கிராஃபிக் நாவல்: வரணும், பழைய பன்னீர்செல்வமா வரணும்!

By கிங் விஸ்வா

அர்ஜுன், மும்பை காவல்துறையில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அர்ஜுனின் வாழ்க்கையின் மூன்று கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை நான்-லீனியராக, பல ஃபிளாஷ்பேக்குகளில் விறுவிறுப்பாகச் சொல்கிறது மும்பை கான்ஃபிடென்ஷியல் கிராஃபிக் நாவல். ஒரு கட்டத்தில் விலை உயர்ந்த கார் ஒன்று இடித்து பெரும் விபத்தைச் சந்திக்கிறார் அர்ஜுன். அது ஒரு பாலிவுட் நட்சத்திரத்தின் கார்.

சோகத்தின் இருள்

இந்த கிராஃபிக் நாவலில் பல ஃபிளாஷ்பேக்குகள் இருந்தாலும், கதை ஆரம்பிக்கும்போது சோகமான அர்ஜுனையே சந்திக்கிறோம். காவல்துறையிலிருந்து வெளியேறி, மதுவுக்கு அடிமையான ஒரு முன்னாள் போலீஸ்காரராக அர்ஜுன் அறிமுகமாகிறார். வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமின்றி, எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார் அர்ஜுன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக, ஒரு என்கவுன்டர் டீமில் முக்கியமான ஆளாக இருந்த அர்ஜுனின் இப்போதைய நிலைமை பரிதாபத்துக்குரியதுதான். ஆனால், மகப்பேறு நேரத்தில் மனைவியை இழந்த அர்ஜுன், மும்பையின் மிக முக்கியமான மாஃபியா தாதாவை எதிர்கொள்ளும்போது, தன்னுடைய குழுவின் ஆட்களையும் இழக்கிறார். அவரது குழுத் தலைவரும், வழிகாட்டியுமான விஷ்ணு டாம்ளே கால்களை இழக்கிறார். போலீஸ் வேலையை விட்டுவிட்டு, சோகத்தை மறக்க நினைக்கும் அர்ஜுன், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார். இப்படியாகச் செல்லும் அவரது வாழ்க்கை, ஒற்றை நொடிக் கருணையால் ஒரு ‘யூ டர்ன்’ போடுகிறது.

ஒற்றை நொடிக் கருணை

மிக மோசமான கட்டங்களோ, வலிகளோ நம்மைப் பெரிதாக பாதிப்பதில்லை. ஏனென்றால், வாழ்க்கையின் மிக மோசமான கட்டங்களைக் கடந்த பிறகு, எதுவுமே நம்மை பாதிப்பதில்லை. ஆனால், யாரென்றே தெரியாத சிலரின் ஒரு நொடிக் கருணை இருக்கிறதே, அது மோசமான வலியைக் கொடுக்கும். அந்த கருணையை உணர்ந்த நொடி, உங்களது உண்மை நிலையை முழுவதுமாக உணர்த்தும்.

மும்பையின் இருள் சூழ்ந்த தெருவில், ரோஜாப் பூக்களை விற்கும் ஒரு சிறுமி, அர்ஜுனிடம் பூக்களை வாங்கிக்கொள்ளச் சொல்லிக் கேட்கிறாள். ஆனால், ஒரே ஒரு நொடி அர்ஜுனின் முகத்தைப் பார்த்த லாலி என்ற அந்தச் சிறுமிக்கு ஏதோ புரிகிறது. அவள் மேற்கொண்டு வற்புறுத்தாமல் திரும்பி விடுகிறாள். அவளது அந்தப் புரிதல், அந்தக் கருணை அர்ஜுனை ஏதோ செய்கிறது. திரும்பிச் செல்லும் அவளை அழைத்து ரோஜாப் பூவை வாங்கிக்கொள்கிறான். அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் செல்லும் அந்தச் சிறுமியைப் பார்த்தவாறே இருக்கும் அர்ஜுனுக்குள் ஏதோ ஒரு மின்னல் அடிக்கிறது. அதேநேரத்தில் ஒரு கார் அவர்கள் இருவரையும் இடித்துவிட்டு நிற்காமல் போகிறது.

பழைய பன்னீர்செல்வம்

ஒரு மாதம் கோமாவில் இருந்த பிறகு மீளும் அர்ஜுன், அந்தச் சிறுமிக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறான். ஆனால், அப்படி ஒரு சிறுமிக்கு விபத்து நடந்ததைப் பற்றி எந்தத் தகவலும் பதியப்படாமல் இருப்பதைக் கண்டு, கோபம் கொள்கிறான்.

தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான நிலையை ஒற்றை நொடியில் உணர்த்திய அந்தச் சிறுமிக்கு, நியாயம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான். 5 வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகிறான். ஆனால், அவனுக்கு எந்தத் துப்பும் கிடைக்காமல், மிகவும் தந்திரமாக அனைத்துத் தடயங்களும் மறைக்கப்பட்டிருப்பதை உணர்கிறான். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அர்ஜுனுக்கு உதவ முன்வருகிறார், மும்பையின் மாஃபியா தாதா.

ஒரு காலத்தில் அர்ஜுனின் என்கவுன்டர் டீமில் இருந்தவர்கள்தான் இப்போது மும்பையின் நிழல் உலகத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை அர்ஜுன் அப்போது உணர்கிறான். அதற்குப் பிறகு, விபத்துக்குள்ளான அந்த அயல்நாட்டு கார் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடையது என்பதையும் தெரிந்துகொள்கிறான். ஆனால், மும்பை மாஃபியாக்கள் ஏன் ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாரைக் காப்பாற்ற முனைய வேண்டும் என்கிற கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்குகிறான். உண்மையை நோக்கிய அவனது தேடல், அர்ஜுனை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை அட்டகாசமான ஓவியங்களுடன், நேர்த்தியான கதையமைப்பில் சொல்லி இருப்பதுதான் இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.

ஃபிளாஷ்பேக் புதுமை

வழக்கமான காமிக்ஸ்-கிராஃபிக் நாவல் பாணியில் இல்லாமல், இதில் மாறுபட்ட ஓவியங்களைப் படைத்திருக்கிறார் விவேக். அடர்த்தியான, இருள் சூழ்ந்த மும்பையை இவ்வளவு அழகாக, இத்தனை மிரட்டலாக யாராவது இதற்கு முன்னர் வரைந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மும்பையின் அழகும் கொடூரமும் வெளிப்படுவது, அதன் மழைக் காலத்தில்தான். அந்தப் பெருமழைக்கால இரவு நேரத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் விவேக்.

அமெரிக்காவின் பூம் ஸ்டுடியோ நிறுவனத்தின் காமிக்ஸ் தொடராக, ஒன்பது இதழ்களாக வெளிவந்த இந்தத் தொடர், ஒரு வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. கதை நேர்த்தியாக முன்னேறிக்கொண்டு இருக்கும்போது, திடீரென ஒரு ஃபிளாஷ்பேக் வருகிறது. அந்த ஃபிளாஷ்பேக்கில், கதையின் போக்கில் அப்போது முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவரது முன்கதை சொல்லப்பட்டிருக்கும். அதுவும், வேறொரு ஓவியரின் கைவண்ணத்தில். இப்படியாக, இந்தியாவின் மிகச்சிறந்த காமிக்ஸ்-கிராஃபிக் நாவல் ஓவியர்களான சௌமேன் பட்டேல், தேவகி நியோஜி, வினய் பிரம்மானியா, சிட் கோட்டியன் என்று பலரின் கைவண்ணத்தில் குறுங்கதைகளாக, கவிதைகளாகச் சில ஃபிளாஷ்பேக்குகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஆயிரம் முறை நாம் படித்த துரோகங்களைப் பற்றிய கதைதான். ஆனாலும் அதைச் சொன்ன விதத்தில், நேர்த்தியில்தான் மும்பை கான்ஃபிடென்ஷியலின் வெற்றி அடங்கியிருக்கிறது. சொல்லப்பட்ட விதமும், அதில் உள்ளடங்கியிருக்கும் புதுமையுமே இந்தியாவின் சிறந்த கிராஃபிக் நாவல்களில் ஒன்றாக இதை உயர்த்திப் பிடிக்கிறது.

தலைப்பு : மும்பை கான்ஃபிடென்ஷியல்

கதாசிரியர் : சௌரவ் மகாபாத்ரா

ஓவியர் : விவேக் ஷிண்டே

வெளியீடு : 2014 (ரூ. 499 – 144 பக்கங்கள்)

பதிப்பாளர் : இங்க்டு (பெங்குவின் இந்தியா)

கதை : மும்பையின் மாஃபியா உலகம், பாலிவுட், என்கவுண்டர்களை மூன்று காலங்களில் இணைக்கும் புள்ளி.

சிறப்புகள் : அமெரிக்காவின் பூம் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டு, பிரபல சாண்டியாகோ காமிக்-கானில் வெளியிடப்பட்ட காமிக்ஸ்.


சௌரவ் - விவேக்

சௌரவ் மகாபாத்ரா (கதாசிரியர்)

ஒடிசாவில் பிறந்து வளர்ந்த சௌரவ், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் மேலாண்மை படித்துவிட்டு, 2000-த்தில் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். 'டிம்டிம்' என்ற வெப் கான்ஃபரன்சிங் நிறுவனத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். உலகப் புகழ்பெற்ற வேதாளர் தொடருக்குக் கதை எழுதிய இந்தியர், அமெரிக்க காமிக்ஸ் தொடர்களுக்குக் கதை எழுதியவர் என்று பல சாதனைகளைப் படைத்தவர். வளரும் கதாசிரியர்களுக்காக 'காமிக்ஸ் எழுதுவது எப்படி?' என்று பல கட்டுரைகளை இணையத்தில் எழுதியிருக்கிறார்.

விவேக் ஷிண்டே (ஓவியர்)

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்து ஓவியரான விவேக், விளம்பரத் துறையில் பிரபலமானவர். பி.எம்.டபிள்யு., ரேடியோ மிர்ச்சி, கேஸ்ட்ரால், நோக்கியா என்று பல விளம்பரங்களுக்கு இவர்தான் தொடக்கப்புள்ளி. வர்ஜின் காமிக்ஸ், பெங்குவின், கிராஃபிக் இந்தியா என்று பல காமிக்ஸ்களுக்கு வரைந்திருக்கும் இவர், இப்போது கனடா அனிமேஷன் துறையில் வெற்றித் தடம் பதித்து வருகிறார்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்