தற்காப்புக்காக கராத்தே, குங்ஃபூ, ஜூடோ போன்ற கலைகளைக் கற்றுக்கொண்டவர்களை விட, புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சானைப் பார்த்து இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டவர்களே அதிகம் என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை மை லார்ட்!
‘ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கர்!' இதுதான் தற்போது ஹாலிவுட்டின் ‘ஹாட் டாபிக்'. அந்தச் செய்தியை ஜாக்கியே முதலில் நம்பியிருக்க மாட்டார். ஏனென்றால், ஒரு ஸ்டன்ட் நடிகருக்கு ஆஸ்கர் என்றால், பின் யார்தான் நம்புவார்? எவ்வளவு ரிஸ்க் ஆன 'ஷாட்' ஆக இருக்கட்டும், எவ்வளவு நல்ல நடிப்பாக இருக்கட்டும், வசூலில் சாதனை புரிந்த படமாகக்கூட இருக்கட்டும்... இன்னமும் ஜாக்கி சான் என்ற நல்ல நடிகரை, ஹாலிவுட் ஒரு ‘எக்ஸ்ட்ரா'வாகவே பார்க்கிறது.
அவர் ஒரு அருமையான நடிகர் என்பதற்கு ‘கராத்தே கிட்' என்ற ஒரு படம் போதும். அந்தப் படத்தில் அவருக்கு ‘அடிப்பதற்கு' வாய்ப்புக் குறைவு. ஆனால் ‘நடிப்பதற்கு' நல்ல ஸ்கோப். அதை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜாக்கி. ஜேடன் ஸ்மித்துக்கு குங்ஃபூ கற்றுக்கொடுக்கும்போது முதலில் அவன் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை ஒழுங்காக ஓரிடத்தில் மாட்டச் சொல்வார் ஜாக்கி. ஜேடனுக்கு அந்த ஜாக்கெட்டை ஹேங்கரில் மாட்டுவதை மட்டுமே தொடர்ந்து பல நாட்களுக்குப் பயிற்சி கொடுப்பார் ஜாக்கி.
ஒரு கட்டத்தில் ஜேடன் கோபத்துடன் ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டும்போது, ஜாக்கி அவனுக்கு குங்ஃபூவின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பார். அப்போது அவர் சொல்லும் வார்த்தைகள் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. “குங்ஃபூ நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் வாழ்கிறது. ஜாக்கெட்டை எப்படி மாட்டுகிறோம் அதனை எப்படிக் கழட்டுகிறோம் என்பதிலும்கூட அது வாழ்கிறது. அது நாம் மனிதர்களை எப்படி நடத்துகிறோம் என்பதிலும் வாழ்கிறது”.
ஜாக்கியின் வாழ்வும் அப்படித்தான். ஹாங்காங்கில் பிறந்த அவருக்கு அவர் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக முறையான பள்ளிப்படிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ‘மீன் பிடிப் பவனுக்கு எப்படி மீனைப் பிடிப்பது என்று கற்றுத் தருவதுதான் அவனுடைய பசியைப் போக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஜாக்கியின் தந்தை அவரை குங்ஃபூ பள்ளி ஒன்றில்தான் சேர்த்தார். ‘அவனுக்கு குங்ஃபூ கற்றுக்கொடுத்தால் போதும். அவன் பிழைத்துக்கொள்வான்' என்ற நம்பிக்கைதான் காரணம்.
அந்த நம்பிக்கை, ஜாக்கியையும் கைவிடவில்லை. ஹாங் காங் சினிமாவில் ஸ்டன்ட்மேனாகச் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அங்கு சினிமா நலிவடைய ஆரம்பித்தது. அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ஒரு ரெஸ்டாரன்ட்டில் எடுபிடியாகவும், கட்டட வேலை செய்யும் கூலியாகவும் இருந்தார்.
அப்போதும் குங்ஃபூதான் அவருக்குக் கைகொடுத்தது. வில்லி சான் என்ற நண்பரின் மூலம் மீண்டும் ஹாங் காங் வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். புரூஸ் லீ உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களில் ஹீரோவிடம் அடிவாங்கும் கதாபாத்திரமாக வந்துபோனார். ஒரு கட்டத்தில் வில்லி சானே ஜாக்கி சானை வைத்துப் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அவை எல்லாமே தோல்வியைத் தழுவின. என்ன காரணம் என்று ஜாக்கி யோசிக்க, அவரின் திறமை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளப் படவில்லை என்பது தெரிந்தது.
