ஒலிம்பிக் வாசிப்பு: நாம் ஏன் விளையாட்டைத் துறந்தோம்?

By ந.வினோத் குமார்

இந்த இதழ் அச்சுக்குப் போகிற வரையில், ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. 118 இந்திய விளையாட்டு வீரர்களில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர்கூட ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாத அளவுக்குச் சூழல் இருக்கிறதென்றால், அது நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம். இல்லையா?

தகுதி, திறமை, ஆர்வம் போன்ற விஷயங்கள் இருந்தும் ஏன் ஒரு விளையாட்டு வீரரால் சிறந்த முறையில் பரிணமிக்க முடிவதில்லை? பயிற்சி, டயட், ஸ்பான்சர்ஷிப் போன்ற சிக்கல்கள்கூட நாம் எளிதில் கையாண்டு விடக் கூடியவையே. இருந்தும், நம்மால் ஏன் இன்னொரு தயான் சந்த் போன்ற ஹாக்கி வீரரையோ அல்லது இன்னொரு ‘கிரேட்' காமா போன்ற மல்யுத்த வீரரையோ நம்மால் உருவாக்க முடியவில்லை?

இந்தக் காரணங்களை அலச முதலில் நமக்கு இந்தியாவில், விளையாட்டுகளுக்கான இடம் ஆரம்ப காலத்திலிருந்து எப்படி இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வரலாற்றைச் சொல்கிறது ‘நேஷன் அட் ப்ளே: எ ஹிஸ்டரி ஆஃப் ஸ்போர்ட் இன் இந்தியா' எனும் புத்தகம். பத்திரிகையாளரும் ஆய்வாளருமான ரொனோஜோய் சென் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். பெங்குவின் பதிப்பக வெளியீடாகக் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது இது.

இந்திய வரலாற்றில் விளையாட்டுக்கு நாம் எந்த இடத்தைக் கொடுத்துள்ளோம், இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், சரியான புரவலர்கள் கிடைக்காமல் எந்தெந்த விளையாட்டு எப்படியெல்லாம் வளர முடியாமல் திணறியது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் அலசும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், கிரிக்கெட்டுக்கு எப்படி இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது என்பதை மிக விரிவாகவே விளக்குகிறார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி என்பது கல்கத்தாவிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவின் விளையாட்டு வரலாறும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. ஏனென்றால், அங்குதான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் ‘கிரிக்கெட் கிளப்' தோன்றியது. அங்குதான் முதல் கால்பந்தாட்டச் சங்கமும் தோன்றியது. அங்குதான் முதல் ‘கால்ஃப் கிளப்'பும் தோன்றியது. ‘ஆங்கிலேயர்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தன் நாட்டின் விளையாட்டையும் சேர்த்தே கொண்டு செல்கிறார்கள்' என்று கூறப்படுவதற்கு ஏற்ப மேற்கண்ட விளையாட்டுக்கள் ஆங்கிலேயே காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியா வந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டன.

அப்படியென்றால் அதற்கு முன்பு இந்தியாவில் விளையாட்டுக்களே இருக்கவில்லையா என்றால் இருந்தது என்பதுதான் பதில். பகடையாட்டம், சதுரங்கம் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் தவிர, ‘போலோ' எனப்படும் குதிரை மீதிருந்து ஆடப்படும் விளையாட்டு, கபடி, மல்யுத்தம், வில்வித்தை போன்ற உடல் வலிமை சார்ந்த விளையாட்டுகள் முகலாயர் காலத்திலிருந்து நம்மிடையே இருந்துள்ளன.

எனினும், அன்றைய சமஸ்தான மன்னர்கள் கிரிக்கெட் போன்ற ‘ஜென்டில்மேன்' விளையாட்டுக் களிலேயே ஆர்வம் செலுத்திவந்தனர். அதன் தொடர்ச்சிதான் இன்றும் இங்கு கிரிக்கெட்டுக்கு மட்டும் அதீத கவனம் வழங்கப்படுகிறது. அந்த விளையாட்டு தொடர்ந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட் வீரர்களுக்கு அப்போதெல்லாம் ‘ஒயிட் காலர்' வேலை கிடைத்துவந்ததுதான்! கால்பந்து, ஹாக்கி போன்ற வீரர்களுக்கு எடுபிடி வேலைகள்தான் கிடைத்து வந்தன.

இந்தியாவின் பருவநிலைக்கு ஏற்றவாறு ஆங்கிலேயே அதிகாரிகள், வீரர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அவர்கள் விளையாட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அதற்காகவே, கால்பந்து, போலோ போன்ற விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அன்றைக்கு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளும் விளையாட்டைக் கற்றுத்தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு கிரிக்கெட்டை மட்டுமே வளர்த்தெடுத்தன.

‘நீங்கள் பகவத் கீதையைப் படிப்பதை விட, கால்பந்து விளையாடி னால், நீங்கள் சொர்க்கத்துக்கு அருகில் செல்ல முடியும்' என்று சொன்ன விவேகானந்தர்கூடக் கால்பந்து விளையாடவில்லை. அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராகத்தான் இருந்தார்.

இதே நிலையை நாம் காந்தியிடமும் காணலாம். ‘காந்தி அந்தக் காலத்திலேயே கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்' என்று கதை விடுபவர்கள் உண்டு. உண்மை என்னவென்றால், அவர் கிரிக்கெட் விளையாடியதே இல்லை என்பதுதான். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த சமயம், ‘பாஸ்ஸிவ் ரெஸிஸ்டர்ஸ் சாக்கர் க்ளப்' என்ற பெயரில் டர்பன், ஜோஹன்னஸ்பர்க் மற்றும் ப்ரெடோரியா ஆகிய மூன்று நகரங்களில் கால்பந்து குழுக்கள் ஆரம்பித்து, நிர்வாகி என்ற அளவில் அவற்றுக்கு உதவிவந்தார்.

அதன் அடிப்படையில், 1932-ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணிக்கு நிதி உதவி அளிக்கும்படி சிலர் காந்தியிடம் கேட்டபோது, அதற்கு அவர் தந்த பதில்: “எனக்கு ஹாக்கி என்றால் என்னவென்றே தெரியாது. அதையெல்லாம் பார்ப்பதற்கு மக்களுக்கு ஆர்வம் இருக்குமா என்றும் எனக்குத் தெரியாது. அப்படி ஒரு விளையாட்டை இங்கிலாந்திலோ தென்னாப்பிரிக்காவிலோ அல்லது இந்தியாவிலோ நான் பார்த்ததாகக் கூட எனக்கு நினைவில்லை”.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பங்கேற்ற 1952-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், தனிநபர் போட்டியில் முதல் பதக்கம் வென்றவர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ். இவர் ஒரு மல்யுத்த வீரர். இவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக, இவர் படித்த கல்லூரியின் முதல்வர் தன் வீட்டை அடமானம் வைத்து ஜாதவைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார். விளையாட்டுக்காக இப்படி ஒரு தியாகத்தைச் செய்யத் துணிந்த ஆசிரியர்களைக் கொண்ட நாடு இது. அப்படியான தேசத்தில் இன்று, பள்ளிகளில் ‘பி.டி.' பீரியட்களில் கூட, கணக்குப் பாடத்துக்கும், அறிவியல் பாடத்துக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்ற நிலையில், நாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதற்கு ஆசைப்படுவதற்கெல்லாம் நமக்குத் தகுதியில்லை!





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்