கிராஃபிக் நாவல்: உலகைக் காப்பாற்ற வந்த அவதாரம்

By கிங் விஸ்வா

அனைவருக்குமே நாயகன் ஆகும் ஆசை இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நாயகனாக எல்லோராலும் மாற முடிவதில்லை. அப்படி ஆசைப்படும் ஒருவன்தான், சிட்டி சென்டர் மாலில் ஒரு உணவகத்தில் வேலைசெய்யும் ராமன். ஒருநாள் மர்ம நபர்கள் சிலர் ராமனின் கண் முன், ஒரு பெண்ணைக் கடத்த முயல்கின்றனர். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறான் ராமன். ஆனால், இது சினிமாவும் இல்லை, ராமன் நாயகனும் இல்லை. கடத்தல்காரனும் இதையே சொல்லி, ராமனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.

கதை தொடங்கிய ஐந்தாவது பக்கத்திலேயே நாயகன் சுட்டுக் கொல்லப்படுவது புதுமையாக இருக்கிறதே என்று யோசித்தால், கதாசிரியர் அடுத்தடுத்து ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறார். மரணத்தைத் தழுவும்போது நமது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்கள் சினிமா ஃபிளாஷ்பேக் போல வருமென்று சொல்வார்கள் அல்லவா? ராமனுக்கும் அதைப் போலவே ஃபிளாஷ்பேக் வருகிறது. ஆனால், ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான ஃபிளாஷ்பேக்குகள் வர, ராமன் கண்ணை மூடுகிறான்.

நன்மை செய்யும் பிறவிகள்

ராமன் கண்விழிக்கும்போது, அவன் எதிரே புதிரான ஒரு உருவம் தன்னைக் காலம் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறது. ஆன்மாவின் சுழலில் ஒரு புள்ளியில் ராமன் இருப்பதாகச் சொல்லும் காலம், அவனுக்கு மேலும் சில விஷயங்களை விளக்குகிறது. மரணம் என்பது உடலுக்கு மட்டுமே, அப்படி இறப்பதுதான் இங்கு உள்ள அமைப்பு (Pattern) என்றும் சொல்லி, ஆன்மாவுக்கு மரணமில்லை என்றும் தெரிவிக்கிறது. அதைப் போலவே, மறுபிறப்பு என்பதும் உண்மைதான் என்று சொல்லி, ஒரு ஆன்மா மறுபடியும் வேறொரு உடலைத் தேர்ந்தெடுப்பதுதான் மறுபிறப்பு என்றும் விளக்குகிறது.

நன்மைக்கும் தீய சக்திகளுக்குமிடையே நடந்துவரும் போராட்டத்தில், நன்மைக்காகத் தியாகம் செய்த ஒவ்வொரு பிறப்பும், ராமனுடைய முற்பிறவிகள். இத்தனை பிறவிகளாகத் தொடர்ந்து நன்மைக்காகப் போராடிய அந்த அனைத்துப் பிறவிகளுக்கும் நன்றி செலுத்தும்விதமாக அவற்றின் இப்போதைய பிறப்பான ராமனிடம் ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. காலச் சக்கரம் ராமனின் உடலில் பொருத்தப்படுகிறது. பல ஆன்மாக்கள், பல மறு பிறப்புகளின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்கிறான், ராமன். அவன் நினைத்தபோது நினைத்த ஆன்மாவைக் (வீரனை) கொண்டுவர முடியும். குகை மனிதன், பண்டைய காலத்துப் போர் வீரன், துறவி, சூனியக்காரி, பார்வையற்ற ஒரு மந்திரவாதி, செவ்விந்தியப் பெண், பனி மனிதர்களின் தலைவன் என்று ஏகப்பட்ட அவதாரங்கள் ராமனின் உடலில் இருக்கின்றன.

இருளின் மைந்தர்கள்

காலச் சக்கரம் என்றால் என்ன? அது என்ன செய்யும் என்று ராமன் கேட்க, நேரம் வரும்போது நீயே தெரிந்துகொள்வாய் என்ற பதில் கிடைத்த பின், மறுபடியும் அதே சிட்டி சென்டர் மாலில் கண் விழிக்கிறான் ராமன். அவனது உடலில் பாய்ந்த தோட்டாக்கள் காணாமல் போயிருக்க, கடத்தல்காரர்களைப் போலவே ராமனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ராமனைச் சுட முயலும்போது, ராமனின் உடலில் இருக்கும் காலச் சக்கரத்திலிருந்து, ராமனின் முற்பிறவிகளில் ஒன்றான குகை மனிதன் வெளிப்படுகிறான். கடத்தல்காரர்களை அடித்து, ஏன் அந்தப் பெண்ணைக் கடத்த முயன்றீர்கள் என்று கேட்கிறான். ஆயிரம் ஆண்டுகளாக இருள் சூழ்ந்த சிறையிலிருக்கும் மாரா என்ற அசுரனைத் திரும்ப வரவழைக்க, இந்தப் பெண்ணால்தான் முடியும் என்று சொல்லி, இருளின் மைந்தர்கள் மறுபடியும் அவளைக் கடத்த வருவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

