கொஞ்சம் இசை, கொஞ்சம் சேவை

By வா.ரவிக்குமார்

‘சின்ன சின்ன ஆசை...’, ‘இளமை என்னும் பூங்காற்று...’, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, ‘ஆடவரலாம்.. ஆடவரலாம்…’ என பழைய திரைப்படங்களிலிருந்தும் புதிய திரைப்படங்களிலிருந்தும் இனிமையான பாடல்களை சிலர் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் ஒத்திசைவாக வயலினில் பின்னணி இசையைத் துல்லியமாக வாசித்திக்கொண்டிருந்தார் ஒரு பெண். அவர்கள் வாசித்துக்கொண்டிருந்தது, விதவிதமான வண்ணங்களை வீசும் விளக்குகள் அலங்கரித்த மேடையில் அல்ல, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வார்டில். அவர்களின் இசையை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் புற்றுநோயாளிகள்!

தன்னார்வ சேவை

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் புற்றுநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்குவதோடு, புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, இசையின் மூலமாக இதமளிக்கும் இசை சேவை அளிக்கிறது சென்னையில் செயல்படும் அஸ்வின் மகராஜ் அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பு. இந்தச் சேவைக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் உள்ள பல புற்றுநோய் மருத்துவமனைகள் ஆதரவு அளித்து வருகின்றன. வாரத்துக்கு இரண்டுமுறை மருத்துவமனையில் இசை நிகழ்ச்சியை வழங்குகிறார்கள் இவர்கள். இந்தியாவில் உள்ள 45-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தன்னார்வத்தோடு இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

எப்படிப் பாட வேண்டும்?

“புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் தனித்தனியாக இசை நிகழ்ச்சிகளை நடத்துவோம். சின்ன சின்ன ஆசை..., எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருக்கும் பழைய பாடல்களை ஆர்வமோடு கேட்பார்கள்” என்றார் கனடாவின் டொரண்டோ நகரிலிருந்து பின்னணிப் பாடகியாவதற்காகச் சென்னைக்கு வந்திருக்கும் தீபிகா. சேத்னா, அக்ஷய் ஆகியோர் புதிய பாடல்கள், பழைய பாடல்கள், பாரதியார் பாடல்கள், சில தனிப்பட்ட குழந்தைப் பாடல்களை வயலினில் வாசித்து குழந்தைகளை மகிழ்விக்கின்றனர்.

கல்லூரி மாணவியான திவ்யா கர்னாடக இசைப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாலும், நோயாளிகளுக்கு பிடித்தமான `மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?’ போன்ற அந்தக் கால கிளாஸிக்கல் பாட்டுகளையும் முறையாகப் பயிற்சி செய்து பாடுகிறார்.

“நாங்கள் பாடும்போது நோயாளிகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் ரசிப்பார்கள். ஒரு சிலர் நாங்கள் எங்காவது தவறு செய்துவிட்டாலும், அதைச் சுட்டிக் காட்டுவார்கள். எப்படிப் பாடவேண்டும் என்றும் சொல்வார்கள். அவர்களை மகிழ்விப்பதன் மூலம் எங்களுக்கு கிடைக்கும் சந்தோஷமே தனி” என்கின்றனர் இந்த மாணவர்கள்.

சேவையின் பின்னணி

ராமசுப்ரமணியன் – மனோன்மணி தம்பதியின் இரண்டாவது மகன்தான் அஸ்வின். அவரின் பெயரால்தான் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. படிப்பிலும் கால்பந்தாட்டத்திலும் படு சுட்டியாக இருந்தார் அஸ்வின். பள்ளிப் படிப்புக்குப் பின், டெல்லியின் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் படித்தார் அவர். அஸ்வின் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, 2015-ல் அவருக்கு ரத்த புற்றுநோய் தாக்கியது. தானமாகக் கிடைத்த ஸ்டெம்செல்லின் துணையோடு இந்தப் புற்றுநோயை எதிர்க்கத் தொடங்கியதுடன், ஸ்டெம்செல் தானம் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று நினைத்தார் அஸ்வின்.

ஆனாலும் நோயின் தீவிரத்தால் சென்னை, டெல்லியைத் தொடர்ந்து சாண்டியாகோவில் புகழ்பெற்ற மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அந்த மருத்துவமனையில் புற்றுநோயாளிகளை ஆற்றுப்படுத்த இசையைப் பயன்படுத்தினர். அதில் பெரும் மனநிம்மதியைப் பெற்ற அஸ்வின், இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் இசையின் மூலமாக ஆற்றுப்படுத்தும் இத்தகைய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்கிறார் அஸ்வினின் தாய் மனோன்மணி.

“எவ்வளவோ மருத்துவ முயற்சிகளுக்குப் பிறகும் அஸ்வினை காப்பாற்ற முடியவில்லை. அக்டோபர் 2015-ல் அஸ்வினை நாங்கள் இழந்துவிட்டோம். ஆனால், அவர் ஆசைப்பட்ட ஸ்டெம்செல் விழிப்புணர்வு, இசையின் மூலமாக புற்றுநோயாளிகளுக்கு வலியிலிருந்து ஆறுதல் அளிப்பது ஆகியவற்றை தொடர்ந்து செய்துவருகிறோம்” என்றார் மனோன்மணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்