாத்திய திறமைசாலி. தலைவர் யார் என்றே தெரியாத நிறுவனத்தின் விஞ்ஞானப் பிரிவில் தனது பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் டாக்டருக்கும் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறது.

இதற்கிடையே, உலகின் முக்கியமான நாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் ஒரு அமைதி மாநாட்டுக்கு வர இருக்கிறார்கள். அழிவு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஷத்ரு சேத் என்பவர்தான் இந்தச் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்கிறார்.

சக்தி கேந்திரங்கள்

தலையில் இருக்கும் அணிமுடி சக்கரம், நெற்றியிலிருக்கும் பார்வைக்கான சக்கரம், தொண்டையிலிருக்கும் குரலுக்கான சக்கரம், நெஞ்சிலிருக்கும் இதயச் சக்கரம், மார்புப் பகுதியிலிருக்கும் சூரியச் சக்கரம், தொப்புளுக்கு அருகிலிருக்கும் பாதுகாப்புச் சக்கரம், மூலச்சக்கரம் என்று மனித உடலில் 7 சக்தி கேந்திரங்கள் உள்ளன.

இந்த ஏழு சக்திக் கேந்திரங்களை ஒருங்கிணைத்து, அவற்றைத் தூண்டினால், அந்தச் சக்கரங்கள் மனித உடலின் சக்தியைப் பன்மடங்காகப் பெருக்கும். இந்தச் சக்தியைச் சரியான முறையில் கட்டுப்படுத்தினால், பஞ்ச பூதங்கள் முதல் அனைத்தையும் நம் விருப்பப்படி செயல்பட வைக்க முடியும் என்பது டாக்டர் சிங்கின் நம்பிக்கை.

இந்தச் சக்கரங்களின் சக்தியைக் கட்டுப்படுத்த மனிதரால் முடியாது. ஆகவே, ஒரு கவச உடையைத் தயாரிக்கிறார் டாக்டர் சிங். அந்தக் கவச உடையை ராஜுவுக்கு அணிவிக்கிறார். ஆனால், சக்கரங்களை ஒன்றிணைக்கும் சக்தியைப் பெற, எந்த அளவுக்கு மின்சாரம் தேவைப்படுமென்று அவரால் நிர்ணயிக்க முடியவில்லை. டாக்டர் சிங் தனது ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்காததால், அவரது பரிசோதனைகளுக்கு நிதியுதவி செய்யும் நிறுவனம் ஒரு குழுவை அனுப்புகிறது. அந்தக் குழுவின் பிடியிலிருந்து தப்பிக்க கவச உடையுடன் சோதனைக் கூடத்தை விட்டு ராஜு தப்பி ஓடுகிறான்.

மாவீரன் சக்ரா

ரவுடித்தனம் செய்யும் ஏரியா இளைஞர்களை எதிர்கொள்கிறான், ராஜு. அப்போது ஒரு பெரிய மின்னல் அவனைத் தாக்க மயக்கமடைகிறான். அவனது நினைவுகள் புதிரான காலப் பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. தாஜ்மகாலின் இறுதி வடிவத்தை டிசைன் செய்கிறான், ராஜு. அதன் பின்னர் ஒரு டைனசாருடன் மோதுகிறான். திடீரென்று அவனது நினைவுகளில், ‘யமா’ என்ற மர்ம உருவத்தின் செயல்களால், உலகின் அழிவைக் காண்கிறான். விழித்துக்கொண்டு, அந்த ரவுடிகளைப் பந்தாடுகிறான். ஆனால், அவனது அபரிதமான சக்திகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை.

டாக்டர் சிங் தப்பித்து, மறைவிடத்தில் இருப்பதை அறிந்துகொண்டு, அவரிடம் சென்று பயிற்சி பெறுகிறான். அப்போதுதான் ஷத்ரு சேத்தும் டாக்டர் சிங்கும் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் என்பதும், சக்திக் கவசத்தின் முன்மாதிரியை அணிந்து, மூன்று சக்திக் கேந்திரங்களை இயக்கி, அந்த ஆற்றலைப் பெற்றவன் ஷத்ரு என்பதும் ராஜுவுக்குத் தெரியவருகிறது.

