உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், பொருளாதாரச் சீர்திருத்தம்... சில பத்தாண்டுகளுக்கு முன்பு பொருளாதார வல்லுநர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் இன்று கடைக்கோடி மனிதர் வரை தினசரி வாழ்க்கையில் சாதாரணமாகக் கேள்விப்படும் வார்த்தைகளாகிவிட்டன.
இதெல்லாம் எனக்கெதற்கு? நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவரா? அல்லது சிறிய அளவில் தொழில் செய்பவரா? அப்படியென்றால், இது உங்களுக்குத்தான். இதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காற்று, மழை, வெயில் போன்றவை உங்களை பாதிக்கத்தான் செய்கின்றன. அதுபோல நீங்கள் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளாவிட்டாலும் மேற்கண்ட விஷயங்களும் உங்களை பாதித்துக்கொண்டிருக்கின்றன. தெரிந்துகொண்டவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற முடியும். இதனைப் பற்றி அறியாதவர்களும், அறிய முயலாதவர்களும் பொருளாதார நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்.
தொழில் தொடங்கத் தடையில்லை
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் முக்கியமான அம்சம் தாராளமயமாக்கல். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தொழில் புரட்சிக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் பெருந்தொழில்கள் எல்லாமே அரசு நிறுவனங்களாகவே இருந்தன.
பெருமுதலீடுகள் செய்வதில் தனியார் துறைக்கு இருந்த பிரச்சினைகளும் அதற்கு ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் தொழில் தொடங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ‘லைஸென்ஸ் ராஜ்’ என்று சொல்லப்படும் தொழில் தொடங்குவதற்கான உரிமம் அரசிடம் இருந்தது. உரிமம் வாங்குவதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமையும் இருந்தது. இது தொழில் வளர்ச்சிக்குத் தடையாகவே இருந்தது. தொழில் தொடங்க உரிமம் வேண்டும் என்ற நிலை 1991-ம் ஆண்டில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டுவருகிறது.
இன்று ஒரு தொழிலைத் தொடங்கச் சுற்றுச்சூழல் முதலான தடையில்லாச் சான்றிதழ்கள் பெறுவது அவசியம் என்றாலும் இவை தொழிலுக்கான தடைகள் அல்ல. இதுதான் பொருளாதார சீர்திருத்தம். வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுத் தயாரிப்பு முதலியவை தாராளமயமாக்கல் காரணிகளாகும். இவையெல்லாம் நமது நாட்டுக்குள் நமது இந்திய முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள்.
தோற்கும் இந்திய ஆப்பிள்கள்
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏதோ நமது நாட்டில் மட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இல்லை. சொல்லப்போனால் இதனை முதலில் ஆரம்பித்தது முதலாம் உலக நாடுகள் எனப்படும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளேயாகும். தொழில் தொடங்க எந்தத் தடையும் இல்லை என்ற நிலையில் இந்த நாடுகள் தங்களது உற்பத்திப் பொருட்களைத் தங்களது நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் விற்கத் தலைப்பட்டன.
அத்துடன் குறைந்த தொழிலாளர் ஊதியத்தின் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் தொழில் தொடங்கவும் தலைப்பட்டன. இதனால் வளரும் நாடுகளில் வேலை வாய்ப்புகள் பெருகின. மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் அதிகரித்தன.
ஆனாலும் பெரும்பாலான நாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தங்கள் நாடுகளில் விற்பனை செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் இன்னமும் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தொடங்கி நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தொலைதொடர்புத் துறையில் சீன நிறுவனங்கள் சில நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. இப்படி உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களெல்லாம் எல்லா நாடுகளிலும் தங்குதடையின்றி விற்பதற்குப் பெயர்தான் உலகமயமாக்கல்.
இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? உலகமயமாக்கலின் விளைவு, பிற நாட்டின் உற்பத்திப் பொருட்களுக்குக் காரணங்கள் இல்லாமல் தடை விதிக்க முடியாது. இதனால் வெளிநாட்டுப் பொருட்கள் உள்நாட்டில் வெள்ளம் போலப் பாய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அமெரிக்காவில் விளையும் ஆப்பிள்களும் சீனாவில் விளையும் பேரிக்காய்களும் தாராளமாக நமது நாட்டில் குவிந்துகொண்டிருப்பது ஒரு உதாரணம்.
நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இமாச்சலப் பிரதேசத்திலும் காஷ்மீரத்திலும் இருக்கும் விவசாயி விளைவிக்கும் ஆப்பிளுக்குப் போட்டி அமெரிக்காவில் இருந்துவருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு சரக்குக் கப்பல்களில் கொண்டுவந்த பிறகும் அவற்றின் விலை நமது நாட்டு ஆப்பிள்களின் விலையை விடக் குறைவாக விற்க முடிகிறது. உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலை குறைவானதாகவே இருக்கிறது. ஆகவே குறைந்த விலையில் கிடைக்கும் அமெரிக்க ஆப்பிள்களுக்கு முன்பு இந்திய ஆப்பிள்கள் நமது சந்தையிலேயே தோற்றுப்போகின்றன.
இந்தியச் சந்தையில் சீனா
சீனாவிலிருந்து கைபேசிகள் முதல் குண்டூசி வரை ஏராளமான பொருட்கள் மிகக் குறைந்த விலையில் இந்தியச் சந்தைகளில் வந்து குவியத் தொடங்கியுள்ளன. நமது நாட்டில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் பல திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள், காற்றாடிகள், பட்டாசுகள் முதற்கொண்டு பல பொருட்கள் இப்போது சீனாவிலிருந்து குறைந்த விலையில் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன.
ஒரு காலத்தில் மிகவும் பெரிய விஷயமாகக் கருதப்பட்ட கால்குலேட்டர்கள் இன்றைக்குப் பத்து ரூபாயிலிருந்து சீனத் தயாரிப்புகளாகக் கிடைக்கின்றன. இவற்றின் தரம் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனாலும் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய கால்குலேட்டர் இரண்டு மாதங்களுக்கே வந்தாலும் மீண்டும் பத்து ரூபாய் கொடுத்து வாங்க வாடிக்கையாளர் தயங்குவதில்லை. ஏனென்றால் பத்து ரூபாய் என்பது மிகவும் சிறிய தொகை. ஆனால் இதன் மூலம் கால்குலேட்டர் தயாரிக்கும் சீன கம்பெனியானது தனக்கென ஒரு நிரந்தரமான சந்தையைப் பிடித்துக்கொள்கிறது.
ஒரு காலத்தில் அம்பாசிடரும் ஃபியட்டும் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தியச் சாலைகளில் மாருதி கார் ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று? உலகின் முன்னணி கார்கள் எல்லாமே இந்தியாவில் தடையின்றிக் கிடைக்கின்றன. ஒன்றிரண்டு கார் நிறுவனங்கள் தவிர முன்னணி நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவில் கார் தயாரிப்பை மேற்கொண்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர் என்ற முறையில் ஒரு இந்தியக் குடிமகன் சந்தோஷமடையலாம். லேட்டஸ்ட் மாடல் கார் என்னிடம் உள்ளது என்று. ஆனால் இதனால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள்?
அது அடுத்த வாரம்...
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago