ஆம் ஆத்மி கட்சியில் துவங்கி, அம்மியில் சட்னி அரைப்பது வரை அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. நமது பரந்துபட்ட அனுபவங்களுடன் நம் கற்பனைத் திறனும் கை கோக்கும்போது உருவாகிற பேச்சாற்றலுக்கு எல்லையே இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் பலரது பேச்சுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொல்லிச் சென்ற பாரதிக்கு மரியாதை செய்யும் நிமித்த மாவது "பயனில சொல்" பலவற்றைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாமா?
சரி, அந்தப் பேச்சுத்திறமையின் வீச்சைக் கொஞ்சம் பார்க்கலாமா? தன் கணவரின் அலுவலகத் தோழி குறித்து இயல்பாகச் சொல்லியிருப்பாள் ஒரு தோழி. அதை கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் என்னாவது? நாலைந்து முத்துக்களை உதிர்க்க வேண்டுமே. உடனே, ‘இப்படித்தான் நம்ம தேவியும் வெகுளியா சொன்னா. கடைசியில பார்த்தா அவ வீட்டுக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகிடுச்சாம். ரெண்டு புள்ளைகளோட இப்ப நிராதரவா இருக்கா’ என்று பொக்ரான் அணுகுண்டை போகிற போக்கில் சிலர் வீசுவார்கள். என்னது... தோழியின் நிம்மதியா? அதைப் பற்றி நமக்கென்ன கவலை?
வினையாகும் விசாரிப்பு
நண்பர் ஒருவர் சர்க்கரையாலோ வேறு சில உடல் சிக்கல்களாலோ மெலிந்திருக்கலாம். வழியில் பார்ப்பவரை வம்படியாக நிறுத்திவைத்து, ‘என்னப்பா இப்படி துரும்பா இளைச்சுட்டே. நல்ல டாக்டரா பாருப்பா. பெரிய வியாதியெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்’ என்று சொல்லி அடுத்த நாளே அவருக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொடுத்து விடுகிறவர்களும் உண்டு. அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பேச்சுடன் தரப்படும் இலவச இணைப்பு.
ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகுகூட, அவரை அப்படியே விட்டுவிடலாமா? கையில் நாலு சாத்துக்குடியுடன் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு, ‘என்னதான் ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம்தான் தாங்குமாம். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் சொன்னார்’ என்று அவருக்குத் தேதி குறித்துவிட்டு வருவதில்தான் சிலருக்கு என்னவொரு பேரானந்தம்.
அவதிப்படுத்தும் அனுபவப்பாடம்
கல்லூரிக்குச் செல்லும் மகளை வழியனுப்பிவிட்டு அப்போதுதான் உட்கார்ந்திருப்பார் அந்த அம்மா. அவரை சும்மா இருக்கவிடலாமா? உடனே பிரம்மாஸ்திரத்தை எய்துவிடுவோம். ‘இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களைக்கூட நம்பிடலாம். இந்தப் பொண்ணுங்களைதான் நம்ப முடியறது இல்லை. என் நாத்தனார் பொண்ணும் இப்படித்தான் ஊமைக் கத்தாழை மாதிரி இருப்பா. திடீர்னு போன வாரம் நான் ஒருத்தனைக் காதலிக்கறேன்னு வந்து நிக்கறா. என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?’என்று திரியைக் கிள்ளி வைப்போம். மகள் வீட்டுக்கு வந்ததும் அது டைம்பாமாக வெடிக்கலாம்.
திருவாய் மலரும் தருணம்
சாதாரண நாட்களில்தான் என்றில்லை. குடும்பமே கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பலரும் திருவாய் மலரத் தயங்குவதே இல்லை. குழந்தையைத் தொட்டிலில் போடுகிற நேரமாகப் பார்த்து, ‘ரெண்டாவதும் பொண்ணா போயிடுச்சே. பரவாயில்லை விடுங்க. கடைசி காலத்துல பொண்ணுங்கதான் நம்மளைக் காப்பாத்துவாங்க’ என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவார்கள். குழந்தையின் தாய் முகத்தில் தோன்றும் வருத்தமும் வேதனையும் அவர்களை ஏன் பாதிக்கப் போகிறது?
உறவினர் வீட்டுத் திருமண விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் தேடியிருந்தா நல்ல நிறமாவே பொண்ணு கிடைச்சிருக்கும். என்ன பண்றது? எல்லாம் காசு செய்யுற வேலை’என்று தங்கள் வயிற்றெரிச்சலுக்கு வடிகால் தேடிவிட்டு, பந்திக்கு முந்துவார்கள்.
இனிப்பும் கசப்பும்
வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர இனிப்புடன் வந்திருப்பான் ஒருவன். நம் அனுபவத்தை எல்லாம் அவன் தலையில் கொட்டுவதுதானே சிலரது சிறப்பியல்பு. ‘வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுடாதப்பா. அந்த சூப்பர்வைசர் ஒரு முசுடு. அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்டே வேலை பார்க்கறதுக்கு நாலு கழுதையை வாங்கி மேய்க்கலாம். உன் பக்கத்து சீட் ஆள்கிட்டே ரொம்ப கவனமா இருக்கணும்’ என்று அலுவலகத்தில் அவன் யாருடனும் பேசாத அளவுக்குச் செய்துவிடுவதில்தான் எத்தனை மனநிறைவு.
இதோடு முடிந்ததா என்றால் இல்லை. உலகையே ஆளத் துடித்த அலெக்ஸாண்டர் மாதிரி சிலரது பேச்சுத் திறமையும் பரந்துபட்டது. தெரிந்தவர் புதிதாக எதையாவது வாங்கிவிட்டால் போதும். உடனே சிலர் ஸ்க்ரூ டிரைவரும் வாயுமாகக் கிளம்பிவிடுவார்கள். ‘இந்த மாடல் ரொம்பப் பழசாச்சே. திரும்பக் குடுத்தா காயலான் கடைக்காரன்கூட வாங்க மாட்டான். போனவாரம்தான் குறைஞ்ச விலைக்கு புது மாடல், என் மச்சானுக்கு வாங்கிக் கொடுத்தேன். உங்களை நல்லா ஏமாத்திட்டான் சார்’ என்று சொல்லிவிட்டால் போதும். அந்தப் பொருள் பழுதடைந்து, முடங்கும் வரை அவரை நிம்மதியில்லாமல் அலையவிடலாம்.
கருத்து சொல்லும் கலை
இவை மட்டும் இல்லை குழந்தைப் பிறப்பில் தொடங்கி, எரிமேடை வரை எதைப் பற்றியாவது கருத்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். ஆனால் அவை நேர்மறையானவைதானா? நம் மனதின் ஏமாற்றங்களுக்கு மருந்து போடுவதாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை காயப்படுத்துகிறோம். அதை நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். காரணம் யோசிக்கவும் நேரமின்றி கருத்துச் சொல்லிக் களைத்துப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவரையும் கருத்துப் போராளியாக மாற்றி விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் எதை, எப்படி, யாரிடம் சொல்கிறோம் என்பதில்தான் நம் பேச்சின் பொருளே அடங்கியிருக்கிறது.
உற்சாகப்படுத்துவது நல்லது
இப்படி எல்லா இடங்களிலும் அடுத்தவரின் கவனத்தைக் கவரவோ, சிதைக்கவோ கருத்துச் சொல்கிற முனைப்பு ஏன் ஏற்படுகிறது? “அடுத்தவர் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் காட்டத் துடிக்கும் தன்முனைப்புதான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல நிபுணர் அசோகன்.
“இப்படி மாற்றுக் கருத்துச் சொல்கிறவர்களில் இரண்டு வகை உண்டு. எதையுமே எதிர்மறையாகப் பார்க்கும் குணம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். மற்றொரு வகையினர் தங்கள் வாழ்வின் தோல்விகளின் வெளிப்பாடாக இப்படிப் பேசலாம். தங்களுக்குக் கிடைக்காத கல்வி, படிப்பு, வேலை, வெற்றி இவற்றை எல்லாம் அடுத்தவர் அடையும்போது, அதைப் பார்க்கச் சகிக்காமல் இப்படிப் பேசலாம். தான் மட்டும் தோற்கும்போது, இவர்கள் எப்படி வெற்றி பெறலாம், இவர்களும் தோற்கட்டுமே என்ற நினைப்பு அவர்களை அப்படிப் பேசத் தூண்டும். தோற்றுப்போன மனதின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, வாழ்க்கையில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.
இவர்கள், அடுத்தவரின் உரையாடலைத் தள்ளி நின்று கேட்டாலே, இதுபோல கருத்துக்கள் சொல்வதில் இருந்து விடுபடலாம். தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் அடுத்தவர் பாதிக்கப்படுவார் என்று தெரிந்தால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஒரு எதிர்மறை வார்த்தைக்குப் பதிலாக ஆயிரம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அடுத்தவருக்கு உற்சாகமூட்டலாம். உறவுநிலைகளிலும், தொடர்புநிலைகளிலும் இணக்கத்துடன் இருந்தாலே போதும். கருத்துச் சொல்லும் மனநிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்று இந்த குணத்தைக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார் அசோகன்.
எதைச் சொல்வதாக இருந்தாலும், கேட்பவர் இடத்தில் நம்மை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டுத் தொடங்குவது உத்தமம். இடம், பொருள், ஏவல் என்னும் மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. அப்படியும் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும் எதிர்மறைக் கருத்துக்களையாவது தவிர்க்கலாமே. நாலு பேருக்குக் கருத்து சொல்வது மட்டுமல்ல, சொல்லாமல் இருப்பதும் சிலசமயம் நல்லதுதான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago