அ
டர்த்தியான மரங்களைக் கொண்டதொரு தோட்டம். கிளைகளைக் கடந்து வரும் நிலவொளி ஒரு சில இடங்களில் பூமியில் பாவுகிறது. அடர்த்தியான ஒரு மரக்கிளையின் மீதிருந்து ஒரு வானரம் அந்தத் தோட்டத்தை தனது கூர்மையான பார்வையால் அலசுகிறது. ஓர் இடத்தில், அதன் பார்வை நிலைகுத்தி நிற்கிறது. அங்கே லேசான நிலவொளியில், ஒரு பெண் படுத்திருக்கிறார். மரத்தின் மீதிருக்கும் வானரத்தின் பார்வையில் இந்தக் காட்சிகள் நமக்குக் கடத்தப்படுவதால், வானரத்தின் கண் மூலமாகவே அந்தப் பெண்ணைக் காண்கிறோம். அதனால், அந்தப் பெண்ணின் மனநிலையை நம்மால் துல்லியமாக உணர முடிவதில்லை. அடுத்த கட்டத்தில், அந்தப் பெண்ணின் முகத்துக்கு மிக அருகில், தரையில் ஒரு கம்பளிப்புழு ஊர்ந்து செல்கிறது. திரைப்பட மொழியில் சொல்வதென்றால், ‘குளோஸ்-அப்’ காட்சி.
இப்போது, ‘குளோஸ்-அப்’பில் அந்தப் பெண்ணின் முகம். நிலவொளியில் அவளது கலைந்த கேசமும் கண்களிலிருந்து வழியும் கண்ணீரும் வறண்ட உதடுகளும் தெரிகின்றன. அவளது சோகம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. இங்கே மிகுதியாகவோ கவித்துவம் நிறைந்த வசனங்களோ எதுவுமே இல்லை. மேலே சொன்ன காட்சிகளுக்கு மொத்தமே ஏழே ஏழு வாக்கியங்கள்தான். இது கிராஃபிக் நாவலின் உச்சகட்ட அழகியல். ஓவியங்களைக் கையாளத் தெரிந்த ஒரு தேர்ந்த கலைஞனின் ஓவியத்தால் ஆன கவிதை இது.
பீமனின் கீதை
மகாபாரதத்தின் சிறப்பே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு செய்யும் கீதை உபதேசம்தான். அதைப்போலவே, குருட்சேத்திரப் போருக்கு முன்பாகவே பீமனுக்கும் ஒரு உபதேசம் சொல்லப்படும். காட்டில் நடந்து வரும் பீமனின் வழியில் ஒரு வயதான வானரம் படுத்துக் கிடக்கிறது. வழியைவிடச் சொல்லி கேட்கிறான், பீமன். ஆனால், அந்த வானரம் மறுக்க, அதன் வாலைப் பிடித்து ஓரமாக நகர்த்தலாம் என்று வாலைத் தூக்க முயல்கிறான். ஆனால், பூமியிலேயே மிகுந்த வலுவானவனாகக் கருதப்படும் பீமனாலேயே அந்த வானரத்தின் வாலை நகர்த்த முடிவதில்லை. தனது கர்வத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பீமன், அந்த வானரத்திடம் பேச ஆரம்பிக்கிறான். அது, அனுமன்.
முடிவிலிருந்து ஆரம்பிப்பது
‘ஒரு போரை முழுமையாகப் புரிந்துகொள்ள, அந்தப் போரை முடிவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் போரின் முடிவில் என்ன மிச்சம் இருக்கிறதென்று தெரியும். இது போன்றதொரு மகத்தான போரைப் பார்த்தவன்’ நான். அதனால் போரைத் தவிர்க்கப் பார் என்று பீமனுக்கு சொல்கிறார் அனுமன். ஒரு போரானது அதில் பங்கேற்று, உயிருடன் இருப்பவர்களிடத்தில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்த, ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த போரைப் பற்றி பீமனுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
ராமாயணத்தை தற்போதைய இணையதளத் தலைமுறைக்குச் சொல்வதென்றால் போரடிக்கமல், சுவாரசியமாக, அதேநேரம் சுருக்கமாகவும் சொல்ல வேண்டுமில்லையா? இந்தப் புத்தகத்தின் கதாசிரியரான விக்ரம் பாலகோபால் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். அதனால், இந்த கிராஃபிக் நாவலின் கதையை ஒரு திரைக்கதையைப் போல கச்சிதமாக அமைத்திருக்கிறார்.
அனுமனின் பார்வையில் ராமாயணம்
இந்த கிராஃபிக் நாவலைப் போல், இதுவரை இந்திய காமிக்ஸ் ஒன்றில் சண்டைக்காட்சிகளை நுணுக்கமாகவும், ஸ்டண்ட் மாஸ்டரைப் போலவும் வடிவமைக்கப்பட்டதே இல்லை. சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையே நடக்கும் போராட்டம் 66 கட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. திரைப்படத்தைப் போலவே, சண்டைக்காட்சிகளுக்கான திரைமொழி இலக்கணத்துடன் 'மிட் ஷாட்', 'லாங்-ஷாட்', 'குளோஸ்-அப்' காட்சிகள் என்று அட்டகாசமாக வரையப்பட்டுள்ளன. வாலி வீழ்த்தப்படும் அந்த ஒரு கட்டத்தில், இந்திரனின் ஆயிரம் விழிகள் மேகமூட்டத்தில் மறைந்து, மழை பெய்யத் தொடங்குவது ஒரு கவித்துவமான காட்சி. கொட்டும் மழையில் பறவைகள் கிஷ்கிந்தையை விட்டு பறந்துச் செல்வது, உருவகங்களையும் குறியீடுகளையும் கடந்து ஓவியரின் திறமையை நமக்கு உணர்த்துகிறது.
தரையில் வீழ்ந்து மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வாலி, ராமனுடன் நடத்தும் விவாதம் கதாசிரியரின் எழுத்தாற்றலுக்குச் சான்று. பத்து பக்கங்கள் நீளும் இந்த விவாதம், நியாயத் தராசின் தட்டுகளைப் போல இடம் மாறுகிறது. ஆரம்பத்தில் வாலி பேசும்போது, ராமன் குற்றவாளிபோலத் தோன்றினாலும், ராமன் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது நியாயத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் வருகிறது. அதைப் போலவே, ராவணனுக்கும் அனுமனுக்கும் இடையே நடக்கும் விவாதமும் குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டாம் பாகத்தின் முடிவில், நமக்கும் அனுமனைப் போலவே ராவணன் செய்தது சரிதானே என்று ஒரு சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
தனித்துவ அமைப்பு
இது வழக்கமான காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இல்லை. அனுமனை ஆப்பிரிக்காவில் வாழும் கெலாடா பபூன்போல வரைவதில் ஆரம்பித்து, பல மாற்றங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இலங்கையில் வாழ்பவர்களை அசுரர்களாக சித்தரிக்காமல் இருப்பது, ராவணனுக்கு ஒரு தலை மட்டுமே இருப்பது, இலங்கையின் பெண் காவல் தெய்வத்தை மிகவும் அழகாகச் சித்தரித்திருப்பது, ஜாம்பவானைக் கரடியாக வரையாமல் வானரமாகவே வரைவது, அனுமன் சூரியனை விழுங்காமல் நிலவை விழுங்குவது என்று மாற்றி இருக்கிறார், விக்ரம்.
இந்தக் கிராஃபிக் நாவல் முழுக்க முழுக்க கறுப்பு, வெள்ளை வண்ணங்களைக்கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தெய்வீக அம்சங்கள், ஆசீர்வதிக்கப்பட்ட ஆயுதங்கள் போன்ற சில மட்டும் முழு வண்ணத்தில், அவற்றின் தனித்துவத்தை உணர்த்தும் வகையில் வரையப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தின் சிறப்பே, காட்சிகளோடு நம்மை ஒன்ற வைத்துவிடுவதுதான். அனுமனை இந்திரஜித் விஷ அம்பால் வீழ்த்தி, சங்கிலியால் கட்டி, தரையில் இழுத்துச் செல்லும்போது, படிக்கும் வாசகர் தானும் இழுத்துச் செல்லப்படுவதைப் போன்ற ஒரு வலியை உணர வைக்கிறார், விக்ரம். அந்த வலிதான் இந்த கிராஃபிக் நாவலை, இந்தியாவின் தலைசிறந்த கிராஃபிக் நாவல்களில் ஒன்றாக உயர்த்துகிறது.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago