மாயாஜால ஹாரி பாட்டர் ஹோட்டல்!

By ம.சுசித்ரா

ராட்சத அலைகள் மோதும் கருநீலப் பெருங்கடலுக்கு நடுவே வானுக்கும் பூமிக்குமாகப் பிரம்மாண்டமான மாளிகை ஒன்று உயர்ந்து நிற்கிறது. நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட ஜொலிஜொலிக்கும் தேர் வானில் விருட்டென்று பறந்து செல்கிறது. இருட்டு அறையில் நிற்கும் ஒரு பூதாகாரமான உருவம் தன் கையில் இருக்கும் குச்சி ஒன்றை அசைக்க மாளிகை முழுவதும் மெழுகுவத்திகள் சுடர்விட்டு எரிகின்றன. இது போன்ற கண் இமைக்கும் நேரத்தில் கற்பனைக்கு மீறிய மாயாஜால உலகை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் படம்தான் ஹாரி பாட்டர்.

அத்தகைய ஹாரி பாட்டர் நாவல் மற்றும் திரைப்படங்களின் ரசிகரா நீங்கள்? அதில் வரும் ஹாக்வார்ட் மாளிகை போன்ற மாயாஜாலப் பள்ளிக் கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி உள்ளது.

ஹாரி பாட்டர் ஹோட்டல் பேக்கேஜ்

ஜியார்ஜியன் வீடு என்னும் ஹோட்டல் லண்டன் நகரில் உள்ளது. இந்த ஹோட்டலில் ஹாரி பாட்டர் கதையில் இடம்பெறும் ஹாக்வார்ட் மாயாஜாலப் பள்ளியின் படுக்கை அறைகள் போலவே இரண்டு பிரத்யேகப் படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதை ஹாரி பாட்டர் ஹோட்டல் பேக்கேஜ் என அழைக்கிறார்கள். 1851-ல் கட்டப்பட்ட 4 நட்சத்திர விடுதியே ஜியார்ஜியன் ஹோட்டல். ஆரம்பத்தில் விக்டோரியா கலைப் பாணியில் இந்த விடுதி கட்டப்பட்டது. ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜேகே. ரவுலிங் சமீபத்தில் ‘பட்டர்மோர்.காம்’ என்ற தன் இணையதளத்தில் ஹாரி பாட்டர் குறித்து சுவாரஸ்யமான புதிய தகவல்களை வெளியிட்டார். இதைக் கண்டு உற்சாகம் கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் ஹோட்டலின் வடிவத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள்.

மந்திரப் படுக்கை அறை

குகை வடிவில் குனிந்து செல்லக்கூடிய நுழை வாயில் கொண்ட அறை. அறைக்குள் நுழைந்தால் சுற்றிலும் மங்கலான ஒளி வீசும் சிறிய மின் விளக்குகள். ஆங்காங்கே ஆரஞ்சு, மஞ்சள், மரூன் நிறக் கலவையில் தொங்கும் ஸ்கிரீன் துணிகள். நான்கு புறங்களிலும் கம்புகள் நடப்பட்ட மரக் கட்டில். அதன் தலைமாட்டில் அமானுஷ்யமான மிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்ட மரப்பலகை. கட்டிலின் கீழே பழைய தோலால் செய்யப்பட்ட பெட்டிகள். கட்டில் அருகே உள்ள மேஜை மேல் வெள்ளிக் குவளை, பக்கத்தில் சூனியக்காரி, பூனை போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள். ஆந்தை வடிவிலிருக்கும் பீங்கான் பொம்மை. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழங்கால மரச் சட்டம் கொண்ட பெரிய கண்ணாடி. சுவரின் மீது சாய்ந்து நிற்கும் ஏணி. கூரையிலிருந்து கீழ் நோக்கித் தொங்கும் மான் கொம்பில் பொருத்தப்பட்ட விளக்குகள், இது போன்ற பொருள்களைக் கொண்டவைதான் ஜியார்ஜியன் வீட்டின் மாயாஜால அறைகள். இந்த இரு அறைகளும் ஹாரி பாட்டர் படத்தை நம் கண் முன் நிறுத்துகின்றன.

குட்டீஸ் முதல் யூத் வரை

ஆரம்பத்தில் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த ஹோட்டல். பின்னர் இங்கு தங்கும் அனைவருக்கும் மந்திர உலகில் வசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு கற்பனை கலந்து அழகு சேர்க்கப்பட்டிருக்கிறது. மோனலிசா கையில் மந்திரக் கோல் பிடித்திருப்பது போன்ற ஓவியம் இதற்குச் சிறந்த உதாரணம்.

ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெறும் அறை போன்ற அசலான அறையில் தங்கும் வாய்ப்போடு சேர்த்து ஹாரி பாட்டர் பேருந்தில் செல்லும் வசதியையும் செய்து தருகிறது இந்த ஹோட்டல். இந்தப் பேருந்து ஹாரி பாட்டர் படம் பிடிக்கப்பட்ட வார்னர் பிரதர் ஸ்டுடியோவுக்கும் அழைத்துச் செல்லும். அங்கு திரைப்படம் எடுக்கப்பட்ட விதம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றைத் தத்ரூபமாக பார்த்து மகிழலாம். படத்தில் இடம்பெறும் 9 ¾ கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தையும் பார்வையிடலாம். நீங்கள் உலகம் சுற்றும் வாலிபராகவும், ஹாரி பாட்டர் ரசிகராகவும் இருந்தால் உடனடியாக லண்டனில் உள்ள ஜியார்ஜியன் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டியதுதானே!

இங்கிருந்தே பார்த்து மகிழ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்