அப்போது ஜாக்கி ஒரு முடிவை எடுத்தார். இனி தன் படங்களின் சண்டைக் காட்சிகளுக்கான பொறுப்பைத் தானே ஏற்பது என்பதுதான் அது. அந்த முடிவு மிகச் சரியானதாக இருந்தது. ‘குங்ஃபூ காமெடி ஜானர்' எனும் சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ஜாக்கி. அதன் பின் அவர் நடித்த படங்களெல்லாம் ‘ஹவுஸ்ஃபுல்' கண்டன. முக்கியமாக அந்தப் படங்கள் எல்லாம் குழந்தைகளை ஈர்த்தன. ஒரு விஷயம் குழந்தைகளைக் கவர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ‘ஹிட்' ஆகும் என்பது யதார்த்தம். அதனால் ஜாக்கி சான் தான் அறிமுகப்படுத்திய ‘இந்தப் பாணியைத் தொடர்ந்து கடைப்பிடித்ததில்' ஆச்சரியம் எதுவுமில்லை.
ஆரம்ப காலப் படங்களை விட, கடந்த பத்தாண்டுகளுக்குள் ஜாக்கி சான் நடித்து வெளியான படங்களைப் பார்த்தால், ஒரு வித்தியாசம் மிக வெளிப்படையாகத் தெரியும். அது அவர் நடிக்க ஆரம்பித்திருப்பது! "இன்றும் நான் சாலையில் நடந்துசென்றால், 'ஓ! ஜாக்கி சான், நல்ல சண்டை நடிகர்' என்றுதான் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் எனக்குள் ஒரு ராபர்ட் த நீரோவைக் காண மறுக்கிறார்கள்? அதனால்தான் நான் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்தேன். நான் ஒரு நடிகன், என்னால் சண்டையும் போட முடியும் என்பதைச் சொல்லவே முயற்சிக்கிறேன். மாறாக, நான் ஒரு சண்டை நடிகன், என்னால் நடிக்கவும் முடியும் என்பதை நிரூபிப்பதற்கு அல்ல!" என்று ஒரு பேட்டியில் தன் வேதனையை வெளிப்படுத்துகிறார் ஜாக்கி.
ஜாக்கிக்குக் கைகொடுத்த அதே குங்ஃபூதான், அவர் ஹாலிவுட்டில் அதிகம் பிரகாசிக்க முடியாமல் போனதற்கும் காரணமாக அமைந்தது. அதை அவரே இப்படிச் சொல்கிறார். "எல்லோரும் என்னை 'ஸ்பைடர்மேன்' போல பறந்து பறந்து சண்டை போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் குங்ஃபூவில் அப்படிச் செய்ய முடியாது. ஒரு சராசரி மனிதனால்கூட செய்ய முடிகிற விஷயங்கள்தான் குங்ஃபூவில் உள்ளன. அது ரியல். ஆனால் ஸ்பைடர்மேன் ஸ்டன்ட் எல்லாம் ரீல்!"
அவர் நடித்த பல சண்டைப் படங்கள் ‘பாக்ஸ் ஆஃபீஸில்' நல்ல கலெக் ஷன் பார்த்தன. அவர் நடித்த சில படங்கள், அடி வாங்கவும் செய்தன. இருந்தும் அவர், தான் நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையே தேர்வு செய்தார். “காரணம், பல இளைஞர்கள் என் படங்களைப் பார்த்துவிட்டு, அதில் உள்ள தப்பான காரியங்களையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணத்துக்கு ‘ட்ரங்கன் மாஸ்டர்' என்ற படத்தில் நான் குடித்துவிட்டுப் பலரை அடிப்பது போல நடித்திருந்தேன். உடனே பலர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு குடித்துவிட்டுச் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர். எனவே, அந்தத் தவறான மெஸேஜை திருத்துவதற்காகவே ‘ட்ரங்கன் மாஸ்டர் 2' எடுத்தேன். அதில் ‘குடிக்காதே, சண்டைபோடாதே' என்ற செய்தியைச் சொல்லியிருந்தேன்!” என்கிறார்.
அவர் ரியல் ‘ஆக் ஷன் கிங்' என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும். வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் இவருக்கு வழங்கப்பட்டதை நியாயப்படுத்தவும் இந்த ஒரு காரணமே போதும். இவர் பிறந்தபோது இவரின் பெற்றோர்கள் இவருக்கு 'சான் காங் சாங்' என்று பெயரிட்டனர். அதாவது, ஆங்கிலத்தில் ‘பார்ன் இன் ஹாங் காங்' (ஹாங்காங்கில் பிறந்தவர்) என்று அர்த்தமாம். ஆஸ்கர் வாங்கியதற்குப் பிறகு இனி ஜாக்கியை இப்படி அழைக்கலாம். ‘பார்ன் ஃபார் குங்ஃபூ!'
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago