வேலையற்றவனின் டைரி 21 - காதல் முழுமை அடையும் தருணம்!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

நான் ஐந்தாவது படிக்கும் வரையிலும், தமிழ் சினிமா பார்த்துப் பார்த்து, ஒரு பெண் தடுக்கி விழும்போது, ஒரு ஆண் தாங்கிப் பிடித்து, இருவருடைய கண்களும் படபடவென்று அடித்துக்கொண்டால் அதன் பெயர்தான் காதல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு பெண் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டு, தன் கொலுசணிந்த கால்களை மேலும் கீழும் ஆட்டியபடி, ஒரு ஆணின் ஒளிப்படத்தைப் பார்த்து, கட்டைவிரலை கன்னாபின்னாவென்று கடித்துக் கொண்டே வெட்கப்பட்டால் அதன் பெயர்தான் காதல் என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் ஒரு நாள் மணிமாறன், “டேய்… ஒரு ஆம்பளையும், பொம்பளையும் அம்மாப்பாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறதுக்குப் பேர்தாண்டா காதல்” என்றவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

உண்மையில் காதல் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம், ஏன் வருகிறது? அப்போது அவர்களுடைய உடலளவிலும், மனதளவிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன‌ என்றெல்லாம் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். அவர்கள் காதலை மூன்று ஸ்டேஜாக பிரித்துப்போட்டு, ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஆஸ்ட்ரோஜென், அட்ரீனலின், டோபோமைன்… என்று ஏதோ ‘ன்’-ல் முடியும் ஹார்மோன்கள்தான், இந்தக் காதல் கலாட்டாக்களைச் செய்வதாக அடம்பிடிக்கின்றனர். இந்த உலகின் மிக அழகிய உணர்வான காதலை, இப்படி கெமிக்கல் அனாலிசிஸ் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் காதல் குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையில், பல தகவல்களைப் பார்த்தேன். ஒருவன் அழகாக, அறிவாளியாக, பணக்காரனாக இருக்கலாம். ஆனால் அவன் வாழ்க்கையில் கடைசி வரையிலும் காதலித்திருக்கவே மாட்டான் அல்லது காதலிக்கப்பட்டிருக்க மாட்டான். அதே போல எல்லா விதங்களிலும் கொஞ்சம் சுமாரான அல்லது மோசமான ஆட்கள் கூட காதல் வயப்பட்டிருக்கலாம். இது எப்படி நிகழ்கிறது?

இது தொடர்பாக, பத்திரிகையாளரும், கார்ட்டூனிஸ்ட்டுமான மதன், ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு மனிதனையும், காதல் செய்ய சாத்தியமுடையவர்கள் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சில ஆய்வுகள் கூறுவதாக எழுதியிருந்தார். அதாவது, உங்களின் குணங்கள், தோற்றம், திறமைகள் எல்லாம் பிடித்துப்போய், உங்களைக் காதலிப்பதற்கான சாத்தியம் உடையவர்கள் 50 ஆயிரம் பேர் (அடேங்கப்பா!).

நம்ப புதுக்கோட்டைப் பையனுக்கு, சம்பந்தமே இல்லாமல், புடாபெஸ்ட் வெள்ளைக்காரப் பெண்ணோடு காதல் வருவதெல்லாம் இந்த 50 ஆயிரம் தியரியின் கீழ்தான்.

அப்புறம் ஏன் பலருக்கும் காதல் நிகழ்வதில்லை? அங்குதான் ஒரு சிக்கல். அந்த ஐம்பதாயிரத்தில் ஒருவரை, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டும். மிகவும் அபூர்வமாக ஒரு சிலருக்குதான் இந்தச் சந்திப்பு சாத்தியமாகிறது. இந்தச் சந்திப்பை ஆத்திகர்கள் கடவுள் செயல் என்கிறார்கள். நாத்திகர்கள் தற்செயல் என்கிறார்கள். அவ்வாறு அந்தச் சந்திப்பு நிகழ்ந்துவிட்டால், வார்தா புயலிலும் தாக்குப் பிடித்த மரங்கள் போல உறுதி படைத்தவர்கள்கூட, காதலிக்காமல் இருக்க முடியாது.

முதலில் கடவுள், எங்கோ திருநெல்வேலியில், குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டுக் கரையேறும் ஐம்பதாயிரத்தில் ஒரு ஆணையும், புதுடெல்லி, கரோல்பாகில் வளர்ந்த ஐம்பதாயிரத்தில் ஒரு பெண்ணையும், நடிகை அலியா பட் வாழும் மும்பையில் சந்திக்க வைக்கிறார். இருவரும் அந்த 50 ஆயிரம் +50 ஆயிரத்தில் ஒருவர், அதாவது ஒரு லட்சத்தில் இருவர் என்பதால், இருவருக்கும் இடையே ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.

முதலில் இவர்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், பெர்ஃப்யூம் வாசனை அடிக்கும் தொலைவில் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு குறுந்தொகைப் பாடலில் கூறியுள்ளது போல, “பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன (நடுவே ஒரு பூவை வைத்தாலும் ஒரு வருடம் பிரிந்திருப்பதைப் போல)” தவித்துவிடுகிறார்கள்.

பிறகு அவள், “ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பாய்” என்று சொன்னால்கூட, ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியைச் சொல்வது போல, ஆண்கள் அவ்வளவு ரசித்துக் கேட்கிறார்கள். அவள் எறும்பு கடித்துச் சிணுங்கினால்கூட, யானை மிதித்தது போலப் பதறுகிறார்கள். உள்ளங்கை வியர்வையுடன் அவள் நீட்டும் ஈரக் குங்குமத்தை எடுக்கும்போது விரல் தொடும் கணத்தில், ஜிவ்வென்று பறக்கிறார்கள். தவறுதலாகக் கை பட்டு, அவளுடைய டச் ஃபோனிலிருந்து “a%*2#jk&” என்று வரும் மெசேஜை ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போல, இரவு முழுவதும் புன்னகையுடன் பார்க்கிறார்கள்.

அவள், ‘ஹேய்…’, ‘நில்’, ‘சொல்’, ‘செல்’ என்று கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சிம்பொனிதான். திடீரென்று பார்க்க முடியாத நாட்களில், இன்னொரு குறுந்தொகைப் பாடலில் வருவது போல, “ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல (வெயில் காயும் பாறை மேலிருக்கும் வெண்ணெய், பேசும் திறனற்ற கையில்லாதவன் ஊமை, தன் கண்ணால் காப்பாற்ற முடியாமல் உருகுவது போல), வேறு வழியின்றி பார்க்க முடியாத சூழ்நிலையில் உருகித் தவிக்கிறார்கள்.

சில நாட்களுக்குப் பின் சந்திக்கும்போது, அனைத்து மதக் கடவுள்களாலும் ஒருசேர ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு பொன் தருணத்தில், அவள் காதல் பொங்கும் ஒரு பிரத்யேகப் பார்வையை வீசும்போது, லவ் ஆகி, லவ் ஆகி லயித்துப்போகிறார்கள். அவளுடைய காதலை உணர்ந்த கணம் முதல், அவளின் ஒவ்வொரு செயலையும் அவன் ஒரு மகா கலைஞன் போல நுணுக்கமாக ரசிக்க ஆரம்பிக்கிறான்.

அவள் நெற்றியில் விரல் தட்டி ஏதோ யோசிப்பதை, மேலுதட்டில் விரல் குவித்து சிரிப்பதை, கீழ் இமையை இறக்கி மை தீட்டுவதை, அவள் கிளை உலுக்கி மலர் உதிர்ப்பதை, முற்றத்து மழைநீரில் முகம் பார்ப்பதை, மழைநீர் குழியை நாக்கைத் துருத்தியபடி தாண்டுவதை, ஈர மணலில் பாதம் பதிவதை, பதிந்த பாதங்கள் மணலுடன் நகர்வதை, கழுத்தின் பச்சை நரம்புகள் துடிக்க நீர் அருந்துவதை, அருந்தா நீர் தாடையில் வழிவதை, கூந்தல் மல்லிகை உதிர்வதை, எதற்கோ தலை சாய்த்து ‘ப்ச்’ என்று சலித்துக்கொள்வதை, யாரையோ முணுமுணுப்பாகத் திட்டுவதை, விரல் நீட்டி கணக்குப் போடுவதை, பாதி முகத்தில் இளம்வெயில் படரப் பேசுவதை, பொய்க்கோபத்துடன் சுட்டு விரல் நீட்டி எச்சரிப்பதை, காதோர முடியை ஒதுக்குவதை, விரல் நகம் கடிப்பதை, வண்ணத்துப்பூச்சி பிடிப்பதை, காதணிகள் அசைவதை, மூச்சிரைக்கப் பேசுவதை, சிரிப்பதை, நடப்பதை, கடப்பதை, திரும்புவதை, நிற்பதை, அமர்வதை… பார்த்து ரசித்து, ரசித்துப் பார்த்து இறுதியில் அவன் பின்வருவது போல் ஒரு கவிதை எழுதும்போது அந்தக் காதல் பரிபூர்ணம் அடைகிறது.

எனக்குத் தெரியும்

காற்றில் ஆடும் தீச்சுடர் போல

ஒரு பார்வையை வைத்திருப்பாய்

எனக்கென்றே

எனக்குத் தெரியும்

நட்சத்திரம் போல மின்னி அடங்கும்

ஒரு சிரிப்பை வைத்திருப்பாய்

எனக்கென்றே..!

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்