நம்பிக்கையின் முதல்படி

தன்னைக் காப்பாற்றிய அந்தக் குகை மனிதனுக்கு நன்றி சொல்லி, அவனுக்கு அந்த உணவகத்தில் பர்கர் வாங்கித் தருகிறாள், தாரா. பின்னர், அந்தக் குகை மனிதன் மறைந்து, ராமன் வருகிறான். அதே வேளை, ஆன்மாக்களின் சுழல் என்றழைக்கப்படும் அனைத்துக்குமான ஆரம்பப் புள்ளியில், காலத்துக்கும் அமைப்புக்குமிடையே கடுமையான விவாதம் நடக்கிறது. இறக்க வேண்டிய அந்தப் பெண்ணைக் காப்பாற்றியது தவறு என்று அமைப்பு சொல்ல, அழிவின் விளிம்பில் இருக்கும் மனித இனத்துக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பாக ராமனைத் தந்து காப்பாற்றுவதில் தவறில்லை என்று காலம் பதில் அளிக்கிறது.

தாராவை அவளது வீட்டில் விடச் செல்லும்போது, அவள் பலவீனமடைந்து கீழே விழுகிறாள். மயக்கமடைவதற்கு முன்பாக, புனித மலையின் மீதேறி, ரகசியக் கதவைத் திறந்து, நன்மையைக் காப்பாற்றுமாறு ராமனிடம் சொல்கிறாள். அப்போது வரும் ஒரு பெண், ஒரு ராஜா ராணி காலத்து வீராங்கனையாக மாறி, ராமனைத் தாக்க வருகிறாள். காலச் சக்கரத்தின் உதவியுடன் தன்னுடைய முற்பிறவிகளில் ஒன்றான பண்டைய காலத்து வீரனை வரவழைத்து, அவளைத் தோற்கடிக்கிறான் ராமன். மதர் மெர்ஸி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவள், தாராவைப் பற்றி விளக்குகிறாள்.

போதி சத்வரின் கட்டளை

பிரபஞ்சத்தின் தொடக்கக் காலத்தில், நமது உலகத்துக்கும் தீய சக்திகளின் உலகுக்குமிடையே ஒரு பாதை இருந்தது. இருளின் அரசனான மாராவின் படை வீரர்கள் இந்தப் பாதை வழியாக வந்து, மனிதர்களைக் கொன்று உணவாகப் பயன்படுத்திவந்தார்கள். மனிதர்கள் அனைவரும் போதி சத்வரிடம் இது குறித்து முறையிட, அவர் ஒரு வழி சொல்கிறார். நன்மைக்கும் இருள் உலகுக்குமிடையே இருக்கும் பாதையை அடைக்க, ஒரு சாவி இருப்பதாகவும், அதைப் பெற தான் ஓர் ஆண்டு தவம் இருக்கப் போவதாகவும் சொல்கிறார். அவரது தவம் முழுமை பெற்றால் மட்டுமே அந்தச் சாவி கிடைக்கும் என்பதால், அவரது தவத்தைக் கலைக்க மாரா கடுமையாக முயல்கிறான். உலகமே நடுங்கும் தோற்றம் கொண்ட ஒரு அரக்கர் படையைத் தானே வழிநடத்தி போதி சத்வரை அழிக்க வருகிறான்.

தூய்மையான உள்ளம்

போதி சத்வர் தன்னுடைய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்து, அதற்கு உயிர் கொடுக்கிறார். அந்த வீராங்கனை தீமையின் மொத்தப் படையையும் எதிர்த்துத் தனியாகப் போராடுகிறாள். மாராவின் அசுரத் தாக்குதலுக்கு எதிராகப் போராடி, ஒரு கட்டத்தில் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து மாராவைத் தடுக்கிறாள். அவளது ஒரு பகுதியாக ஒரு ஆபரணம் மட்டுமே பூமியில் நிலைக்கிறது. போதி சத்வரின் தவம் வெற்றிபெற்று, தீமையிலிருந்து பூமி காப்பாற்றப்படுகிறது. ஆனால், மாரா மறுபடியும் பூமிக்கு வரக் காத்திருக்கிறான். மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, கோள்களுக்கிடையேயான வழிகள் திறக்க, அப்போது பூமிக்குத் திரும்பவரத் திட்டமிடுகிறான் மாரா. ஒரு மனிதனின் மீது ஆற்றலைச் செலுத்தி, தனக்கென ஒரு படையை உருவாக்குகிறான்.

ராமனால் தாராவைக் காப்பாற்ற முடிந்ததா?

ராமனை ஏமாற்றக் காத்திருப்பது யார்?

மாராவின் படைகளால் ராமனைத் தடுத்து நிறுத்த முடிந்ததா?

- என்று பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் அளிக்கிறது இந்த கிராஃபிக் நாவல். மனிதனைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியுமான விவாதம், நம்பிக்கையின் ஆதாரம், தன்னையே மீட்டெடுக்க நினைப்பது என்று பல விஷயங்கள் இந்தக் கதையை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகின்றன. தத்துவார்த்த விவாதங்கள் எளிமையாகவும் ஆழமாகவும் இருப்பது கதாசிரியரின் திறமையைக் காட்டுகிறது.

ரீஇன்கார்னேஷன் மேன் அனைவரும் இப்பிறவியிலேயே படிக்க வேண்டிய ஒரு கிராஃபிக் நாவல்.

கட்டுரையாளர்,

காமிக்ஸ் ஆர்வலர்

தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்