ஒரு கட்டத்தில், ஷத்ருவுக்குக் கவச உடையணிந்த சக்ரா யாரென்பது தெரிய வர, ராஜுவின் அண்ணனை ஷத்ருவின் ஆட்கள் அழைத்துச் செல்கிறார்கள். சக்ராவைக் கைப்பற்ற நினைக்கும் ஷத்ருவுக்கும் ராஜுவுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், சர்வதேச அமைதி மாநாடு, அண்ணன், நண்பர்கள், டாக்டர் சிங், மர்மமான யமா என பல காரணிகளுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது இந்த ஆறு பாகக் கதை.

ஜீவனின் துடிப்பான ஓவியங்கள் இந்தக் கதையை ரசிக்கவைக்கின்றன. சென்னையைச் சேர்ந்த சுந்தரக் கண்ணனின் வண்ணக் கலவையும் கதையோட்டத்துக்கு உதவுகிறது. அனுராக் காஷ்யப்பின் ‘ஃபான்டம் ஃபில்ம்ஸ்’ நிறுவனம் இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும், விக்ரமாதித்ய மோட்வானே இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

 

04CHVAN_Sharad_Devarajan_1.jpgஷரத் தேவராஜன் (கதாசிரியர்): கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய காமிக்ஸ் நிறுவனமான கோத்தம் காமிக்ஸை தொடங்கினார், ஷரத். அதன் பின்னர், பல்வேறு காமிக்ஸ் நிறுவனங்களைக் கடந்து, இப்போது கிராஃபிக் இந்தியாவை உருவாக்கியுள்ளார்.

ஸ்டான் லீ (சக்ராவை உருவாக்கியவர்): ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மென், அயர்ன் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், டேர்டெவில், ஃபெண்டாஸ்டிக் 4, அவெஞ்சர்ஸ் ஆகிய காமிக்ஸ் கதாபாத்திரங்களின் பிரம்மாதான் ஸ்டான் லீ. ஒரு சராசரி மனிதன் அன்றாட வாழ்வில் கடக்கும் சோதனைகளையும், துயரங்களையும் இவரது சூப்பர் ஹீரோக்களும் கடந்துசெல்வது போல கதையமைப்பதால்தான், இவரது படைப்புகள் ரசிக்கப்படுகின்றன. 94 வயதான ஸ்டான் லீயை கௌரவப்படுத்தாத காமிக்ஸ் விருதுகளே இல்லை.

 

04CHVAN_Artist_Jeevan_J_Kang_1.jpgஜீவன் ஜே காங் (ஓவியர்): இந்திய ஸ்பைடர்மேன் காமிக்ஸ்தான் ஜீவன் வரைந்த முதல் காமிக்ஸ். அதன் பின்னர், பல சர்வதேச காமிக்ஸ் தொடர்களுக்கு இவர் வரைந்துவருகிறார்.

கிராஃபிக் இந்தியா, அதன் தாய் நிறுவனங்களில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 39 வயதான ஜீவன், பெங்களூருவில் வசிக்கிறார்.

தலைப்பு: சக்ரா

கதாசிரியர்: ஸ்டான் லீ & ஷரத் தேவராஜன்

ஓவியர்: ஜீவன் ஜே காங்

வெளியீடு: நவம்பர் 2016 (248 முழு வண்ணப் பக்கங்கள், 699 ரூபாய்)

பதிப்பாளர்: கிராஃபிக் இந்தியா

கதைக்கரு: இந்திய சூப்பர் ஹீரோ

குறிப்பு: அனிமேஷன் திரைப்படமாகவும், கார்ட்டூன் தொடராகவும் வந்துள்ளது

 

 

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்