வீட்டுக்கு வெளியே கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், வீட்டுக் கண்ணாடியில் பந்தடித்ததும் மேலிருந்து எட்டிப்பார்க்கும் இடமாக அது காட்டப்படுகிறது. இன்னும் சில விளம்பரங்களில் அடுத்தடுத்த வீட்டுப் பெண்கள் ஊர் கதை பேசுவதற்கு உகந்த இடமாகவும், துணி காயப் போடும் இடமாகவும் காட்டப்படும் பால்கனிகளுக்கும் நமக்கும் ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு.
பால்கனியிலும் பாரம்பரியம்
“அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' என்கிற கம்பராமாயண வரிகள், ராமன் வில் உடைத்த செய்தியையும், அதை சீதை பார்த்ததையும் மட்டும் சொல்லவில்லை. அவள் நின்றதொரு உப்பரிகை என்பதையும், நமது கட்டிடக் கலையில் பால்கனி வைத்துக் கட்டும் பாரம்பரியம் இருந்ததையும் உணர்த்துகின்றன அந்த வரிகள். இது மட்டுமா? அழகிய வேலைப்பாடுகளும், காற்றோட்டத்துக்கு ஏதுவாக இடைவெளிகள் நிறைந்த சுவர்களும் வைத்து நமது முன்னோர்கள் கட்டிய பால்கனிகளைக் காட்டும் கண்ணாடிகளாக இலக்கியங்கள் இருக்கின்றன.
காலத்திற்கேற்ற பால்கனிகள்
தற்போது பழைய சிமெண்ட் சுவர்களில் சிறப்பான மர வேலைப்பாடுகள் அமைந்த தடுப்புகளைப் பால்கனிகளாகப் பார்க்க முடிவதில்லை. அனைத்திலும் நவீனத்தையும் நாகரீகத்தையும் விரும்பும் இந்தத் தலைமுறையில், பால்கனிகள் எல்லாம் கிரில் ரெய்லிங்குகளாகவே காட்சியளிக்கின்றன. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கிரில் ரெய்லிங்குகள் காண்போரின் விழிகளை விரிய வைப்பதுடன், பால்கனியின் மொத்த அழகுக்கும் அதுவே காரணம் என்கிற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்கின்றன. நீள, அகலங்கள், அமைப்பு, வடிவம் உள்ளிட்டவற்றில் வேறுபடும் இந்தப் பால்கனி கிரில் ரெய்லிங்குகள்தான் வீட்டின் வெளிப்புற அழகைக் கூட்டிக் காட்டுவதில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
பொதுவாகப் பால்கனிகளுக்கான கிரில் ரெய்லிங்குகள், வார்ப்பு இரும்பு, எஃகு, அலுமினியம் அல்லது தாமிரம் போன்ற மெட்டல்களால் உருவாக்கப்படுகின்றன. இரும்பாலான பால்கனிகளால்தான் பாரம்பரியம் மிக்க கலை அம்சத்தைத் தர முடியும் என்னும் நிலையிருந்தாலும், நவீன நாகரீகத்தின் அத்தனை அம்சங்களும் கொண்ட அட்டகாசமான பால்கனிகள் அமைக்க அலுமினியக் கிரில் ரெய்லிங்குகள் ஏற்றதாகவே கருதப்படுகிறது. வசதியைப் பொறுத்து முழுக்க முழுக்க ஸ்டீலினாலான ரெய்லிங்குகளும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் வெளிப்புறத்தைப் பார்த்து அமைக்கப்படும் பால்கனிகளில் தாமிரம், பித்தளை போன்ற உலோகங்களைத் தவிர்ப்பதும், உட்புறம் அமையும் பால்கனிகளில் இரும்பினைத் தவிர்ப்பதும் நல்லது.
பொய்ப் பால்கனிகள்
இவற்றில் மாயா பால்கனிகள் என்பது, வீட்டு ஜன்னலுக்கு வெளியே சில “இன்ச்' அளவிற்குக் கிரில்களை வைத்துப் பால்கனி போல் அமைக்கப்படுகின்றன. இவை வீட்டின் அழகை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படும், இதை அதிகபட்சம் ஒரு சர்வீஸ் பிளாட்ஃபார்ம் போல மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக, பொய்ப் பால்கனிகள். இவை ஜன்னல்களை விட்டுக் கொஞ்சம் அகலமாகப் பால்கனிகள் போலவே அமைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பால்கனிகளைப் போலப் பயன்படுத்த முடியாது. பார்க்கப் பால்கனிகள் போலத் தோற்றமளிப்பதால் இவற்றைப் பொய்ப் பால்கனிகள் என்கிறோம்.
நிஜப் பால்கனிகள், நாம் புழங்குவதற்காக, வீட்டிற்கு வெளியே நீட்டிவிடப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இதற்குத் தடுப்பு அரணாக மூன்றடி வரை ரெய்லிங்குகள் அமைப்பர். வீட்டின் வடிவமைப்பில் பால்கனிகள் முக்கிய அங்கமாக இருக்கின்றன. பல விதமாகவும், அழகிய தோற்றத்துடனும் அமைக்கப்படும் பால்கனிகள் வீட்டின் அழகை மேலும் மெருகேற்றிக் காட்டும். வீட்டுக்குள் இருந்தபடியே வெளியிலிருக்கும் அழகுகளைக் கண்டுகளிப்பதும், இயற்கையான காற்றை அனுபவிப்பதும் பால்கனிகள் இருந்தால்தான் சாத்தியம். உங்கள் வீட்டுப் பால்கனியை உருவாக்கும் முன் தீர்மானிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன.
பால்கனித் தோட்டங்கள்
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளோர், பால்கனிகளிலேயே செடிகளை வைத்துப் பராமரித்து அதை சிறு வீட்டுத் தோட்டமாக மாற்றலாம். அதில் கொடிகளைப் படர விட்டு அழகிய தொங்கும் தோட்டங்களாக்கவும் முடியும். இது தவிர நல்ல வெளிச்சம் மற்றும் காற்று இரண்டையும் இல்லத்துக்குள் இழுத்துவரும் வாயிலாகவும் பால்கனிகள் இருக்கின்றன. நீளமான விஸ்தாரமான பால்கனிகள் இருந்தால் மட்டுமே இதுமாதிரி செய்வது சாத்தியப்படும். தற்போது நகரத்து வீடுகளில், இங்கு விற்கும் நில மதிப்பைப் பார்த்தால் அது சாத்தியமா என்கிற சந்தேகமும் எழுகிறது. சிறிய அளவிலான பால்கனிகளை எதிர்பார்ப்பது சிரமம்.
முன்பெல்லாம் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடவும், முதியவர்கள் ஓய்வெடுக்கவும், புத்தகங்கள் படிப்பது, தம்பதியர், காற்றாட அமர்ந்து குடும்ப விசயங்களைப் பகிர்ந்து கொள்ள எனப் பல வித உபயோகங்களுக்கும் பயன்பட்ட இந்தப் பால்கனிகள், இப்போது சுருங்கித் தொட்டிச் செடிக்கான தொட்டிலாகிப் போனது. இடத்தின் அருமை கருதி, ஒரு சில சதுர அடிக்குள் பால்கனிகள் அமைக்கும் அதிசயங்களும் இங்கு நடப்பதுண்டு. பால்கனிக்காக ஒதுக்கும் இடத்தை நீடித்து அதை டைனிங் ஹாலாகவோ, படிக்கும் அறையாகவோ மாற்ற நினைப்பது இன்றையக் காலத்தின் தேவையாகிப் போனது.
வீட்டின் அழகு என்பது காம்பவுண்ட், கதவு, ஜன்னல் என்பதில் இருந்து மட்டும் தொடங்குவதில்லை. விசாலமான பால்கனிகள், அதன் அழகிய ரெயிலிங் வேலைப்பாடுகள் இதிலிருந்தும் தொடங்குகிறது என்பதை உணர வேண்டிய நேரம் இது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago