சொந்த வீடு சாத்தியமே!

By சக்திவேல் மயில்சாமி

யுக புருஷன் பாரதியே காணி நிலம் கேட்டு பராசக்தியை இறைஞ்சி நின்ற போது, சாதாரண மனிதர்களுக்குக் கேட்கவா வேண்டும்?

சொந்தமாய் வீடு என்ற கனவை நனவாக்குவதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன.

முதலாவது சிக்கல், தாறுமாறாக உயர்ந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. நீங்கள் 2005க்கு முன்பு வீட்டு மனை வாங்கியிருந்தால் நிச்சயம் கொடுத்து வைத்தவர்தான். அதன் மதிப்பு நீங்கள் கணக்குப் போட்டதைவிட பல மடங்கு உயர்ந்திருப்பதை எண்ணி உள்ளம் பூரிக்கலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள், வாங்க இயலாதவர்கள் இன்று வாங்க நினைத்தால், எவ்வளவு செலவிட வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

இரண்டாவது சிக்கல், மணல், ஜல்லி, சிமென்ட், கம்பி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையும், கட்டுமானப் பணியாளர்களின் கூலி. மழை பெய்தால் ஒரு விலை, டீசல் விலை ஏறினால் ஒரு விலை, சென்னையில் ஒரு விலை, கோவையில் ஒரு விலை என மணல் விலை ஒரு வட்டத்துக்குள் அடக்க முடியாதபடி இருக்கிறது. செங்கல்லின் கதையும் மணலுக்குச் சளைத்ததில்லை.

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும், எங்கு திரும்பினாலும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கண்ணைக் கட்டி இழுக்கின்றன. வீட்டு மனை வாங்கி, நாமே வீடுகட்ட நினைத்தால், நிமிடத்துக்கு நிமிடம் நிலைமை மாறுகிறது. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பிப் போகின்றனர்.

வீடுகட்டப் போடுகிற பட்ஜெட்டைவிட நிச்சயம் குறைந்தது நான்கைந்து லட்சங்களாவது கையைக் கடித்துவிடும். கச்சிதமான செலவில் வீடு கட்டுவது அல்லது சரியான விலையில் வீடு வாங்குவது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இந்தக் கேள்விக்குப் பதில் தருகிறார் சென்னை கட்டட பொறியாளர் சங்கத் தலைவர் வெங்கடாசலம்.

‘‘வீடோ, ஃபிளாட்டோ எதுவாக இருந்தாலும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் அவர்களுக்கே உரிய சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் குழப்பம் ஏற்படும். எனவே, சில அடிப்படை தொழில்நுட்ப வார்த்தைகளைத் தெரிந்து கொள்வோம்.

கார்பெட் ஏரியா:

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவு கார்பெட் ஏரியா எனப்படுகிறது. டைல்ஸ் பதிக்கும் அளவு என்றும் புரிந்து கொள்ளலாம்.

பிளின்த் ஏரியா:

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமனையும் சேர்த்துக் கொண்டால் அதுதான் பிளின்த் ஏரியா.

சூப்பர் பில்ட் அப் ஏரியா:

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்தப் பரப்புக்குத்தான் விலை சொல்வார்கள். பெரும்பாலும் பிளாட்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை பிளின்த் அளவுடன் சேர்த்து இந்த இடம் கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்:

பிரிக்கப்படாத மனைப்பகுதி என பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடம், சுருக்கமாக யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில், விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை யூ.டி.எஸ் குறிக்கிறது.

என்ன செலவாகும்?

ஒரு சதுர அடி பிளின்த் ஏரியா கட்ட சுமார் 1,500 ரூபாய் செலவாகும். சுற்றுச்சுவர் கட்ட சதுர அடிக்கு ரூ.750 முதல் ரூ. 1,500 வரை செலவாகும். செப்டிக் டேங்க் கான்கிரீட்டில் அமைக்க லிட்டருக்கு ரூ.14 செலவாகும். செங்கல்லில் அமைக்க ரூ.12 முதல் ரூ. 13 வரை செலவாகும். மேற்கூரைக்கு வெதரிங் கோர்ஸ் (சுருக்கித் தளம்) அமைக்க சதுர அடிக்கு ரூ. 120, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (ஓஎச்டி) லிட்டருக்கு ரூ.10 வரை செலவாகும். இதை அடிப்படையாகக் கொண்டு வீட்டின் திட்ட விலையை ஓரளவு துல்லியமாகக் கணக்கிடலாம்.

உதாரணமாக, சென்னை அம்பத்தூரில் ஃபிளாட் வாங்குவதாகக் கொள்வோம். அங்கு ஃபிளாட்டின் விலை சதுர அடி ரூ.4,000 என பில்டர் சொல்கிறார். வாங்கப்போகும் ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 800 சதுர அடி, உங்களுடைய யூடிஎஸ் 500 சதுர அடி என்றும் அவர் கூறுகிறார். உண்மையில் நம் கணக்குப்படி ஃபிளாட் விலை எவ்வளவு எனப் பார்க்கலாம்.

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என வைத்துக் கொள்வோம். கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ.1,500 என வைத்துக் கொண்டால், 800 சதுர அடிக்கான செலவு ரூ. 12 லட்சம். அதேபோல் 500 சதுர அடி மனைக்கான விலை ரூ. 7 லட்சம், மொத்தம் ரூ.19 லட்சம்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு சதுர அடிக்கான விலை சுமார் ரூ. 2,375 வருகிறது.

இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபம். அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி ரூ.2,850 வரை வைத்து விற்கலாம். அவர் அந்தத் திட்டத்துக்கு கடன் பெற்றிருந்தால் அதற்கான வட்டி, விளம்பரம் இத்யாதி, இத்யாதிகள் எல்லாம் சேர்த்து ரூ.3,000 வரை செல்லும். ஆக, அவர் சொன்ன விலைக்கும், உண்மையான விலைக்கும் இடையே சதுர அடிக்கு ரூ.1000 அதிகம். ஆகவே, கவனம்.

கட்டிய வீட்டை வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை..!

• தனி வீடுகளில் பிளின்த் ஏரியாவிலிருந்து கார்பெட் ஏரியா 20 முதல் 25 சதவீதம் குறைவாக இருக்கும். அதாவது பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால், கார்பெட் ஏரியா 750 முதல் 800 ச.அடி வரை இருக்கும்.

• ஃபிளாட் எனில், 600-650 சதுர அடிதான் இருக்கும்.



• பார்க்கிங் உள்ளிட்ட பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

• எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்ய வேண்டும்.



• கட்டி முடித்த ஃபிளாட் எனில், கார்பெட் ஏரியாவைத் துல்லியமாக அளந்து விடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அது நியாயமான அளவு. அதைவிட அதிகமானால் யோசிக்க வேண்டிய விஷயம். ஏன் அவ்வாறு அதிகரித்தது எனக் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம்.

• உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 35 சதவீதம் வரை இருக்கக் கூடும். ஆனால் அவை வசதி படைத்தவர்களுக்கான விஷயம்.

• அடுக்குமாடி குடியிருப்புகளில் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை வாங்கவே வேண்டாம்.

• பொதுப்பயன்பாட்டுக்கான இடத்தில், வேறு கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். .



• உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்றாலும் பணம் கொடுக்கத் தேவையில்லை.

• தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். நேர்மையான பில்டர் மண் பரிசோதனை செய்த பிறகே, அஸ்திவாரம் எவ்வளவு ஆழம் தோண்டவேண்டும் எனத் தீர்மானிப்பார்.

• வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்க வாய்ப்புண்டு!

சொந்தமாக வீடு கட்டும்போது, கவனிக்க வேண்டியவை

• செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள்.

கேட்டுப் பெற வேண்டிய வரைபடங்கள்

பவுண்டேஷன் டிராயிங், ஸ்டிரக்சுரல் டிராயிங், புளோர் பிளான், லிண்டன் டிராயிங், ரூஃப் டிராயிங், பிளம்பிங் டிராயிங், எலக்டிரிகல் டிராயிங், எலவேஷன் டிராயிங், பர்னிச்சர் லே-அவுட், வொர்க்கிங் பிளான், சம்ப் பிளான், செப்டிக் டேங்க் பிளான், படிக்கட்டு பிளான், சுற்றுச்சுவர் டிசைன் என எல்லா ஆவணங்களையும் கேட்டு வாங்கிச் சரி பாருங்கள்.

எல்லாம் சரிபார்த்து வாங்கினால், சொந்தவீடே சொர்க்கம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்