’சவுண்ட் மேப்’தான் கனவு!

By ம.சுசித்ரா

முதல் மழைத் துளி கரிசல் காட்டில் விழுந்தவுடன் எழும் மண் வாசமும் இத்தாலி எஸ்பிரஸோ கொதிக்கும் பாலில் கலந்ததும் பரவும் காப்பச்சீனோ ஃபிளேவரும் செம்ம காம்பினேஷனாக முடியும் என நிரூபிக்கின்றன புதிதாய் வெளியாகியிருக்கும் ‘கிடாரி’ படப் பாடல்கள்.

இந்த ஆல்பத்தின் முதல் பாடலான ‘வண்டியிலே நெல்லு வரும்’-ல் டிரம்ஸும் தவிலும், கிட்டாரும் நாதஸ்வரமும், பாஸும் தப்பும் கைகோத்துக் களைகட்ட உச்சஸ்தாயியில் ஆண்டனி தாசன் பாடுகிறார். இதே பாடல் ஏற்கெனவே சென்னை ஊரூர் ஆல்காட் குப்பம் முதல் கோக் ஸ்டூடியோ வரை பிரபலம். இப்போது சினிமாவுக்காகப் புதிய வடிவில் கொடுத்திருக்கிறார் ‘தர்புகா சிவா’. சசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் வசந்தபாலனின் உதவி இயக்குநர் பிரசாத் முருகேசனின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கிடாரி’யில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் தர்புகா சிவா.

பிளான் பண்ணுறதில்ல

ஏழு பாடல்களை உள்ளடக்கிய இந்த ஆல்பத்தில் நாட்டுப்புற இசைக் கருவிகளுக்குள் இருக்கும் அழுத்தமான நாதத்தை வெவ்வேறு பரிமாணங்களில் தந்திருக்கும் ‘தர்புகா சிவா’ சினிமா இசைக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் தனி இசைக் கலைஞர்களின் வீட்டுச் செல்லப்பிள்ளை இவர். ‘வாழ்க்கைல எதையுமே பிளான் பண்ணக் கூடாதுங்கறதுதான் என்னோட ஒரே பிளானே!’ என கூலாகப் பேசும் இவர் ரேடியோ மிர்ச்சி ஆர்ஜே, ‘ராஜதந்திரம்’ படம் மூலமாக நடிகர் எனப் பல முகங்கள் கொண்ட சுவாரஸ்யமான இளைஞர்.

“சிவாங்கிறது பேரு… ‘தர்புகா’ங்குறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?” எனக் கேட்டால், “அதை ஏங்க கேட்கிறீங்க… ஒரு தடவை நான் வாசிக்கிறதா இருந்த அதே இசை நிகழ்ச்சில சிவாங்குற பேருல இன்னொருத்தரும் இருந்தார். அப்போ என்னோட நண்பர் புதுசா பேரு சேர்க்கலாம்னு யோசனை சொன்னார். அப்பெல்லாம் நான் அதிகமாக வாசிச்சுக்கிட்டிருந்த ‘தர்புகா’ங்குற எகிப்திய தாள வாத்தியத்தின் பெயரைக் கிண்டலாகச் சேர்த்துக் கொடுத்தோம். அப்புறம் அந்தப் பெயர் நிலைச்சிடுச்சு. இதுல காமடி என்னன்னா சிலர் என்னை வெறுமனே ‘தர்புகா’ன்னு கூப்பிடுறாங்க” என்கிறார் சிவா.

எப்ப பார்த்தாலும் வாசிக்கிட்டிருப்பேன்!

வட சென்னைத் தமிழ் வாசம் கமழப் பேசும் சிவா பெரம்பூர் தமிழ்ப் பையன். பள்ளி நாட்களில் இளையராஜா பாடல்கள் கேட்டு இசையால் ஈர்க்கப்பட்டாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் என்பதால் ஏதோ கல்லூரியில் சேர்ந்து படித்தோம் போனோம் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தார். சென்னை நகர வீதிகளில் சுற்றித் திரிந்த நாட்களில் வெளிநாட்டு இசைக் கலைஞர்களின் கச்சேரிகளை லாண்ட் மார்க், ஐ.சி.சி.ஆர் உள்ளிட்ட இடங்களில் யதேச்சையாகக் கேட்க, “அட நமக்குள்ள இருக்குறது ஒரு இசைக் கலைஞன்தானோன்னு தோணுச்சு” என்கிறார் சிவா. அதிலும் 2002-ல் ‘எக்ஸ்பிரிமெண்டல் மியூசிக்’ என்பது சென்னைக்கு முற்றிலும் புதிது. அப்போது சோதனை முயற்சியாக இசையமைத்துவந்த பால் ஜேகப், போனி போன்ற மூத்த இசைக் கலைஞர்களோடு ‘ஒய்கியோடூன்’ (Oikyotoon) என்கிற வங்க மொழி இசை பேண்டில் சேர்ந்தார் சிவா. அப்படியே அவர்களோடே பயணிக்க டிரமஸ், தர்புகா, கிட்டார், பாஸ், உடுக்கை என வெவ்வேறு கருவிகளை வாசிக்கத் தானாகக் கற்றுக்கொண்டார்.

“டிரம்ஸோட ஸ்டிக்கை மட்டுமே வெச்சுக்கிட்டு வீட்டுல தலையணை, மேஜை என எப்ப பார்த்தாலும் வாசிச்சுக்கிட்டிருப்பேன். ஏதோ பையன் விளையாட்டாயிருக்கானுதான் வீட்டுலேயும் நினைச்சாங்க. ஆனால் பி.காம். கடைசி செமஸ்டர் பரீட்சை வந்தப்ப அதே நேரத்துல என் மியூசிக் பேண்டோடு சவுத் இந்தியா கான்ஸர்ட் டூர் போகும் வாய்ப்பும் வந்துச்சு. அப்போ படிப்பா, இசையான்னு முடிவெடுத்தாகணுங்குற கட்டம். என் மனசு இசைன்னு சொல்லுச்சு. இசையில் முழுசா இறங்கிட்டேன்” என்கிறார்.

அடுத்தடுத்து வெவ்வேறு இசைக் கலைஞர்களோடு இசையால் சங்கமித்தார். அனிருத், சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன் இப்படி இன்று தமிழ் சினிமாவுக்குள் சஞ்சரிக்கும் பல இளைய இசையமைப்பாளர்கள் சிவாவோடு அவர்களுடைய ஆரம்ப காலங்களில் சேர்ந்து இசையமைத்துப் பல மேடைகளிலும் சேர்ந்து வாசித்திருக்கிறார்கள். “ரொம்ப காலமாகச் சுதந்திர இசைக் கலைஞருக்குச் சினிமா பொருந்தாது என நனைத்து ஒதுங்கியே இருந்தேன். அனிருத், சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார், ஷான் ரால்டன் செட்டுல ரொம்ப லேட்டா சினிமாவுக்குள் வந்தது நான்தான்னு சொல்லலாம்” என்கிறார்.

சுவாரஸ்யம் முக்கியம்

இந்தியா முழுவதிலும் உள்ள கிராமிய- பூர்வகுடி (Folk - Tribal) இசைக் கலைஞர்களோடு இருந்து அவர்களுடைய மண்ணின் அசலான இசையைப் பதிவு செய்துவருகிறார் சிவா. “நம்ம கற்பனைகூட செய்து பார்க்க முடியாத இசைக் கலைஞர்கள் உலகின் பல இடங்களில் இருக்காங்க. தஞ்சாவூர் போனபோது அப்படி நான் கண்டுபிடிச்சவருதான் ஆண்டனி தாசன். அதே மாதிரி ராஜஸ்தான் போனபோது பாகிஸ்தானுக்கு 20 கிலோ மீட்டார் தொலைவில் உள்ள மேக்வால் டிரைபல் இசையைப் பார்த்து அசந்துபோனேன். இந்த மாதிரி காடு, மலை, கிராமங்களில் இருக்குற அற்புதமான இசைக் கலைஞர்களின் இசையை அவர்களோடே வாழ்ந்து பதிவு செய்யும் ‘சவுண்ட் மேப்பிங்’ என்னோட பிரம்மாண்டக் கனவு” என்கிறார் சிவா. ‘லா பொங்கல்’ (La Pongal) என இவர் தயாரித்த இசை ஆல்பம் தனி இசைக் கலைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.

தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் உத்வேகம் சிவாவிடம் கொப்பளிக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மேடையில் இசை நிகழ்ச்சிகள் செய்தாகிவிட்டது. அடுத்து ஏதாவது புதுசாகச் செய்ய வேண்டும் என அவர் மனம் சொன்னபோதுதான் ராஜதந்திரம் வாய்ப்பு வந்தது. “இசையமைக்கத்தான் கூப்பிடுறாங்கனு நினைச்சு மறுக்கலாம்னு வந்தபோது நடிக்கிற வாய்ப்புன்னாங்க. அதையும்தான் முயற்சி செய்யலாமேன்னு தோணுச்சு. அந்தப் படத்துல நடிச்சப்ப பிரசாத்தோடு நட்பு ஏற்பட்டது. அதுதான் இப்போது கிடாரி படத்துக்கு இசையமைப்பாளராக என்னை மாத்தியிருக்கு” எனச் சிரிக்கிறார் சிவா.

தன் வாழ்க்கையில் அடுத்து நிகழப்போகிற சுவாரஸ்யங்களுக்குத் திறந்த மனதோடு காத்திருக்கிறார் நிஜமான ‘சுதந்திர’ இசைக் கலைஞரான தர்புகா சிவா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்