வாழ்வு இனிது: ஒரு நடை வாங்க, வந்து சாப்பிட்டுப் போங்க!

உணவு கிடைக்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்ய நம்மில் பலரும் தயாராக இருப்போம். அப்படிச் சென்று சாப்பிடும் அந்த உணவு சுகாதாரமானதாகவும், பட்ஜெட்டுக்குள்ளும் அமைந்துவிட்டால் அதில் கிடைக்கும் சந்தோஷத்தைக் கேட்கவா வேண்டும்? இந்த அம்சங்களை உள்ளடக்கியபடி, சென்னையின் உணவுப் பிரியர்களுக்காக மூன்று ஆண்டுகளாக பேஸ்புக்கில் செயல்பட்டுவருகிறது ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ (Chennai Food Walks) பக்கம். சென்னையில் எந்தெந்த இடங்களில் ருசியான உணவு கிடைக்கும் என்பதை ‘மேப்’ போட்டு விளக்குகிறது இந்தப் பக்கம்.

ரூபம் தாஸ், ஸ்ரீதர் வெங்கட்ராமன் என்னும் இருவரால் தொடங்கப்பட்ட இந்தப் பக்கத்தில் இப்போது சுமார் பதினேழாயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சென்னையில் சுவையான, பாரம்பரியமான உணவுக் கடைகளைக் கொண்டிருக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் வெங்கட்ராமன். மாதத்தில் ஒரு முறையாவது வார இறுதிகளில் இந்த மாதிரி ‘உணவு நடை’க்கு ஏற்பாடு செய்துவிடுகிறார் இவர்.

சென்னையில் சவுகார்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெசண்ட்நகர், அடையார், திருவான்மியூர், தி.நகர் போன்ற இடங்களில் ‘உணவு நடை’ சென்றிருக்கிறார்கள் ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ உறுப்பினர்கள்.

அறுசுவையான எப்படிச் செயல்படுகிறது?

உணவுப் பிரியர்களைத் திருப்திப்படுத்தும் இந்தப் பக்கம் சென்னையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது. “உணவகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை இணைய தளங்கள் செய்கின்றன. பல அப்ளிகேஷன்களும் இதற்காக வந்துவிட்டன.

ஆனால், இந்தத் தளங்களின் விமர்சனங்கள் நம்பகத்தகுந்தவையா என்பது கேள்விக்குறிதான். அதனால், சென்னையில் சுவையான உணவு கிடைக்கும் சாதாரண, பாரம்பரியமான உணவகங்களைப் பிரபலப்படுத்தவே ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ பக்கம் செயல்படுகிறது. அத்துடன், இந்தப் பக்கத்தில் கூகுள் மேப்பில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் கடைகளையும் அங்கே கிடைக்கும் சிறப்பு உணவுகளையும் தொடர்ந்து குறிப்பிட்டுவருகிறேன்.

பக்கத்தின் உறுப்பினர்கள் கடைகளை எளிதாகக் கண்டுபிடிக்க இந்த ‘மேப்’ உதவுகிறது. அதனால், நான் நேரில் செல்ல முடியாவிட்டாலும் ஒரு பகுதியில் ‘உணவு நடை’யை வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடிகிறது” என்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்.

தகவல்தொழில்நுட்பத் துறையைப் பின்னணியாகக் கொண்ட இவர், தற்போது சமூகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவருகிறார். மயிலாப்பூர் பகுதிவாசியான இவர் தினமும் காலையில் போக்குவரத்து மேலாண்மைப் பணியை ஆர்வத்துடன் செய்துவருகிறார். “பொதுவாக, நான் ஒரு கடையைப் பரிந்துரை செய்வதற்கு முன்னர், அங்கே சென்று சாப்பிட்டுப் பார்ப்பேன். சுவையும், விலையும் எனக்குத் திருப்தியாக இருந்தால்தான், அந்தக் கடையைப் பரிந்துரைப்பேன்” என்று சொல்கிறார் ஸ்ரீதர்.

இளைஞர்களின் ‘சாய்ஸ்’

இந்த ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ நடத்தும் உணவு நடையில் இளைஞர்கள் அதிகமாகக் கலந்துகொள்கிறார்கள். “பொதுவாக, இளைஞர்கள் வெளியே சென்று சாப்பிட விரும்புவார்கள். அதிலும், கல்லூரி மாணவர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யில்தான் சாப்பிட வெளியே வருகிறார்கள். அதனால், உணவின் விலை குறைவாக இருந்தால் மகிழ்ச்சியுடன் சுவையான உணவைச் சாப்பிடுவார்கள் என்ற நோக்கத்தில்தான் கடைகளை நான் பரிந்துரைக்கிறேன். இருநூறு ரூபாய்க்குள் செலவாகும் கடைகளை மட்டுந்தான் பேஸ்புக் பக்கத்திலும், உணவு நடைக்கு அழைத்துச் செல்லும்போதும் பரிந்துரைக்கிறேன். அத்துடன், அவர்களை அழைத்துச் செல்லும் கடைகளைப் பற்றியும் அவர்களுக்கு விளக்குவேன். உதாரணமாக, ஜாம் பஜாரில் அமைந்திருக்கும் ‘பாஷா அல்வா’ கடை நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த மாதிரி கடைகளுக்கு அழைத்துச் செல்லும்போது அதன் பின்னணி வரலாறையும் விளக்குவேன்” என்று சொல்கிறார் ஸ்ரீதர்.

பாரம்பரியமான இடங்கள்

சென்னையில் பாரம்பரியமான உணவுப் பிரியர்களுக்கு சவுகார்பேட்டையும், மயிலாப்பூரும் வரப்பிரசாதங்கள். அதேபோல், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி போன்ற இடங்களிலும் சுவையான சிற்றுண்டிக் கடைகளும், பிரபலமான ‘மெஸ்’களும் அமைந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உணவு நடைக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார், தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலைபார்க்கும் பிரணவ் பாலசுப்பிரமணியன் (25). இப்போது வார இறுதியில் நண்பர்களை அவரே உணவு நடைக்கு ஒருங்கிணைத்து அழைத்துச்செல்கிறார். “இந்த உணவு நடைக்குச் செல்வது எப்போதும் சுவாரஸ்யமான அனுபவம். இப்போது நானே, நண்பர்கள் பத்து பேரை உணவு நடைக்கு அழைத்துச்செல்கிறேன். இதனால் கூடுதல் சந்தோஷம் கிடைக்கிறது. நான் சென்ற உணவு நடைகளில் சவுகார்பேட்டைதான் ‘பெஸ்ட்’. இங்கேயிருக்கும் ‘காக்கடா ராம்பிரசாத்’ (Kakda Ramprasad), ‘நாவல்டி டீ ஹவுஸ்’, ‘அன்மோல் லஸ்ஸி’ ஆகியவை மிகவும் பிரபலம். இந்த உணவு நடையில் வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றால் தரமான உணவைச் சுவைத்த திருப்தி கிடைக்கிறது” என்று சொல்கிறார் பிரணவ் பாலசுப்பிரமணியன்.

இதுதவிர, ரூபம் தாஸ், ஸ்ரீதர் வெங்கட்ராமன் இருவரும் இணைந்து ‘பீச் குக் அவுட்’ என்ற பேஸ்புக் பக்கத்தையும் நிர்வகிக்கிறார்கள். கடற்கரையில், இரவில் நண்பர்களுடன் சேர்ந்து சப்பாத்தி, ‘கிரில்ட் சாண்விட்ச்’ போன்ற உணவுகளை அவர்களே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். “இந்த உணவு நடையால் எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். உணவகங்களைப் பற்றிய என்னுடைய கருத்துகளைப் பெரிதும் மதிக்கிறார்கள். நாங்களும் இந்த பேஸ்புக் பக்கங்களை மக்களுக்கு உண்மையாகப் பயன்படும் வகையில் மட்டுமே பயன்படுத்துகிறோம். யாரும் தேவையில்லாமல் அவர்களுடைய உணவகங்களைப் பற்றி விளம்பரம் செய்யும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதனால், எங்களுக்கு மனத்திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது” என்று சொல்கிறார் ஸ்ரீதர் வெங்கட்ராமன்.

மேலும் விவரங்களுக்கு :

>https://www.facebook.com/groups/chn.fw

>https://www.facebook.com/groups/beachcookoutchennai

படங்கள்: ரூபம் தாஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

40 mins ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்