திருநெல்வேலிக்கு அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பால்கோவா, மணப்பாறைக்கு முறுக்கு, திருப்பதிக்கு லட்டு, பழனிக்குப் பஞ்சாமிர்தம்...
இந்த வரிசையில் சமீபகாலமாக ‘அப்பம்பட்டுக்கு முட்டை மிட்டாய்’ என்று விழுப்புரம் வட்டார மக்கள் பெருமையாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள். ‘இந்த முட்டை மிட்டாய் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது' என்கிறார்கள் இப்பகுதி மக்கள். சுவைத்துப் பார்த்தால் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பிரபலமாகிவரும் முட்டை மிட்டாயின் பாரம்பரியத்தை அறிய செஞ்சிக்குச் சென்றோம். செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் 4 கிமீ தூரத்தில் உள்ளது அப்பம்பட்டு கிராமம். வீட்டில் குடிசைத் தொழில்போலத் தயாரிக்கப்பட்டுவருகிறது முட்டை மிட்டாய். இந்த மிட்டாயை வாங்க சில கார்களும் அணிவகுத்து நிற்கின்றன.
திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வாவை சுடச்சுட இலையில் வாங்கி, பல்லில் படாமல் பதமாக உள்ளே தள்ளுவதுபோல முட்டை மிட்டாயையும் ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தனர் இனிப்புப் பிரியர்கள். பால்கோவா போலவும் இல்லை, கேக் போலவும் இல்லை. முட்டை வாசனையே இல்லாத அந்த மிட்டாயை நாவில் போட்டவுடன் கரைந்து தொண்டைக்குழியைத் தொடுவதற்கு முன்பே, அடுத்த துண்டை எடுக்கத் தூண்டுகிறது. விற்பனையில் மும்முரமாக இருந்த கடை உரிமையாளர் சையது உஸ்மானிடம் கேட்டபோது அவர் கூறியது:
என்னோட அப்பா சையது கப்பாரும், பேக்கரியில் வேலை செஞ்ச அவரோட நண்பர் பியாரேஜானும் இணைஞ்சு பல இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்றனர். அப்போது பியாரேஜான் 1970-ம் வருசத்துல கண்டுபிடித்ததுதான் முட்டை மிட்டாய். அவர் தயாரித்த இனிப்பில் முட்டை வாசனை வந்தது. எங்க அப்பா அதில் பல வாசனைப் பொருட்களைச் சேர்த்து முட்டை வாசனை இல்லாத மிட்டாயைத் தயாரித்தார். முதலில் எங்க சமுதாய மக்களோட வீட்டு விசேஷங்கள்ல ஒரு இனிப்பா இதைக் கொடுத்துட்டு இருந்தோம். அப்புறம் அனைத்து சமூக மக்களின் திருமணங்களுக்காக முட்டை மிட்டாயை தயாரிக்கத் தொடங்கினார். அவருக்கு அப்புறமா இந்தக் கடையை நான் நடத்திவருகிறேன் என்றார்.
திகட்டாத சுவையின் ரகசியத்தை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள் என்று மனது சொன்னாலும், “எப்படி இதைத் தயாரிக்கிறீர்கள்?” என்று கேட்டு வைத்தோம்.
“இந்த மிட்டாய்ல ரசாயனக் கலப்பு எதுவும் கிடையாது. பாலைக் காய்ச்சி கோவா போலத் தயாரித்து, அதோட முட்டையைச் சேர்த்து கலந்து நெய், சர்க்கரை, இயற்கை வாசனைப் பொருட்களைச் சேர்த்து மிட்டாயைத் தயாரிக்கிறோம். கேக் போல இருந்தாலும் இதில் மைதா மாவைச் சேர்க்க மாட்டோம். எங்களைப் போல பல பேர் முட்டை மிட்டாய் தயாரிப்பில் இறங்கியிருக்காங்க. அவற்றில் முட்டை வாசனை அடிக்கும். எங்க மிட்டாயில் முட்டை வாசனை இருக்காது. எங்க மிட்டாய் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
பல ஊர்களிலிருந்து மிட்டாயை வாங்கிச் செல்கிறார்கள். வெளிநாட்டுக்கும் மிட்டாயை அனுப்பி வைக்கிறோம். ஆன்லைன் விற்பனையை இப்போது தொடங்கியிருக்கோம். எங்களுக்கு எதிரா போட்டியாளர்கள் வந்திருப்பதால் காப்புரிமையும், டிரேட் மார்க்கும் கேட்டு விண்ணப்பிச்சுருக்கோம்'' என்கிறார் சையது உஸ்மான்.
இந்த மிட்டாயை கிலோ ரூ.240-க்கு விற்கிறார்கள். இதில் கொழுப்புச் சத்து குறைவு. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது என்பதுதான் சுவையின் ரகசியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago