அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்த மின்னஞ்சல். இரண்டு காதல் முடிந்து, மூன்றாம் காதலில் விழுந்து தற்போது அதுவும் கசந்து எப்படி வெளியே வருவது என்று கேட்டு அனுப்பியிருந்தார் பள்ளி மாணவி ஒருவர். அவருக்கு வயது 14.
“முதல் காதல் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்தேன். பிரின்ஸிபல் வரை சென்றதால் அதைக் கைவிட்டேன். அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவனைத் துரத்தித் துரத்திக் காதலித்தேன். ஆனால் அவன் இன்னொரு மாணவியைக் காதலித்ததால் அதுவும் தோல்வியில் முடிந்தது. முதல் காதலின் வெறுமையை மறப்பதற்காக மீண்டும் யாரையாவது காதலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்போதுதான் ப்ளஸ் டூ மாணவனுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது.
அவன் ப்ரபோஸ் செய்தவுடன் நான் யோசித்தேன். நம் மீது யாராவது அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்களா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்த நேரம் அது. அதனால் ரொம்ப யோசிக்காமல் அந்தக் காதலுக்கு இசைந்தேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவன் என்னை உண்மையாகக் காதலிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். அவனை விட்டு விலகிவிடு என்று மனசு சொன்னாலும் அவன் காயப்படுவானே என்று நினைத்து என் மறுப்பையும் சொல்லத் தயங்கினேன். இதற்கிடையில் என் பெற்றோருக்கும் இது தெரியவர வீட்டில் பெரிய பிரச்சினை.
போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டார் அப்பா. இப்போது அவனிடம் உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். நீ என்னுடன் பழகித்தான் ஆக வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்துகிறான். நான் அவனுடன் மொபைலில் பேசியதை ரெக்கார்டு செய்து வைத்திருப்பதாகவும், நான் அவனைக் காதலிக்க மறுத்தால் அதை வெளியே ‘லீக்’ செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறான். என்னால் படிக்க முடியவில்லை. எப்போதும் பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. செத்துவிடலாமா என்றுகூடச் சில சமயம் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கிறார் அந்த 14 வயதுப் பெரிய மனுஷி!
ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…
எப்படி இருக்கிறது பாருங்கள் அந்தப் பள்ளி மாணவியின் பிரச்சினை. கவிஞர்களும் தத்துவ ஞானிகளும் இன்ன பிறரும் யுகாந்திரங்களாகக் காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நம் குழந்தைகள் (வேறெப்படிச் சொல்ல) சர் சர்ரென்று காதல் ராக்கெட்டுகளாக விட்டுத் தள்ளுகிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் பள்ளியில் உடன் படிக்கும் எதிர்ப் பாலினரை நமக்குப் பிடிக்கலாம். ஒருவரை மட்டும் ரொம்பவே பிடித்தும் போகலாம். ஆனால் வேறெதுவும் தோன்றாது. இருவருமே பருவம் எய்தாததால் உடல் ரீதியான காம இச்சை போன்றவையும் தோன்றாது. ஆனால் அந்த ஒருவர் மனசை என்னவோ செய்வார். பலருக்கு அந்த முதல் நேசமும் அழகான தோழமையும் எந்த வயதிலும் பசுமரத்தாணி போல நினைவில் இருக்கும். இதைத்தான் ‘ப்ளட்டோனிக் லவ்’ (Platonic love) என்பார்கள். காமமற்ற ஒரு பாச உணர்வு அது. உடல் தாகங்களுக்கு அங்கே இடம் இருக்காது.
பெற்றோருக்குத் தெரியுமா பிள்ளைகளின் காதல்?
ஆனால் நண்பர்களே, மேற்சொன்ன மாணவியின் கதை அப்படிப்பட்டதும் அல்ல. பல வீடுகளில் பெற்றோர் தங்கள் எந்திரமயமான வாழ்க்கை முறையில் குழந்தைகளை மறந்தேவிட்டனர். பெருநகர வாழ்க்கைக்கு நம் குழந்தைகளுடனான உணர்வுப் பிணைப்பை விலையாகக் கொடுத்துவிட்டோம். காசு பணத்தைத் தூக்கித் தூர வையுங்கள்.
அன்பு, பாசத்துக்காகக் குழந்தைகள் ஏங்குவதைக்கூடப் புரிந்துகொள்ள நேரமில்லை நம்மில் பலருக்கு. பதின் பருவத்துச் சூறாவளியில் நம் பிள்ளைகள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பலருக்குப் புரிவதில்லை. உடலாலும் உள்ளத்தாலும் வேறு ஒரு கட்டத்துக்குத் தள்ளப்படும் சிறார்களுக்குப் பலவிதங்களிலும் உங்கள் அரவணைப்பும் அனுசரணையும் தேவை. உங்களுக்குள் எழும் சண்டை சச்சரவுகள்கூட உங்கள் பிள்ளையின் மனநலனைப் பாதிக்கலாம். தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் இவர்கள் எங்கே நம்மைப் பாசமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று குழந்தைகள் நம்பிக்கையிழந்து போய்விடுகின்றனர்.
கத்தி மேல் நடப்பதைப் போன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்தப் பதின்ம வயதில் அவர்களுக்குப் பெற்றோராக, உற்ற நண்பராக, நல்ல ஆசானாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் எப்படி மறக்கலாம்? குழந்தையின் நிம்மதி, வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் பெற்றோர்களே!
இப்போது இந்த மாணவியின் சிக்கலுக்கு வருவோம். குழந்தையே, நீ செய்வதெல்லாம் காதல் அல்ல. அது ‘க்ரஷ்’ எனப்படும் இனக் கவர்ச்சிதான். வீட்டில் உனக்கு அன்பும் அக்கறையும் கிடைக்கவில்லை. அதை வெளியில் தேடியதால் வந்த விளைவு இது. காதல் பெரிய விஷயம். அதைச் சரியாக உச்சரிக்கும் வயதுகூட உனக்கு வரவில்லை. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருடன் ஏற்படுவதற்குப் பெயர் காதல் இல்லை. ஒருவருடன் குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பழக வேண்டும். உணர்வுப் பூர்வமான புரிதல்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எல்லாவற்றையும் கடக்க வேண்டும். அதன் பின்புதான் காதலைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்க வேண்டும்.
பிஞ்சு மனதில் நஞ்சு
காலம் போகப் போக காதல் ஆழமாகிக்கொண்டே வரும். காமம் சில மாதங்களிலேயே கசந்துவிடும். எப்படி வாதிட்டாலும் காதலைத் தீர்மானிக்கும் வயது உனக்கு இன்னும் வரவில்லை. படிப்புச் சுமையே மலையளவு இருக்கும்போது பாவம் காதல் சுமையையும் எப்படி நீ சுமப்பாய்? பதின் பருவத்தின் விளையாட்டுக்களில் ஒன்றுதான் காதல் என்று பலராலும் தவறாக அழைக்கப்படுகின்ற முதிர்ச்சியற்ற விசித்திர உணர்வு அது. அதிலிருந்து உடனே வெளியே வந்துவிடு.
உன் மீது அன்பு கொண்ட யாரும் உன்னை மிரட்ட மாட்டார்கள். ப்ளாக்மெயில் பண்ண மாட்டார்கள். பெற்றோரிடம் தவறு இருந்தால் அவர்களுடன் மனம் விட்டுப் பேசு. என்ன வேண்டும் உனக்கு என்பதை எடுத்துச்சொல். என்ன செய்வது? இப்போதெல்லாம் அன்பைக்கூடக் கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது. காதல் போதையில் மதிமயங்கிப் போனால் பொன்னான இளமை வீணாகி, படிப்பில் கோட்டைவிட்டுப் பின் தீராப் பழிக்கு ஆளாக நேரிடும்.
அனைவருக்குமான எச்சரிக்கை
சக மாணவியிடம் போனில் பேசியதை எதற்கு அந்த மாணவன் பதிவு செய்ய வேண்டும்? இப்படிக் குரூரமாகவா அந்த மாணவனின் மூளை வேலை செய்கிறது? தனிமை தந்த கிளர்ச்சியில் அந்த மாணவி எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். அதை எந்த நோக்கில் இவர் பதிவு செய்திப்பார்? எவ்வளவு பெரிய சமூக விரோத மனப்பாங்கு இதில் புதைந்திருக்கிறது. இணையம் இருக்கிறது என்பதற்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள்? சக தோழிகளுடன் காம ரசம் சொட்ட இரவில் உரையாடியதை எத்தனை பேர் இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள் தெரியுமா? வசனங்கள்தான் என்றில்லை,
இருவரும் அந்தரங்கமாக இருக்கும் நொடிகளையும் படம் பிடித்துக்கொள்ளும் நோயும் பலருக்கு இருக்கிறது. நட்பே ஒரு காலத்தில் பகையாகும்போது ரிலீஸ் செய்வதற்காக இது போன்ற படங்களை எடுத்துவைத்துக் கொள்கிறார்களோ? வெளியே தெரியாமல் எத்தனை பெண்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
மூச்சு விட்டால்கூடப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நொடி உலகத்துக்கே தெரியப்படுத்துகின்ற துர்புத்திக்காரர்கள் எங்கெங்கு காணினும் உலவிக்கொண்டிருக்கிறார்கள். அப்பாவி மாணவிகள் அவர்களிடம் மாட்டிக்கொண்டால் வாழ்க்கையே வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது. எச்சரிக்கை குழந்தைகளே…
எல்லாமே பேசலாம்!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago