விருது வென்ற ஜோக்கர் குயில்

By ம.சுசித்ரா

சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசியத் திரைப்பட விருதுகள் பட்டியலில் யாரும் யூகிக்காத ஒருவருடைய பெயர் இடம்பெற்றிருந்தது. ‘ஜோக்கர்’ படக் கதாநாயகனைப் போன்றே தர்மபுரியைச் சேர்ந்த சாமானியரான சுந்தர் ஐயர், அப்படத்தில் ‘ஜாஸ்மினு’ பாடலைப் பாடியதற்காகச் சிறந்த பாடகர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதுவரை அந்தப் பாடலைக் கேட்டிராதவர்கள்கூட, இப்போது ‘ஜாஸ்மினு ஜாஸ்மினு’ என முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாடகக் கலைஞர்

பெண் சிசுக்கொலை கொடுமையும் சாதியப் பாகுபாடும் தலைவிரித்தாடும் வட தமிழக மாவட்டங்களில் ஒன்று தர்மபுரி. அம்மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளிச்சந்தை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கிராமிய இசை மூலம் பகுத்தறிவுப் பாடல்களையும், சாதி ஒழிப்புப் பாடல்களையும், பெண் சிசுக்கொலைக்கு எதிரான பாடல்களையும் தானாக இட்டுக்கட்டிப் பாடிவந்தார் சுந்தர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுந்தரின் குலதெய்வமான அய்யனாரை, அவர் பெயருக்குப் பின்னால் சேர்த்துச் சுந்தர் அய்யனார் என அழைப்பது அவருடைய பாட்டியின் வழக்கம். சாதி ஒழிப்புக் கொள்கையை சுந்தர் முன்னெடுத்ததால், தன் பெயருக்குப் பின்னால் இருந்த அய்யனாரை ஐயராகப் பிறகு மாற்றிக்கொண்டார். பாடுவதுடன் நாடகக் கலைஞராகவும் இருக்கும் இவர் முருகபூபதியின் மணல் மகுடி நாடகக் குழுவிலும் முக்கியக் கலைஞர்.

கருவாட்டு குழம்பும் வட்டார மணமும்

பள்ளி நாட்களிலேயே இசை மீது தீராத காதல் உண்டானதால் அரசு பிரசார வீதி நாடகங்களில் நடிப்பதும் பாடுவதும் சுந்தருக்கு வழக்கமானது. மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரியிலும் சென்னையிலும் தமிழ் இசை பட்டயப் படிப்பைப் படித்தார். “சென்னையில் இசை படிக்கும்போதே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னுடைய மனைவியும் வீதி நாடகக் கலைஞர்தான். எங்க ரெண்டு பேருக்குமே இசை, நடிப்பு தவிர வேற எதுவுமே தெரியாது. எந்த வேலையும் கிடைக்காமல் திண்டாடித் திரும்பவும் வெள்ளிச் சந்தைக்கே போயிட்டோம்.

ஏதாவது செஞ்சாகணுமேனு யோசிச்சப்ப, எனக்கு ரொம்பவும் சாப்பிடப் பிடிச்ச களி-சோறு கடை போடலாம்னு முடிவெடுத்தோம். நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து களி, கீரைக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, கறிக் குழம்பு மெஸ் ஆரம்பிச்சோம். அப்படியே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் பாடுவேன், ரெண்டு பேரும் நடிக்கவும் போவோம்” என வட்டார மணம் மாறாமல் பேசுகிறார் சுந்தர்.

ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக் கடையால் பெரும் நஷ்டம் வந்ததால், அதையும் மூட வேண்டிவந்தது. ஒரு வழியாகப் பக்கத்துக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் வேலை கிடைத்து. மாதம் வெறும் ரூ.5000 சம்பளத்தில் வாழ்க்கை தத்தளித்துக்கொண்டிருந்தது (இருக்கிறது).

நிஜமான ஏற்றம் எப்போது?

‘ஜோக்கர்’ படப்பிடிப்புத் தொடர்பாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் யுக பாரதி தர்மபுரிக்கு வந்திருந்தனர். சுந்தரின் நெடுநாள் நண்பரான ஷங்கர், அவர்களிடம் சுந்தரை அறிமுகப்படுத்திவைத்தார். அவர்களைச் சந்தித்த உற்சாகத்தில் நாட்டுப்புறக் காதல் பாடல்களை இட்டுக்கட்டிப் பாடினார் சுந்தர். அதைக் கேட்டுவிட்டுப் போனவர்கள், சில மாதங்கள் கழித்துத் திடீரென ஒரு நாள் சுந்தரை சென்னைக்கு வருமாறு அழைத்தனர். அப்படி உருவானதுதான் ‘ஜாஸ்மினு’ பாடல் என மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார்.

“என்னுடைய குரலுக்கான அங்கீகாரம் என்பதைவிட நாட்டுப்புறத்தைச் சேர்ந்த ஒரு சாமானியனின் காதலை, அதன் யதார்த்தம் மாறாமல் திரையில் சொன்னதற்காக இயக்குநர், இசையமைப்பாளர், படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் விருது இது,” என்கிறார் தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் சுந்தர்.

அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து எழுந்து வந்து தேசிய விருதைப் பெறும் அளவுக்குத் திடீர் ஏற்றம் கிடைத்திருந்தாலும், இன்னமும் சுந்தரின் பொருளாதார நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பது, நமது சமூகம் இன்னும் என்ன நிலையில் எளிய கலைஞர்களை வைத்திருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. தேசிய விருதும், பாடும் வாய்ப்பும் சுந்தருக்கு நிஜமான ஏற்றம் தருமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்