இனிய வெ(ற்)றி!

By ந.வினோத் குமார்

விளையாட்டில் வெற்றி பெறுவது ஒவ்வொரு வீரருக்கும் கனவு. ஆனால் மிகச் சிறந்த வீரர்களுக்கு, அந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதுதான் லட்சியம். ஒரு முறை வெற்றி பெறுவது அதிர்ஷ்டவசமானது. அடுத்தடுத்து வெற்றி பெறுவது, உழைப்புக்கான அங்கீகாரம்.

அந்த அங்கீகாரம் கடந்த வாரம் இரண்டு விளையாட்டு வீரர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருவர் இந்தியர், இன்னொருவர் வெளிநாட்டவர். ஒருவர் பெண், இன்னொருவர் ஆண். ஒருவர் வயதில் குறைந்தவர், இன்னொருவர் வயதில் மூத்தவர். ஒருவர் பேட்மின்டன் போட்டியில் பந்தைப் பறக்க விடுகிறார், இன்னொருவர் டென்னிஸ் போட்டியில் பந்தை இடியாக எதிராளியிடம் திருப்புகிறார். பி.வி.சிந்துதான் அந்த ‘இறகு’, ரோஜர் ஃபெடரர்தான் அந்த ‘இடி’. இருவருக்குமே பல முக்கியமானப் போட்டிகளில் தங்களைத் தோற்கடித்த எதிர்ப் போட்டியாளர்கள்தான் எதிராளிகள். ஜென்ம சனி!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தன்னைத் தோற்கடித்த கரோலினா மரினை சிந்துவும், கடந்த காலங்களில் தன்னைத் தோற்கடித்த ரஃபேல் நடாலை ஃபெடரரும் சமீபமாக நடந்து முடிந்திருக்கும் சில போட்டிகளில் ‘வைத்து செய்திருக்கிறார்கள்’.

சிந்துவின் இரண்டாவது வெற்றி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மரினிடம் தங்கத்தைப் பறிகொடுத்த சோகம் சிந்துவின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்வதற்கும், வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கும் வேறுபாடு உண்டு. தனது எதிராளியைத் தோற்கடித்துப் பெறுவது வெண்கலப் பதக்கம். ஆனால் தனது எதிராளியிடம் தோற்றுப் பெறுவது வெள்ளிப் பதக்கம்.

எனவே, சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றாலும், அவரின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, விளையாட்டுப் பிரியர்களின் மத்தியிலும் அதிருப்தி நிலவி வந்தது. ஒலிம்பிக்கில் சிந்து, இறுதிப் போட்டி வரை வந்ததுகூட ஏதோ அதிர்ஷ்டவசமானது என்பதுபோலத்தான் பலரும் பார்த்தார்கள்.

இந்தச் சந்தேகத்தைத் துடைத்தெறிய வேண்டிய நிர்பந்தம் சிந்துவை தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்த நிர்பந்தத்தைப் போக்கும் முதல் படியாக, கடந்த ஆண்டு டிசம்பரில் துபாயில் நடைபெற்ற ‘துபாய் வேர்ல்ட் சூப்பர்சீரிஸ்’ போட்டியில் கரோலினா மரினாவைத் தோற்கடித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற ‘இந்தியா ஓப்பன் சூப்பர்சீரிஸ்’ போட்டியில், மரினுக்கு இரண்டாவது முறையாகத் தோல்வியைப் பரிசளித்திருக்கிறார் சிந்து. இது சாதாரண செய்தி அல்ல. ஒலிம்பிக் தங்கப் பதக்க வீராங்கனையை எதிர்த்து அடுத்தடுத்து இரண்டு தொடர் வெற்றிகள் பெறுவது ஒரு சாதனை என்றால், உலக அளவில் முதலிடத்தில் உள்ள வீராங்கனையைத் தோற்கடித்து ‘டைட்டில்’ வென்றிருக்கும் முதல் இந்திய பேட்மின்டன் வீரர் என்பது இன்னொரு சாதனை!

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது அதிர்ஷ்ட வசமானது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்கூட, அடுத்தடுத்த போட்டிகளில் ஒருவர் பெறும் வெற்றிகளே, அவரைச் சிறந்த வீரராக உலகின் முன்பு நிறுத்தும். அந்த ‘கன்ஸிஸ்டென்ஸி’ சிந்துவிடம் உண்டு. அப்படிப் பார்த்தால் அவர் ஒரு சிறந்த வீரர். எனில், அவர் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல அநேக சாத்தியங்கள் உண்டு.

ஃபெடரரின் மூன்றாவது வெற்றி

பெரும்பாலான இந்தியர்களுக்கு 'பாகிஸ்தான்' என்றால் கிரிக்கெட் ஞாபகம் வருவதைப் போல, பெரும்பாலான விளையாட்டுப் பிரியர்களுக்கு டென்னிஸ் என்றால் ‘ரோஜர் ஃபெடரர் - ரஃபேல் நடால்’ இணைதான் நினைவுக்கு வரும். இந்த இருவர் மோதும் போட்டிகள், சிறந்த விளையாட்டுக்கான இலக்கணத்தை வகுப்பவை. அதிலும், ஃபெடரரின் விளையாட்டு, ‘டாப் நாட்ச்’.

ஆஸ்திரேலிய ஓப்பன், இண்டியன் வெல்ஸ் ஆகிய போட்டிகளில் ரஃபேலைத் தோற்கடித்த ஃபெடரர், கடந்த வாரம் நடைபெற்ற மியாமி ஓப்பன் போட்டியிலும் ரஃபேலைத் தோற்கடித்துள்ளார். இந்த ஆண்டில் அவர் பதிவு செய்திருக்கும் மூன்றாவது வெற்றி இது.

நமக்கு இது சாதாரண வெற்றியாக இருக்கலாம். ஆனால் ஃபெடரரின் ரசிகர்களுக்கு அப்படியல்ல. கடந்த 13 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் சளைக்காத போட்டியாளர்களாக வலம் வரும் இவர்கள், இதுவரை 37 போட்டிகளில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர். அதில் 23 முறை ரஃபேல் நடாலும், 14 முறை ரோஜர் ஃபெடரரும் வென்றுள்ளனர்.

35 வயதில் தன்னைவிட ஐந்து வயது குறைவான ஒரு வீரரைத் தோற்கடித்து, புல் தரை, களிமண் தரை, கடினத் தரை என அனைத்து வகையான மைதானங்களிலும் வெற்றி வாகை சூடி ‘கிங் ஆஃப் ஆல் கோர்ட்ஸ்’ என்று பெயரெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!

வெற்றிகளின் ஒற்றுமை

மேற்கண்ட இருவரின் வெற்றிகளுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று... ‘கன்ஸிஸ்டென்ஸி!’.

‘அதான், கரோலினா மரினையே தோற்கடித்துவிட்டோமே’ என்று சிந்துவும், ‘அடுத்தடுத்து நடாலைத் தோற்கடித்து விட்டோமே’ என்று ஃபெடரரும் நினைத்து திருப்தி அடைந்துவிடவில்லை. தொடர்ந்து வரும் போட்டிகளிலும் தங்களின் திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

சாய்னா நேவாலோ, கரோலினா மரினோ... ‘இவர் நம் நாட்டுக்காரர்தானே’ என்ற அலட்சியமோ அல்லது ‘அவர் பயங்கரமாக விளையாடுவாரோ’ என்ற சந்தேகமோ இல்லாமல், இருவரையும் சமமாகப் பாவித்து விளையாடுகிறார் சிந்து. அதேபோல, தர வரிசைப் பட்டியலில் 16-ம் இடத்தில் இருக்கும் நிக் கிர்கியோஸையும், 5-ம் இடத்தில் இருக்கும் நடாலையும் சமமாகக் கருதித்தான் ஃபெடரர் விளையாடுகிறார். பெரும்பாலான வீரர்களுக்கு, தங்களின் எதிராளிகளைச் சமமாகப் பாவிக்கத் தெரியாததால்தான் அவர்களால் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிவதில்லை. சிந்துவிடமும் ஃபெடரரிடமும் தெரியும் இன்னொரு ஒற்றுமை... இருவருமே நல்ல ‘பேக்ஹேண்ட்’ திறன் கொண்டவர்கள்.

ரஃபேல் தனது ‘கோர்ட்’டை ஓடி ஓடி ‘கவர்’ செய்வதில் தனது பெரும்பாண்மையான சக்தியை விரயம் செய்கிறார். ஆனால் ஃபெடரரோ, முடிந்த அளவுக்குத் தனது சக்தியைச் சேமிக்கத் திட்டமிடுகிறார். அதனால் அவர் விளையாடும் முறைகளில் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக, ‘பேக்ஹேண்ட் ஷாட்ஸ்’. டென்னிஸில், ‘மிக அழகான ஆனால் வலிமை போதாத ‘ஒன் ஹேண்டட் பேக்ஹேண்ட்’ திறன் கொண்டவர்’ என்று ஃபெடரர் புகழப்படுவது உண்டு. எனவே, அதில் தனது திறனைக் கூட்டியிருக்கிறார் ஃபெடரர். அதுதான், ரஃபேல் மூன்று முறை அவரிடம் தோற்றதற்குக் காரணம் என்கிறார்கள் சில டென்னிஸ் நிபுணர்கள்.

கடந்த வாரம் நடந்த போட்டியில் சிந்து தனது பேக்ஹேண்ட் திறன் மூலம், மரினை நிறைய ஓட வைத்தார். அதனால் ‘நெட் ப்ளே’ செய்ய நினைத்த மரினின் கனவு தகர்ந்தது.

அனுபவங்களின் வித்தியாசம்

ஆனால் சிந்து, கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது, போட்டிகளைத் தேர்வு செய்து விளையாடுவது. அடுத்தடுத்து வரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல், மிக முக்கியமான போட்டிகளை மட்டும் தேர்வு செய்யப் பழக வேண்டும். ஒரு போட்டிக்கும் இன்னொரு போட்டிக்கும் இடையில் தேவையான அளவு ஓய்வை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளாமல் போனால், தோல்வியே மிஞ்சும்.

எனவேதான், ரோஜர் ஃபெடரர் அடுத்து இரண்டு மாதங்களுக்கு வேறு எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல், மே மாதத்தில் நடக்கவிருக்கும் பிரெஞ்சு ஓப்பன் போட்டிக்காகத் தயாராகி வருகிறார். ஆனால், சிந்துவோ, இந்தியா ஓப்பன் சூப்பர்சீரிஸ் போட்டி முடிந்தவுடனேயே, மலேசியாவில் நடக்கும் ஓப்பன் வேர்ல்ட் சூப்பர்சீரிஸ் ப்ரீமியர் போட்டியில் கலந்துகொண்டு முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவுகிறார். விரைவில் அந்தத் தோல்வியிலிருந்து மீள்வார் என்று நம்புவோம்.

மற்றபடி, இந்த ஆண்டு, சிந்துவும் ஃபெடரரும் தங்கள் எதிராளிகளுக்கு ‘ஸ்வீட் ரிவெஞ்ச்’சைப் பரிசளித்திருக்கிறார்கள் என்றுதான் பேட்மின்டன் மற்றும் டென்னிஸ் ரசிகர்கள் கருதுகிறார்கள். சாதனைகள் மீது வெறிகொண்ட அந்த இருவரின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்