பணமின்றி பத்தும் செய்யும் மார்க் பாய்ல்

By ஷங்கர்

இப்போதைய காலத்தில் பணம் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற அச்சுறுத்தல் ஒவ்வொரு மனிதரிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் அடிப்படை ஆரோக்கிய சேவைகளைக்கூட அதிக விலை கொடுத்தால்தான் நுகர முடியும் என்ற சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறோம். இந்நிலையில் சாதாரண மனிதர்களுக்குப் பணம் என்பது தவிர்க்க முடியாத தேவையாகவும், அச்சுறுத்தலாகவுமே இன்று உள்ளது.

ஆனால் இங்கிலாந்தில் பொருளாதார மற்றும் வர்த்தகத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞரான மார்க் பாயல் என்பவர் பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இவர் காந்தியின் கிராமப் பொருளாதாரம் மற்றும் தன்னிறைவு சிந்தனைகளால் தாக்கம் பெற்றவர்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது வேலையைத் துறந்த அவர் இயற்கை உணவு நிறுவனத்தைத் தொடங்கினார். சாமர்செட் பண்ணை என்ற இடத்தில் தனது கேரவன் வாகனத்தையே வீடாக மாற்றிக்கொண்டார். அந்த வாகனம் அவருக்குக் கொடையாக அளிக்கப்பட்டது. தனது பண்ணையில் அவரே களத்தில் இறங்கிப் பணிகளில் ஈடுபட்டுத் தனக்கான உணவை உற்பத்திசெய்தார். விறகு அடுப்பில் சமையல் செய்துகொண்டார். தனது சோதனையைத் தொடங்குவதற்கு முன்னர் வாங்கிய 360 பவுண்டுகள் விலையுள்ள சூரிய ஆற்றல் மின்கலத்திலிருந்து மின்சாரத் தேவையையும் நிறைவேற்றி வருகிறார்.

உலகில் தற்போது நிலவும் தீவிரமான பிரச்சினைகளை ஆராய்ந்தபோது அதற்குக் காரணமாக நுகர்வும், காடுகள் அழிப்பும், குறைந்த கூலிகளில் ஆயிரக்கணக்கில் மக்களைப் பணியமர்த்தும் தொழிற்சாலைகளும்தான் காரணம் என்று கண்டுபிடித்தார் மார்க் பாயல். மனிதன் தான் நுகரும் பொருளிலிருந்து அந்நியப்பட்டதே எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்தார். ஒருகட்டத்தில் பணம் தான் சுதந்திரம் என்ற மாயையும் எல்லாரிடமும் ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் மார்க் பாயல், பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமே என்கிறார். பணம் இல்லாமல் வாழ்வதற்குப் பழகுவது முதலில் சிரமமாகவே இருந்தது என்பதையும் இவர் ஒப்புக்கொள்கிறார்.

“பணத்துக்கு எதிரான சவால் வெறுமனே ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பானதல்ல. எப்படிச் சாப்பிடுவது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எப்படிப் பயணிப்பது, பல் தேய்ப்பது எல்லாமே எனக்குப் புதிராக இருந்தது. பணம் இல்லாதபோது எல்லாரும் உணரும் பாதுகாப்பின்மை என்னையும் பயமுறுத்தியது” என்கிறார்.

இருப்பினும் 34 வயது பாய்ல் கடந்த சில ஆண்டுகளில் பணம் இல்லாமல் வாழ்வதை ஒரு இயக்கமாகவே மாற்றியிருக்கிறார். தன்னைப் பின்தொடர்பவர்கள் பலர் முழுமையாக பணத்தைத் துறக்காவிட்டாலும், பணத்தேவையை அதிகமாகத் தங்கள் அன்றாடத்தில் குறைத்துள்ளதே தனது இயக்கத்தின் வெற்றி என்கிறார். தான் பயிரிட்ட உணவுகளை அல்லது கொடையாக வழங்கப்படுவதையே உண்கிறார் பாயல். ஆற்றில் குளிக்கிறார். சோப்புக்குப் பதிலாக காரக்கட்டி மாவூரல் செடிகளைப் பயன்படுத்துகிறார். கணவாய் மீன் எலும்புகளைக் கழுவிப் பொடித்து, பெருஞ்சீரகத்துடன் சேர்த்து அதை பேஸ்டாக்கி பல்தேய்க்கிறார்.

கால்நடை அல்லது சைக்கிளில் அதிகம் பயணம் செய்கிறார். தண்ணீர் ஊற்றும் கழிப்பறைக்குப் பதிலாக உரக்கிடங்கு கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்.

2007 ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய Freeconomy என்ற இணைய சமூகத்தில் பணம் இல்லாமல் வாழ்வதற்கான டிப்ஸ்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். பணம் இல்லாமல் வாழ்வதற்கு யாரும் ஒரு வனத்தில் போய் வாழவேண்டியதில்லை. நாம் வசிக்கும் வீட்டிலேயே அதைச் சாத்தியப்படுத்தலாம் என்பதுதான் மார்க் பாய்லின் செய்தி.

இவர் மணிலெஸ் மேன் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அவர் சமீபத்தில் எழுதிய ‘மணிலெஸ் மேனிஃபெஸ்டோ’ இலவசமாக இணையத்திலேயே கிடைக்கிறது. குறைந்த பணத்துடன் நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கான வழிவகைகளை அவர் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாக தன் வாழ்க்கையைப் பணமேயின்றி வாழமுடியும் என்பதை நிரூபித்த பாய்ல், மீண்டும் பண உலகத்தை நோக்கித் திரும்பியுள்ளார். எமர்சன் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த இவர், உயிர் ஆற்றல் வேளாண்மை தொடங்கி கதைசொல்லல் வரை பல வகுப்புகளை எடுத்துச் சம்பாதிக்கிறார். ஒருவகையில் பணம் இல்லாமல் வாழத் தான் மேற்கொண்ட பரிசோதனை மூலமே அவரால் தற்போது பணம் சம்பாதிக்க முடிகிறது. தன் வேலை மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து, கிராமப் பொருளாதார அடிப்படையிலான பண்டமாற்றுச் சமூகம் ஒன்றை உருவாக்க முயல்வதாகத் தெரிவிக்கிறார். நமது உணவை நாமே தயாரித்து, உபரியை பகிர்ந்துகொள்வதுதான் அம்முறை.

பாய்லின் டிப்ஸ்

உங்களுக்குத் தேங்காய் எண்ணெய் வேண்டுமெனில் பக்கத்துவீட்டுக்காரர் தோட்டத்திலிருந்து அனுமதியுடன் தேங்காயைப் பறியுங்கள். தேங்காயை உலரவைத்து எண்ணைய் தயாரித்து அவருக்கும் ஒரு புட்டியை நன்றி செலுத்தும் விதமாகக் கொடுங்கள். உங்கள் தோட்டத்திலேயே காரக்கட்டி மாவூரல் செடியை வளர்த்து சோப் மற்றும் ஷாம்பூவைத் தயாரிக்கலாம். நீங்கள் உண்மையிலேயே தைரியசாலியாக இருந்தால், தோட்டத்திலேயே உரமாக மாறும் கழிப்பறையைக் கட்டுங்கள். அதனால் பணம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும். உடைகள் தேவையெனில் நண்பர்களிடம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து அவர்களின் மீத உடைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். வெளியூருக்குப் போகவேண்டுமெனில் இணையம் மூலம், நட்பு வட்டத்தைத் தொடர்புகொண்டு கூட்டாகக் காரில் பயணம் செய்யுங்கள். எரிபொருள் மிச்சமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 min ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்