தேசிய மருத்துவர்கள் தினம்: ஜூலை 1- சகலகலா டாக்டர்... டாக்டர்..!

சார் உங்க பேரே ‘கலை’ நயமா இருக்கே” என்று கலாட்டா செய்தால் ‘கலகல’ எனச் சிரிக்கிறார் டாக்டர் கலைவாணன். சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (சிம்ஸ்) மருத்துவமனையில் எலும்பியல் நிபுணராகப் பணியாற்றிவருகிறார்.

வெள்ளை கோட் அணிந்து மருத்துவ சேவை செய்யும் இவருக்குள், இன்னொரு ‘கலர்ஃபுல்’ மனிதர் ஒளிந்திருக்கிறார். ஆம். இவர் ஒரு ஓவியரும்கூட. ஓவியம் என்னும் பாதையில் பயணித்துக்கொண்டே சமீபமாக இவர் ஒளிப்படங்களிலும் தன் அடையாளத்தைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ளார். இவரை ‘தேசிய மருத்துவர்கள் தின’த்தையொட்டி ‘இளமை புதுமை’க்காகச் சந்தித்தோம்.

‘ப்ரிஸ்கிரிப்ஷன்’ எழுதும் கைகள் ‘பேலெட்’ பிடிக்கிற ‘மெடிக்கல் மிராக்கிள்’ எப்படி நடந்தது..?’ என்று கேட்டால் புன்னகைத்துக்கொண்டே ‘ஃப்ளாஷ்பேக்’ கேன்வாஸில் பட்டாபிராமில் இருந்து பாட்டியாலா வரையிலான தனது பயணத்தைத் தீட்டத் தொடங்கினார் கலைவாணன்.

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை பட்டாபிராம் பகுதியிலதான். என்னோட அக்காதான் நான் ஓவியம் வரையறதுக்கான இன்ஸ்பிரேஷனா இருந்தாங்க. அவங்களுக்குக் கேட்கும் திறனோ பேசும் திறனோ கிடையாது. ஆனாலும் காலேஜ் வரைக்கும் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி இன்னைக்கு ஒரு வேலையில இருக்காங்க. படிப்போடு அவங்க ஓவியம் வரையறதையும் தொடர்ந்து பண்ணிட்டே இருந்தாங்க. அவங்க வரையறதைப் பக்கத்துல இருந்து பார்த்துப் பார்த்து, எனக்கும் ஆர்வம் வந்து, நானும் கொஞ்சம் கொஞ்சமா வரையக் கத்துக்கிட்டேன்.

எல்லாமே ஸ்கூல் படிச்சு முடிக்கிற வரைதான். ஸ்கூல்லகூட பெருசா நான் ஓவியப் போட்டிகள்ல எல்லாம் அவ்வளவா கலந்துக்கலை. ஒரே ஒரு தடவை ‘கலைமகள் சபா'ங்கிற அமைப்புல இருந்து ஓவியப் போட்டி நடத்தினாங்க. அதுல கலந்துக்கிட்டு பரிசு வாங்கினேன். மத்தபடி, என்னோட ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே நான் வரையற ஓவியங்களைப் பார்த்துப் பாராட்டுவாங்க.

எம்.பி.பி.எஸ். சேர்ந்த அப்புறம் தனியா உட்கார்ந்து ஓவியம் வரையற அளவுக்கெல்லாம் நேரமே கிடைக்கலை. அப்புறம் மேல படிக்கிறதுக்காக பாட்டியாலா போனேன். அங்க இருந்த என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலர் நான் வரைஞ்ச ஓவியங்களைப் பார்த்துட்டு, ‘இதை எல்லாத்தையும் ஏன் பெட்டிக்குள்ளாற போட்டு பூட்டி வைக்கிற? நம்ம ரூம்ல மாட்டுவோம்’னு சொல்லி அதகளம் பண்ணிட்டாங்க.

