“பட்டுப் பூச்சியை அழித்து சேலை கட்டுவதா” என்பார்கள் ஜீவகாருண்யம் பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி. கொஞ்சம்கூட அசைவம் கலக்காத வாழைப் பட்டு நூல் உருவாக்கும் இயந்திரம் கண்டறிந்திருக்கிறார் தூத்துக்குடி விஞ்ஞானி முருகன்.
இலை, காய், பழம், பூ, தண்டு.. என அனைத்து பாகங்களாலும் பயன் தருவது வாழை. அனைத்தையும் எடுத்து, இனி எதற்குமே பயன்படாது என்று கழிவாக வீசும் வாழையைக்கூட பயன்படுத்த முடியும் என்கிறார் அவர். வாழைக் கழிவுகளில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள அவர், தமிழகத்தில் வாழை பட்டு நூற்பாலை தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு லட்சிய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் கே. முருகன் (41). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் சிறிது காலம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். ஆனால், அவருக்கு அந்த வேலைகளில் நாட்டமில்லை, ஆராய்ச்சி செய்து புதிய இயந்திரங்களை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்.
இவர் ஒருமுறை திருவைகுண்டம் பகுதிக்கு சென்ற போது விவசாயிகள் வாழைக் கழிவுகளை எரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். வாழைக் குலை அறுவடைக்கு பிறகு ஒட்டுமொத்த வாழையும் கழிவாக மாறிவிடுகிறது. அடுத்த பருவத்தின்போது இந்த கழிவுகளை அழிக்க விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதை முருகன் அறிந்தார்.
இந்த கழிவுகளில் இருந்து ஏதாவது பயனுள்ள பொருள் தயாரிக்க முடியுமா என யோசித்தார். பூ கட்டுவதற்கு மட்டுமே பயன்படும் வாழை நாரில் இருந்து நூல் தயாரிக்கலாமா என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவாக உருவானதுதான் வாழைப் பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் இயந்திரம் என உற்சாகமாக கூறுகிறார் முருகன்.
தனது ஆய்வுக் கூடத்தில் புதிதாக உருவாக்கிய நவீன இயந்திரத்தில் வாழை மட்டையில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகனை சந்தித்தோம். தன் முயற்சி பற்றி அவர் கூறுகிறார்.. “வாழை மட்டையில் பட்டு நூலிழை இருப்பதையும், அதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்திருப்பதையும், அந்த தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்தேன். எனவே அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
அதன் விளைவாக 2006ல் சிறிய இயந்திரம் ஒன்றை உருவாக்கினேன். இந்த இயந்திரத்துக்கு சென்னை ஐ.ஐ.டி. சார்பில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது, ரூ. 20 ஆயிரம் ரொக்க பரிசு கிடைத்தது. அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இயந்திரத்தை நவீனமாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஐ.ஐ.டி. விருதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்தும் எனது கண்டுபிடிப்புக்கு ஆதரவு பெருகியது. மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ. 4 லட்சம் நிதயுதவி வழங்கியது. அதனைக் கொண்டு இயந்திரத்தை நவீனமாக்கினேன். 2009ல் இப்பணி முடிவடைந்தது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் மீண்டும் ரூ.26 லட்சம் நிதியுதவி வழங்கியது. அதனைக் கொண்டு தானியங்கி நவீன இயந்திரத்தை உருவாக்கினேன். இந்தப் பணி இந்த வாரம்தான் முடிவடைந்துள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம், மத்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் போன்றவற்றில் இருந்து விஞ்ஞானிகள் குழுவினர் இங்கு வந்து எனது இயந்திரத்தை ஆய்வு செய்து அங்கீகாரம் அளித்துள்ளனர். மேலும் சென்னை ஐ.ஐ.டி., புனேயில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம், திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் போன்ற பல்வேறு இடங்களில் எனது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்டியுள்ளேன். இதையடுத்து நான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்துக்கு 2012ல் காப்புரிமை கிடைத்தது. எனது கண்டுபிடிப்பை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.
வாழை மட்டையில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதற்கான இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த பட்டு நூலிழையை நூலாக மாற்றி நூற்கண்டுகளில் சுற்றினால்தான் தறிகளில் பயன்படுத்தி ஆடை தயாரிக்க முடியும்.
வாழை பட்டு நூலானது வாழை மட்டையின் நீளம் மட்டுமே இருக்கும். இந்த நூல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நூற்கண்டு உருவாக்க வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளேன். இந்த ஆராய்ச்சிக்கு மத்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. விரைவில் நிதியுதவி கிடைக்கும் என நம்புகிறேன். வாழை பட்டு நூலிழையை நூற்கண்டுகளாக மாற்றினால்தான் இந்த தொழில்நுட்பம் முழுமை பெறும். அதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
வாழை மட்டையில் இருந்து நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை தருமாறு பல்வேறு நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால், தொழில்நுட்பத்தை முழுமையாக உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவ்வாறு உருவாக்கும்போது சைவ பட்டு நூல் கிடைக்கும். வாழை விவசாயிகளுக்கும் இந்த கழிவுகள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
உயிரினங்களுக்கு சிறிதுகூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை பலரும் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். பட்டுப் பூச்சிகளை அழித்து உருவாக்கப்படும் பட்டுச் சேலைகளை அணிவது அவர்களுக்கு சற்று நெருடலாக இருக்கும். வாழைப் பட்டு முழு சைவம் என்பதால், எந்தவித நெருடலும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
இந்த 7 ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு இடையே வாழைத் தண்டில் இருந்து பஞ்சு உருவாக்கினேன். அதை வெட்டுக் காயங்களில் பருத்திப் பஞ்சுக்கு பதிலாக வைத்தால், விரைவில் காயங்கள் குணமாகும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வாழைத் தண்டில் இருந்து இனிப்புகள், ஜூஸ் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளேன்.
தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு புதிய இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக பயிற்சியும் அளித்து வருகிறேன். எனது இந்த ஆராய்ச்சிக்கு மனைவி லலிதா பக்கபலமாக இருக்கிறார். சிரமப்படும் நேரத்தில் என் குடும்பத்தினரும் பல்வேறு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
தொழில்நுட்பத்தை முழுமையாக கண்டறிந்து இந்த பகுதியில் வாழைப் பட்டு நூற்பாலை தொடங்க வேண்டும் என்பது குறிக்கோள். அது விரைவில் நிறைவேறும்” என்றார் முருகன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago