வேலையற்றவனின் டைரி 22 - இளமை எனும் வாடகை சைக்கிள்

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

சமீபத்தில், என் நண்பன் ஒருவனுடன் நீண்ட நேரம் என் இளமைக் காலம் பற்றி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்தவுடன், “எப்படியோ பேசி, பேசி என்னோட தொண்ணூறு சதவீத வாழ்க்கையைத் தெரிஞ்சுகிட்ட” என்றேன். அதற்கு அவன், “இருபத்தஞ்சு வயசு வரைக்கும்தான சொல்லியிருக்க. அதெப்படி தொண்ணூறு சதவீத வாழ்க்கை ஆகும்?” என்றான். நான், “அதுக்குப் பிறகு என்ன இருக்கு? நல்லபடியா வேலை, குடும்பம்னு செட்டிலான பிறகு, வாழ்க்கைல பெருசா சொல்ல ஒண்ணுமில்லல்ல?” என்றேன். சில வினாடிகள் விழிகள் விரிய யோசித்தவன் பிறகு, “ஆமாம்ல்ல?” என்றான் புன்னகையுடன்.

ஏனெனில் நாளை காலை எழுந்து, இந்த ஆபீசுக்குப் போய், இவரைச் சந்திப்போம் என்று வாழ்வது வாழ்க்கை அல்ல. நாளை காலை எழுந்து, எங்கு சென்று, யாரைப் பார்த்து, என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழும் வாழ்க்கைதான் வாழ்க்கை. நமது இளமைக் கால வாழ்வு, எதிர்பாராமல் நிகழும் அடர்த்தியான சம்பவங்களால் நிறைந்து வழிவதால், அதற்கு இணையான வாழ்வை நீங்கள் பிற்காலத்தில் வாழவே முடியாது.

நான் சிறுவனாக இருந்தபோதே, இளைஞனாக ஆன பிறகு எப்படி வாழ வேண்டும் என்று பெரிய கனவுகளுடன் வாழ்ந்தவன். அந்தக் கனவுகளை என்னுள் விதைத்தவர், எனது அம்மாவின் அண்ணன் புருஷோத் மாமா. பள்ளி விடுமுறைக் காலங்களில், தஞ்சாவூர் தாத்தா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம், புருஷோத் மாமாதான் என் கதாநாயகன். மாமா நன்கு உயரமாக, சிவ‌ப்பாக, அழகான இளைஞனாக, தஞ்சை மண்ணுக்கே உரிய கேலி, கிண்டலுடன் பேசும் விதம் அற்புதமாக இருக்கும்.

வெளியே கிளம்பும்போது, அவர் பவுடர் அடிப்பதைக் காண்பதே ஒரு சினிமாபோல இருக்கும். முதலில் இடது கையில் பவுடரைக் கொட்டிக்கொள்வார். பிறகு வலது கையின் ஐந்து விரல்களின் நுனிகளையும் ஒன்றாக குவித்து, அதில் பவுடரைத் தொட்டு, முகத்தில் தொட, பவுடர் ஐந்து வெள்ளைப் பொட்டுகள் போல் முகத்தில் விழும். முகம் முழுவதும் அந்த ஐந்து பவுடர் பொட்டுகளை இடுவார். பிறகு அந்தப் பொட்டுகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் துடைத்து, ஓவர் வெள்ளை, மிதமான வெள்ளையாக மாறும் கணம் அவ்வளவு நன்றாக இருக்கும். “ஏன் மாமா இப்படி பவுடர் அடிக்கிறீங்க?” என்று கேட்டால், “அப்பதான்டா பவுடர் சமமா முகத்துல எல்லா இடத்துலயும் இருக்கும்” என்பார்.

அடுத்து நேராக வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்வார். அங்கு பாதி கட்டப்பட்டு நிறுத்தியிருந்த ஒரு கட்டைச்சுவரில் அவர் அமர்ந்துகொள்ள, ஒவ்வொரு நண்பராக வந்து சேர்வார்கள். மாலை, இரவு என்று அங்கு எந்நேரமும் பேச்சும், சிரிப்பாக இருக்கும். நான் பெரியவனானதும், புருஷோத் மாமா போல பவுடர் அடித்துக்கொண்டு அந்த பிள்ளையார் கோயில் கட்டைச்சுவரில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும் என்பது, எனது பால்ய காலத்தின் பெரிய கனவுகளுள் ஒன்று.

ஆனால் துரதிருஷ்டவசமாக, என் வாலிபக் காலத்தில், அந்த பிள்ளையார் கோயில் கட்டைச்சுவர் இடிந்துவிட்டிருந்தது. நாங்கள் இரவுகளில், கணேசமூர்த்தி டாக்டர் க்ளினிக் வாசலில் அமர ஆரம்பித்தோம். அங்கு நானும், எனது இன்னொரு மாமா பையன் தீனாவும், என் தம்பிகளும், எதிர்வீட்டு கார்த்தியும், கோபியும் எத்தனையோ இரவுகள், எவ்வளவோ சிரித்துச் சிரித்துப் பேசியிருக்கிறோம். இன்றைக்கும் வார்க்காரத் தெரு காற்றை ஒரு ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்தால், அதில் அவ்வளவு அடர்த்தியாகக் கலந்திருக்கும் எங்கள் பேச்சையும், சிரிப்பையும் தனியே பிரித்தெடுத்துவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது.

தீனா, “இங்க பாரு…” என்பதை “இந்த்ரு” என்றுதான் உச்சரிப்பான். அவன், “இந்த்ரு…” என்று ஆரம்பித்து சிரிக்கச் சிரிக்கச் சொன்ன விஷயங்கள்தான் எத்தனை எத்தனை? விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று சொல்வார்கள் தெரியுமா? என் தம்பி தினகர் சிரிக்க ஆரம்பித்தால் நிஜமாலுமே விழுந்து விழுந்துதான் சிரிப்பான். ஒரு ஜோக்கடித்தால், என் மடியில் விழுந்து, தீனாவின் மடியில் விழுந்து, கோபியை எட்டி உதைத்துக்கொண்டு என்று பயங்கர வன்முறையுடன் சிரிப்பான். இத்துடன் இலவச இணைப்பாக, அருகில் இருப்பவர்களின் தோள்பட்டை, தொடை, முதுகு என்று பலமாக அடித்தபடியே சிரிப்பதில் அவனுக்குப் பெரும் காதல் உண்டு.

தீனா என்னிடம், “இந்த்ரு… உன் தம்பிய முதல்ல கட்டிப்போடு. எருமை கடா மாதிரி இருந்துகிட்டு, தோள்ல என்னா அடி அடிக்கிறான்? ஏ அப்பா… என்னமா வலிக்குது” என்று என்னிடம் புகார் செய்வான். நான், “டேய்… இனிமே கைய கட்டிகிட்டுச் சிரிடா” என்பேன். சில வினாடிகள் கையைக் கட்டிக்கொண்டு பவ்யமாகச் சிரித்துவிட்டு, பிறகு மீண்டும் சிரிக்கபடி அடிக்க ஆரம்பிக்க “சீ… புள்ளையா இது?” என்று தீனா ஓட, நாங்களும் தெறித்து ஓடுவோம்.

இரவு 12 மணிக்கு மேல், தீனாவின் நண்பர்கள் கணேசன், காளி, சுரேஷ் என்று பலரும் கவுரவ வேடம் போல எட்டிப் பார்ப்பார்கள். ஒவ்வொருவரும் பேசும் பத்து நிமிடப் பேச்சிலும், குறைந்தபட்சம் ஒரு சிறுகதைக்கு உத்தரவாதம் உண்டு. நடுவில் யாராவது சைக்கிளில் செல்ல, தீனா, “மைனரு…” என்று அழைத்து அவனை ஓரமாக ஒதுக்கி, ஒரே நேரத்தில் எப்படி சீனா மீதும், பாகிஸ்தான் மீதும் அட்டாக் பண்ணலாம் என்பது போல சீரியஸாகப் பேசிவிட்டு வருவான். மதிய நேரம் என்றால், வடவாற்றங்கரைக்குச் சென்று, அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்துவிடுவோம். அந்தச் சமயத்தில் நாங்கள், வாழ்நாள் முழுவதும், அதே இளமையுடன், அப்படியே வாழ்ந்துவிடுவோம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. எப்போதும் சிரித்துக்கொண்டேயிருக்கும் தினகர் இன்று குர்கானில், பின்லாந்துகாரனுக்குச் சம்பாதித்துத் தருவதற்காக, லேப்டாப்பிலும், மொபைலிலும் சப்பைளயர் கம்பெனிகளுடன் எந்நேரமும் சீரியஸாகப் பேசிக்கொண்டேயிருக்கிறான். கார்த்தி டெல்லியில் மத்திய அரசுப் பணியில், உணவுத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்துகொண்டிருக்கிறான். என் சின்னத்தம்பி முரளி திருச்சி வங்கிப் பணியில், கிராமம், கிராமமாகச் சுற்றி வராக்கடனை வசூலித்துக்கொண்டிருக்கிறான். கோபி சிதம்பரத்தில், நான் சென்னையில், தீனா மட்டும் மின்பணி ஒப்பந்ததாரராகத் தஞ்சையில்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை, தீனா வீட்டு விஷேசத்திற்காக தஞ்சாவூர் சென்றிருந்தேன். தீனாவும், நானும், கோபியும் கைகளைப் பிடித்தபடி பேசியபோது, அந்தக் கைகளின் இறுக்கத்தில் அன்றிருந்த அதே நட்பை உணர முடிந்தது. விசேஷத்திற்கு வந்திருந்த புருஷோத் மாமாவிடம், “மாமா… யாரு உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரண்டு?” என்றேன்.

“எல்லாரும் க்ளோஸ்தான். அப்ப நான் வாடகைக் கடைல இருக்கிற சைக்கிள் மாதிரிடா. யார் வேண்டும்ன்னாலும், எப்ப வேணும்ன்னாலும் வந்து, ஸ்டாண்ட்ல இருந்து சைக்கிள எடுத்துட்டுப் போயிடலாம்” என்று அழகாகக் கூறினார். எவ்வளவு அற்புதமான உவமை அது. இளமைக் காலத்தில் நாம் ஒரு வாடகைக் கடை சைக்கிள் போலத்தான் இருந்தோம். சுயநலங்கள், வறட்டு கவுரவங்கள், பொறாமைகள், ஜாதி, மத அந்தஸ்து வேறுபாடுகள் என்றெல்லாம் எதுவும் இல்லாமல், ஒரு வாடகைக் கடை சைக்கிள் போல எல்லோரையும் ஏற்றிக்கொண்டுதான் திரிந்தோம். பிறகு அவரவர் வாழ்க்கை, அவரவர் குடும்பம் என்று எங்கெங்கோ சிதறிவிடுகிறோம்.

பேச்சும், சிரிப்புமாய்த் திரிந்த எங்கள் இளமைக் காலத்தின் இரவுகளை, எந்த சூறைக் காற்று, எப்போது, எங்கே, ஏன் அடித்துக்கொண்டு போனது? ஒன்பது குழி கோலிகுண்டு விளையாட்டில், “லாக்குடா அது” என்று தீனா மோத்தா குண்டால் அடித்துச் சிதறடித்த சிறிய கோலிகுண்டு, இப்போது பூமிக்கடியில் என்னவாக மாறியிருக்கும்? விடிய விடிய நாங்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தெரு முனை விளக்குகளை யார் அணைத்தார்கள்? ஏன் கடவுளே… இவ்வளவு இரக்கமில்லாமல், இவ்வளவு சீக்கிரமாக எங்களின் இளமைக் காலத்தைப் பறித்துக்கொண்டாய்?

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்