ஆனா, ஆச்சர்யம்... எங்க ரூமுக்கு வர்றவங்க எல்லோருமே எதுக்காக எங்களைப் பார்க்க வந்தாங்களோ, அதையெல்லாம் மறந்துட்டு, ஓவியங்களையே ரொம்ப நேரம் பார்த்துட்டு இருப்பாங்க. சிலர் அந்த ஓவியங்களை ‘நான் வீட்டுக்குக் கொண்டு போறேன்’னு சொல்லிட்டு எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்புறம் நான் மும்பைல ‘ஃபெல்லோஷிப்’ பண்ணும்போது நான் தங்கியிருந்த ஃப்ளாட்ல ஒரு புரோக்ராம் நடந்துச்சு. அப்ப என்னோட ஃப்ரெண்ட்ஸ் என்னோட ஓவியங்களை எல்லாம் ஒரு எக்ஸிபிஷன் மாதிரி வெச்சாங்க. அதுக்கு செம ரெஸ்பான்ஸ். இந்த‌ மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள்தான் நான் மறுபடியும் சீரியஸா ஓவியம் வரைய என்னை மோட்டிவேட் பண்ணுச்சு.

அப்புறம் நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு மறுபடியும் என்னோட ஓவியப் பயணத்துல ஒரு சின்ன ‘பிரேக்’. ஒரு சமயம் என்னோட மருத்துவ‌ நண்பர் நான் வரைஞ்சு வெச்சிருந்த ஒரு ஓவியத்தை வாங்கிட்டுப் போய் குழந்தைகளுக்கான விடுதியில வெச்சார். காரணம், கேட்டதுக்கு அந்த ஓவியம் நிறைய ‘பாஸிட்டிவ்’ அலைகளை உருவாக்குறதா சொன்னார். அதே மாதிரி என் வீட்டுக்கு, என்னைப் பார்க்க வர்ற நண்பர்களும் நான் வரைஞ்சு வெச்சிருக்கிற சில ஓவியங்களைப் பார்த்துட்டு, அவங்களுக்குத் தோணுற கருத்துகளைச் சொல்லிட்டுப் போவாங்க.

இன்னைக்கு நிறங்களைப் பயன்படுத்தி நிறைய நோய்களைக் குணப்படுத்துகிற சிகிச்சை முறையெல்லாம் வந்துக்கிட்டிருக்கு. என்னோட ஓவியங்களைப் பார்த்துட்டு அதுக்கு நண்பர்கள் சொல்ற கருத்துகளை வெச்சு அவங்க என்ன நிலைமையில இருக்காங்க, அவங்களுக்கு என்ன பிரச்சினை அப்படிங்கிற சில விஷயங்களை என்னால் ஊகிக்க முடியும். அதனால் அவங்களுக்கு என்னால எப்படி உதவ முடியும் அப்படிங்கிறதும் எனக்குக் கொஞ்சம் தெரியும். இது எனக்கு பர்சனலாகவும், புரொஃபெஷனலாகவும் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.

நான் வரையிற ஓவியங்கள மக்கள் பார்த்துட்டு, ரசிச்சிட்டுப் போறதா மட்டும் இல்லாம, அவங்களைக் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கணும்னு நினைப்பேன். அதனால ரத்த தான தினம், தாய்ப்பால் விழிப்புணர்வு தினம், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு, பெண்கள் தினம்... இப்படி அப்பப்போ கொஞ்சம் பொது நலனை மையமா வெச்சும் வரையறேன்.

ஓவியத்தோட தொடர்ச்சியாதான் நான் போட்டோகிராஃபியையும் பார்க்கிறேன். மனிதர்கள், சம்பவங்கள்னு அந்தந்த நிமிடங்களை, ‘லைட்டிங், ஆங்கிள்’ இதப் பத்தியெல்லாம் கவலைப்படாம அப்படி அப்படியே படம் பிடிக்கிறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஓவியம், போட்டோகிராஃபி... இதெல்லாம்தான் என் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. மருத்துவத் துறை நம்மோட கடின உழைப்பையும், நேரத்தையும் எதிர்பார்க்கிற ஒரு துறை. அதுல நமக்கு அப்பப்போ ஏற்படும் சோர்வுல இருந்து தப்பிக்க இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள் நமக்குப் புத்துணர்ச்சி கொடுத்து நம்மை இன்னும் ‘புரொடக்டிவ்’ ஆக மாற்றும்னு நான் நம்பறேன். என்ன நான் சொல்றது கரெக்டா..?”.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்