பேஸ்புக் காதலை நம்பலாமா?

By ஆனந்த் கிருஷ்ணா

தொடக்கம் உள்ள எல்லாவற்றிற்கும் முடிவும் உண்டு. தொடக்கமற்றது ஏதேனும் இருந்தால் அதற்கு மட்டும்தான் முடிவு என்பது இல்லாமல் இருக்க முடியும். உறவு என்பதன் தொடக்கம், இயக்கம், முடிவு என்பது நாம் இன்னும் அறியாத ஏதோ ஒரு இலக்கணத்தின்படிதான் நடக்கிறது. நம் வாழ்வில் நாம் ஒருவரைப் புதிதாகச் சந்திக்கும்போது, அதுவரையில் நமக்குள் வெளிப்பட்டிருக்காத ஒரு புதிய அம்சம் வெளிப்படுகிறது. அது நமக்கே புதியதாக இருக்கிறது.

புதிதாக நாம் பிறந்துவந்தது போலிருக்கிறது. அதனால் அந்த நபர் நமக்கு மிகவும் முக்கியமாகப் போய்விடுகிறார். வாழ்க்கையின் ஓட்டத்தில் அந்த நபர் நம்மைவிட்டு விலகிப் போய்விட நேரும்போது நமக்கு அந்தப் புதிய அம்சத்தை இழந்துவிடும் உணர்வு ஏற்படுகிறது. அச்சம் கவிகிறது. உண்மையில் அந்த அம்சம் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அதை நாம் இழக்க முடியாது. இது புரிந்துவிட்டால்

நம் சுயமதிப்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த நபருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிடலாம். அதன் பிறகு வாழ்வின் அடுத்த கட்டத்தில் நமக்காகக் காத்திருக்கும் புதிய உறவுகளின் வழியாக, நம்மிடம் இருக்கும் மேலும் புதிய அம்சங்களை அறிந்துகொள்ளத் தயாராக முடியும்.

நான் ஒரு கல்லூரி மாணவி. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னைக் காதலிக்கிறார். நாங்கள் பேஸ்புக்கில்தான் அறிமுகம் ஆனோம். முதலில் பேஸ்புக்கில் நட்புடன்தான் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அது காதலாக மாறியது. என் காதலர் வீட்டிற்கு நாங்கள் காதலிப்பது தெரியும். எங்கள் காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னுடைய காதலர் டிப்ளோமா படித்துக்கொண்டு பகுதிநேரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தவுடன் என் காதலைப் பற்றி என் வீட்டில் சொல்லலாம் என்று இருக்கிறேன். நான் காதலரை முழுமையாக நம்புகிறேன். ஆனால், என் நண்பர்கள் இது பேஸ்புக் காதல். இதை நம்ப முடியாது என்று சொல்கிறார்கள். உன் காதலன் உன்னை ஏமாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். இதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன். நான் என் பெற்றோரிடம் இந்தக் காதலைப் பற்றி எப்போது சொல்வது? நான் என் காதலரை நம்பலாமா?

பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆனார் என்ற ஒரே காரணத்தால் அவரை நம்ப முடியாது என்பது சரியல்ல. ஒருவரை நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் இன்னும் ஆழமான காரணங்கள் தேவை. உங்களை நீங்கள் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்? நண்பர்கள் சொன்னவுடனே உங்களுக்கு ஏன் சந்தேகம் வருகிறது? நம் மனத்துக்கு ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. ஏதாவது கிடைத்தால் உடனே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுகிறோம். கூடவே ஒரு பயம் நம்மைப் பற்றிக்கொள்கிறது.

நம் பயங்களுக்குக் காரணம் நம்மைப் பற்றிய தெளிவு நமக்கு இல்லை, நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான். இதுவரையில் நீங்கள் பழகியதை வைத்துக்கொண்டு உங்கள் காதலர் பற்றி ஒரு சரியான முடிவுக்கு வர உங்களால் முடியும். கொஞ்ச நாட்களுக்கு இதுபற்றி வேறு யாரிடமும் பேசாமல் ஒரு தவம்போல் உங்களுக்குள்ளேயே பார்த்துக்கொண்டிருங்கள். தெளிவு பிறக்கும். வாழ்க்கையின் போக்கை நம்புங்கள். அது தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நான் முதுகலை பட்டம் படிக்கும் மாணவி . எனக்கு நண்பர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லாரிடமும் நன்றாகப் பேசிப் பழக எனக்கு வராது. பிடித்தவர்களிடம் மட்டும் நன்றாக பேசுவேன். இந்தப் பழக்கம் சரியல்ல என்பது எனக்குத் தெரியும். அதை மாற்ற நான் முயற்சி செய்துவருகிறேன். தற்போது என் நெருங்கிய தோழி ஒருத்திக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. முன்பு போல் அவள் என்னிடம் பேசுவதில்லை. அது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவள், என்னால் திருமணம் செய்த பிறகும் உன்னிடம் முன்பு போல் பேச முடியாது. நண்பர்களுக்கும் சில எல்லைகள் உண்டு.

இனி பொதுவாக பேசிகொள்வோம். எனக்கு என் கணவர், குழந்தைகள் தான் முக்கியம். உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால், என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது என்று கூறுகிறாள். ஏன், திருமணம் செய்த பிறகும் பழையபடி நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா? எனக்கு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. சில நேரம் அழுகைகூட வருகிறது. நான் உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்கிறேனோ என்று எனக்குத் தோன்றுகிறது. என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. நான் இதில் இருந்து மீண்டு வர ஏதேனும் வழி சொல்லுங்கள்.

எல்லாரிடமும் நன்றாகப் பேசிப் பழக வராது என்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். அதே காரணத்தால் ஒருவரிடம் மட்டும் உங்கள் பிரியம் அனைத்தையும் கொட்டி வைத்திருக்கிறீர்கள்.

அந்த சிநேகிதி தன் வாழ்க்கையின் மேல் கவனம் செலுத்துவது உங்களை அச்சம் கொள்ளச் செய்கிறது. உங்கள் சிநேகிதிக்கு உங்களிடமிருந்து இதுவரையில் கிடைத்த பிரியமும் ஆதரவும் வேறு இடத்தில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அது இயற்கைதான். சரி, இதில் உங்கள் வாழ்க்கை எங்கே இருக்கிறது? உங்கள் எதிர்காலம், உங்கள் கணவர், குழந்தைகள், இவைபற்றி எந்தச் சிந்தனையும் உங்களுக்கு இல்லையா? வாழ்க்கை தன் வரைபடத்தை எப்போதும் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறது. உங்கள் நட்பின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். மேற்கொண்டு உங்கள் வாழ்க்கை செல்லும் திசையில் கவனம் செலுத்துங்கள். வாழ்த்துக்கள்.



உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்