மைக்கேல் ஒரு அமெரிக்கத் தொழிலதிபர். மனைவி ஆன்னாவின் வற்புறுத்தலின் பேரில், பதின்ம வயது மகனான ‘டை’யுடன் வேண்டா வெறுப்பாக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நெரிசல் மிகுந்த பனாரஸ் வீதிகளில் காரில் செல்லும்போது, மைக்கேலுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வருகிறது. காரை நிறுத்திவிட்டு செல்போனில் பேசத் தொடங்கிவிடுகிறார். ஒரு கடைக்குச் செல்லும் ஆன்னா அப்போது காணாமல் போகிறார்.
தனியே மனைவியைத் தேடும் மைக்கேலுக்கு, ஒரு ஆளற்ற சந்தில் மனைவியின் குரல் மட்டும் கேட்கிறது. பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் செல்லும் மைக்கேலை யாரும் நம்ப மறுக்கிறார்கள்.
ரகசிய காமிக்ஸ்
அறையில், டை ஒரு காமிக்ஸ் புத்தகத்தைக் காண்பிக்கிறான். அந்த காமிக்ஸ் புத்தகத்தில், ஒரு அமெரிக்கக் குடும்பம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வருவதில் ஆரம்பித்து, யானையுடன் செல்ஃபி எடுப்பதுவரை இவர்கள் செய்த அனைத்து விஷயங்களும் அதில் இருக்கின்றன. ஆச்சரியத்துடன் பக்கங்களைப் புரட்டுகிறார், மைக்கேல். அந்தக் கதையிலும், ஆன்னாவைப் போலவே ஒருவர் கடைவீதியில் காணாமல் போகிறார். அந்த காமிக்ஸில் இருப்பவர்கள் நம்மைப்போல இல்லை என்று கூறிவிட்டு, அதை நம்ப மறுக்கிறார் மைக்கேல்.
அன்றிரவு மைக்கேல் தூங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு இளம் பெண் அவர் முன்னே வருகிறாள். ‘பூட்டிய அறைக்குள் எப்படி வந்தாய்?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல், “அவர்களுக்கு உன்னைப் பற்றித் தெரிந்துவிட்டது. உடனே என்னுடன் வா” என்றழைக்கிறாள். நம்பாமல் அவளுடன் செல்லும் மைக்கேலை ஒரு விசித்திரமான கதவைத் திறக்கச் சொல்கிறாள். அந்தக் கதவைத் திறந்த உடனே, பயங்கரமான குதிரைவீரன் ஒருவன் மைக்கேல் மீது தாக்குதல் தொடுக்க, பயத்துடன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறார். ஆனால், அறையில் அந்தப் பெண் வந்து சென்றதற்குச் சான்றுகள் இருப்பதைப் பார்த்து, இது கனவா, நிஜமா என்று திகைக்கிறார் மைக்கேல்.
மர்மக் கதவு
மறுநாள் காலையில், மைக்கேலும் டையும் அந்த காமிக்ஸ் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தெருவுக்குப் போகிறார்கள். அதில் இருப்பதைப் போன்ற கதவைத் தேடுகிறார்கள். அந்தக் கதவைத் திறக்கும் முன்பாக, காமிக்ஸில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார் மைக்கேல். ஆனால், அதற்கடுத்த பக்கங்கள் வெற்றுத் தாள்களாக இருப்பதைப் பார்த்து மிரள்கிறார்.
அப்போது டை ஆச்சரியமூட்டும் ஒரு விஷயத்தைச் சொல்கிறான். அதாவது, அந்த காமிக்ஸ் புத்தகத்தில், அவர்கள் செய்ய வேண்டிய அடுத்த செயலைப் பற்றித்தான் குறிப்பிடபட்டிருக்கிறது. அந்தச் செயலை செய்து முடித்தால்தான், அடுத்த பக்கங்கள் தோன்றுகின்றன. ஆக, அவர்கள் அந்த மர்மக் கதவைத் திறந்தால்தான் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதையே அறிய முடியும்.
beyondjpgவேறு வழியில்லாமல், அந்தக் கதவை நெருங்குகிறார்கள். ஒரு ஒளிவெள்ளம் தோன்ற, அந்தக் கதவைத் திறந்து அடுத்த பக்கம் செல்கிறார்கள். இப்போது காமிக்ஸில் புதிய ஓவியங்கள் தோன்றுகின்றன.
அவர்கள் ஒரு கடைக்குச் செல்வதுபோல காமிக்ஸில் இருக்க, அங்கே செல்கிறார்கள். அங்கே பல ரிஷிகள் உட்கார்ந்திருக்க, அங்கிருந்து நகர முயல்கிறார் மைக்கேல்.
மைக்கேலை அவர்கள் உட்காரச் சொல்கிறார்கள். ரிஷி வந்து உங்களைச் சந்திப்பார் என்றும் சொல்ல, மைக்கேல் ஆச்சரியமடைகிறார். வருபவரிடம் மைக்கேல் மரியாதையில்லாமல் ஆணவத்துடன் பேச, அவர் மைக்கேலின் நெற்றியைத் தொடுகிறார். மயக்கமடைந்து விழும் மைக்கேலின் நினைவுகள் ஒரு திரைப்படம்போல அவர்கள் கண் முன்னே தெரிகிறது.
இரண்டாம் உலகம்
மைக்கேலை ஹோட்டலில் சந்தித்த மர்மப் பெண் சித்ரா, மைக்கேலை எழுப்பி ரிஷியிடம் உதவி கேட்கச் சொல்கிறாள். ஆணவமாகப் பேசும் மைக்கேல் அங்கிருந்து புறப்பட, சித்ராவும் அவருடன் வருகிறாள். இன்னொரு கதவைக் கண்டுபிடிக்கிறார்கள். இது இரண்டாம் உலகம் என்று சொல்லும் சித்ரா, நமது உலகுக்கும் இந்த உலகுக்கும் நுண்ணிய வேறுபாடுகள்தான் இருக்கும் என்பதையும் விளக்குகிறாள். பிறகு அந்தக் கதவுக்குள் நுழைகிறான் டை. இருவரும் பின்தொடர்ந்து அந்த உலகுக்குச் செல்கிறார்கள்.
இதற்கிடையே ஒரு புதிய சிறுவனை துரத்துகிறான் டை. திடீரென்று திரும்பும் அந்தச் சிறுவன், வெறும் கைகளால் டையை நோக்கிச் சுடுகிறான். அவன் கைகளில் துப்பாக்கி தோன்றி, தோட்டாக்கள் டையை நோக்கிப் பாய்கின்றன. பயந்துபோய், குனிந்துகொள்கிறான், டை. ஆனால், அந்தத் தோட்டாக்கள் சித்ராவின்மீது பாய, அவள் காயமடைகிறாள். “உங்களின் பயம்தான் இவை அனைத்துக்கும் காரணம்” என்று சொல்கிறாள் அவள். “பயம் உங்களை மனைவியை நோக்கி அழைத்துச் செல்லும். உங்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். ஆகவே, என்ன ஆனாலும் இந்த உலகத்தில் அச்சப்படாதீர்கள்” என்று சொல்கிறாள்.
எதைத் தேர்ந்தெடுக்கிறார்?
இரண்டாம் உலகில் மகனுடன் நுழையும் மைக்கேலை ஒரு குழு வழி நடத்திச் செல்கிறது. தங்களுடன் சேர்ந்து செயல்படுவதைத் தவிர்த்து, அவருக்கு வேறு வழியில்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையில், அவரை மீண்டும் சந்திக்கும் அந்த ரிஷி, ஒரு வீட்டுக்கு மைக்கேலை அழைத்துச் செல்கிறார். அந்த வீட்டில் நுழைந்தால் அங்கே மனைவி, மகன் இருவரையும் காணலாம். அமெரிக்காவுக்கும் திரும்பலாம் என்கிறார். ஆனால், அப்படிச் செல்லாமல், இந்த உலகைக் காப்பாற்ற நினைத்தால், வேறொரு செயலைச் செய்ய வேண்டியிருக்கும் என்றுகிறார்.
மைக்கேல் என்ன செய்தார்; மனைவி, மகனைக் காப்பாற்றினாரா, இல்லையா; உலகின் சமநிலைக்கும் மைக்கேலுக்கும் என்ன தொடர்பு; அந்த ரிஷி யார்; இவனை அடிமைப்படுத்த நினைக்கும் குழுவினர் யார்; உலகம் அழிவதை மைக்கேலால் தடுக்க முடிகிறதா என்ற பல விறுவிறுப்பான கேள்விகளுக்கு எளிய சித்தாந்தங்களின் வழியாகப் பதிலைச் சொல்கிறார், கதாசிரியர் தீபக் சோப்ரா.
கோட்பாடுகளை வைத்து தீர்வு சொல்லும் கதை நகர்த்தலை, திறமையாகச் செய்ய ஓவியங்கள் சிறப்பாக உதவுகின்றன. குறிப்பாக, மைக்கேலின் சிந்தனைகள், அதன் விளைவாக அவருக்குத் தோன்றும் காட்சிகள், நிஜ உலகின் காட்சிகள் என்று மூன்று விதமான சூழல்களை அருமையான வண்ணக் கலவையுடன் வெளிப்படுத்தியிருப்பது, அட்டகாசமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
தலைப்பு: பியாண்ட்
கதாசிரியர்: டாக்டர் தீபக் சோப்ரா
ஓவியர்: எடிஸன் ஜார்ஜ் (மனு)
வெளியீடு: 2016 (112 முழுவண்ணப் பக்கங்கள், 495 ரூபாய்)
பதிப்பாளர்: கிராஃபிக் இந்தியா
குறிப்பு: பிரபல பிரிட்டிஷ் இயக்குநரான சூரி கிருஷ்ணம்மா இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தீபக் சோப்ரா
தில்லியில் பிறந்து வளர்ந்து, பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மருத்துவர் தீபக் சோப்ரா, அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.
டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்த இந்த நூற்றாண்டின் 100 மனிதர்களுள் இவரும் ஒருவர். விற்பனையில் சாதனை படைத்த பல தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்.
எடிஸன் ஜார்ஜ் (மனு)
கேரளாவைச் சேர்ந்த இவர், இந்தியாவின் சிறந்த ஓவியர்களில் ஒருவர். ராஜ் காமிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, அதன் பின்னர் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் காமிக்ஸ் தொடர்களுக்கு ஓவியம் வரைந்த முதல் இந்தியர் என்ற புகழைப் பெற்றவர்.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago