வேலையற்றவனின் டைரி 20 - மாலு... மாலு... மாலு...

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

சென்னை போன்ற மாநகரங்களில் வசிக்கும் அத்தனை பேரழகிகளையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடம், ஷாப்பிங் மால்கள். மால்களில், ஒரு வினாடிக்குச் சராசரியாக எட்டு தேவதைகள் க்ராஸ் செய்வதால், 25-30 ஆண்டு ஆதர்ச தம்பதிகள்கூட, மால்களுக்குச் செல்லும்போது, உறவு சீர்குலைந்து ரிட்டர்ன் ஆவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மால்களில் திரும்பிய திசையெங்கும் தேவதைகள்… தேவதைகள். ரத்தத்தில் சீஸும், சாஸும் கலந்த தேவதைகள். சென்னை ஏர்போர்ட் கண்ணாடி உடையும் சத்தம் போல ‘ஸ்லிங்’ ‘ஸ்லிங்’ என்று சிரிக்கும் தேவதைகள். இதனால் அங்கு செல்லும் ஆண்கள், மனிதனாகச் சென்று கவிஞனாக வெளிவருகிறார்கள்.

இக்கட்டுரையை எழுதுவதற்காக, ஏற்கெனவே சில பிரம்மச்சாரி நண்பர்களுடன் மால்களுக்குச் சென்றேன். ஆனால் அவர்கள், “அண்ணன்… அண்ணன்…” என்று அன்புடன் அழைத்து, அண்ணனுடன் பேசக் கூடாத விஷயங்களை எல்லாம் பேசிக்கொண்டே இருந்ததால், எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. எனவே இம்முறை தம்பிகள் இல்லாமல், நான் மட்டும் ஒரு மாலுக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடனேயே கொத்து கொத்தாக திரிந்த இளஞ்ஜோடிகளைப் பார்த்தவுடனேயே, ‘இருபது வருடங்கள் தாமதமாகப் பிறந்திருக்கலாம்’ என்ற சிந்தனை ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. மால் காதலிகள், “நான் அழகா இருக்கனா?” என்று ஆயிரமாவது முறையாக சலிக்காமல் கேட்க, காதலன்கள் கொஞ்சமும் அசராமல் ஆயிரமாவது முறையாக, “யூ ஆர் எ ஒன்லி ஏஞ்சல் இன் தி வேர்ல்ட்” என்று அள்ளிவிட, ஏஞ்சல்கள் ஒரு வினாடி காற்றில் பறந்தார்கள். 2017ன் காதலர்கள், தங்கள் ஐந்தடி உயரக் காதலிகளை “பேபி…” என்று செல்லமாக அழைக்கின்றனர். சோம்பேறி காதலன்கள், அதை இன்னும் சுருக்கி “பே…” என்று அழைக்கிறார்கள்.

நான் காதலர்களைக் கடந்து, குறிப்பு எழுதுவதற்காக எடுத்து வந்திருந்த எஸ்பிஎஸ் சூப்பர் டீலக்ஸ்(?) நோட்டுடன் ஒரு கடைக்குள் நுழைந்தேன். ஷோகேஸில், ஒரு சிறு தங்க நிற லேடீஸ் பர்ஸ் அழகாகக் காட்சியளித்தது. மனைவிக்குப் பரிசளிக்கலாம் என்று கோட், சூட் அணிந்திருந்த விற்பனையாளரிடம் விலை விசாரித்தேன். அவர் புன்னகையுடன், “தேர்ட்டி தவுஸன்ட் ஒன்லி சார்…” என்று கூற, என் சட்டைப் பைக்குள்ளிருந்த ஒற்றை ஐநூறு ரூபாய் நோட்டு விழுந்து விழுந்து சிரித்தது. தொடர்ந்து அவர், “லேடீஸ் செப்பல்ஸ் பாக்குறீங்களா? ஸ்டார்ட்டிங் பிரைஸ் 22, 000. மேக்ஸிமம் 4,20,000” என்றார். நான் அந்த 4,20,000 ரூபாய் செருப்பை பயபக்தியுடன் பார்த்துவிட்டு, “கோயில் வாசல்ல யாராச்சும் தூக்கிட்டுப் போயிட்டா வம்பு” என்று வேகமாக வெளியே வந்துவிட்டேன்.

அடுத்து, குழந்தைகளுக்கான பொம்மைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தேன். ஒரு விற்பனையாளர், கால்களுக்குக் கீழ் சக்கரத்துடன் இருந்த ஒரு சிறு இயந்திரத்தின் மீது நின்றுகொண்டிருக்க, அது தானாக நகர்ந்து என்னை நோக்கி வந்தது. “இது பேரு என்ன?” என்றேன். “இது பேர் ஓவர்போர்டு சார். 30,000 ஒன்லி” என்றார். “ஓ… இதை விட காஸ்ட்லியாக இருக்கா?” என்று நான் கேட்க… “இதுவே ஹேண்டில் வச்சது இருக்கு சார். 80,000 ஒன்லி” என்று கூற நான் எனது சூப்பர் டீலக்ஸ் நோட்டில் விலையைக் குறித்துகொண்டேன். இப்போது விற்பனையாளர் என்னைச் சந்தேகத்துடன் பார்க்க… “நான் டிரைவரு. எங்க ஓனர் கேட்டுட்டு வரச் சொன்னாரு” என்றேன். அவர் அப்போதும் சந்தேகம் விலகாமல், “உங்க ஓனர் நம்பர் தாங்க. நான் பேசுறேன்” என்றார். “அய்யோ… நம்பர் கொடுத்தா, ஓனர் கொன்னுடுவாரு” என்று கூறிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்.

சரி… கடைகளில் நுழைந்தால் சந்தேகப் படுகிறார்கள் என்று தியேட்டர் வளாகத்தில் நுழைந்தேன். அங்கும் சிற்றிளஞ்ஜோடிகள், தோள்கள் ‘டச்ச', டச் ஸ்க்ரீனில், எந்த ஸ்க்ரீனில் டிக்கெட் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆண், “வே கார்னர் சீட்டே இல்ல பேபி…” என்று கூற, அப்போது அந்த பேபியின் முகத்தில் அழகாகத் தெரிந்த

சலிப்பு, வெறுப்பு, காதலும் கலந்த உணர்வை எழுத, கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முயற்சித்தும் சரியாக வரவில்லை. நான் அருகிலிருந்த இளைஞனிடம், “வே கார்னர் சீட்ன்னா?” என்றேன். “அது… டபுள் சீட். ரைட் சைட் ரோவுல‌ நுழையற வழில, கார்னர்ல இருக்கும். அங்க உக்காந்து லவ்வர்ஸ் ஸைலன்ட்டா லவ் பண்ணுவாங்க” என்றான். நான் சூதுவாது தெரியாத, கள்ளங்கபடமில்லாத, வெள்ளை உள்ளம் கொண்ட அப்பாவி என்பதால், “அதெப்படி தம்பி ஸைலன்ட்டா லவ் பண்ணுவாங்க?” என்றேன் வெள்ளந்தியாக. அவன் என்னை முறைத்தபடி நகர்ந்தான்.

நான் அந்த ‘வே கார்னர்’ காதலர்களைப் பார்த்தபடி, ஸ்நாக்ஸ் விற்கும் பகுதிக்குச் சென்றேன். போர்டைப் பத்து நிமிஷம் பார்த்ததில், “ஜோத்பூரி ஹாரி மிர்ச்சி கி சாட்” என்ற ஐட்டம் நூறு ரூபாயில் இருந்தது. அப்படியென்றால் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் அதுதான் விலை குறைவாக இருந்ததாலும், அதன் பெயர் பெரிதாக 5 சொற்களில் இருந்ததாலும், ஏதாவது பெரிதாக தருவார்கள் என்று அதையே ஆர்டர் செய்தேன். அந்த தின்பண்டம் என் கைக்கு வந்தவுடன், எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. “அந்த ஜோத்பூரி …… ……… ……… சாட்ன்னா ஒண்ணுமில்லங்க. நம்மூரு மிளகாய் பஜ்ஜிதான், ரெண்டு பீஸ் இருந்தது. இனிமே ஜென்மத்துக்கும் இங்கே வரக் கூடாது என்று கீழ் தளத்திற்கு இறங்கினேன்.

அங்கே ஒரு பாரைப் பார்த்தேன். உள்ளே சென்று பார்க்கலாம் என்றால், குடிக்காமலேயே தகவல்களை எப்படிச் சேகரிப்பது என்று குழப்பமாக இருந்தது. நிருபர்களெல்லாம் உயிருக்கு அஞ்சாமல், போர்க்களத்திற்கே சென்று தகவல் சேகரிக்கிறார்கள். நம்மால் பார் களத்தில் முடியாதா என்று உள்ளே நுழைந்தேன்.

சினிமாக்களில் காண்பது போல், அரையிருட்டில் மேஜைகள் தெரிய, ஆங்கிலப் பாடல் சத்தம் காதைப் பிளக்க, ஜீன்ஸ், டீஷர்ட்டுடன் இளைஞர்கள் துள்ளத் துடிக்க டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மேஜையில் அமர்ந்த பிறகுதான் கவனித்தேன். சுற்றிலும் நிறைய இளம் பெண்கள் சாவகாசமாக, சரவண பவனில் காஃபி சாப்பிடுவது போல், அரைகுறை ஆடைகளுடன் தண்ணி அடித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது நான்கைந்து இளம்பெண்களும், பசங்களோடு சேர்ந்து, போதையுடன் ஆடிக்கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். உடனே எனக்குள்ளிருந்த அரியலூரான், “அய்யோ… இதுங்களுக்கு ஆயி, அப்பன்ல்லாம் கிடையாதா? பொழுது போன நேரத்துல வயசுப்புள்ளய காணோம்ன்னு தேட மாட்டாங்களா?” என்று புலம்ப… எனக்குள்ளிருந்த சென்னைக்காரன், ‘ஷட் அப். ஆல்வேஸ் எக்ஸ்பெக்ட் தி வொர்ஸ்ட் இன் மெட்ரோ சிட்டீஸ்’ என்று ஆங்கிலத்தில் அதட்ட அரியலூரான் அடங்கினான்.

இதற்குள் பேரர் வந்து மெனு கார்டைக் கொடுக்க, “ஐயம் வெயிட்டிங் ஃபார் எ ஃப்ரண்ட்” என்று கூறிவிட்டு, மெனுகார்டை விரித்து விலைகளைப் பார்த்தேன். ஏதோ ஒயின் விலை 6000 ரூபாய் என்று போட்டிருந்தது. எனது சூப்பர் டீலக்ஸ் நோட்புக்கை எடுத்து விலையைக் குறிக்க… அந்த பேரருக்கு நான் குடிக்க வரவில்லை என்று தெரிந்துவிட்டது. பேரர் அருகில் வந்து, “இன்னும் ஃப்ரண்டு வரலையா?” என்றார். நான் “ஒன் மினிட்… கால் பண்றேன்” என்று என் மொபைலை எடுக்க, பேரரின் சந்தேகம் மேலும் அதிகரித்துவிட்டது. ஏனெனில் நான் ஒரு பழைய 3000 ரூபாய் நோக்கியா ஃபோனை வைத்திருந்தேன்.

பேரர் இப்போது சற்று தள்ளி நின்றுகொண்டு, என்னையே சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எனது டேபிளுக்கு முன்பு, வேறு ஒரு டேபிளில் அமர்ந்திருந்த இளம்பெண்கள், தாங்கள் ஏதோ தஞ்சை பெரிய கோயில், தாஜ்மஹாலில் இருப்பது போல் ஒயின் க்ளாஸ்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ருந்தனர். “நீங்கள்லாம் நல்லா வருவீங்க புள்ளங்களா...” என்று வாழ்த்திவிட்டு, பேரரிடம், ‘ஒன் மினிட்’ என்று கூறிவிட்டு வெளியே வந்தேன்.

இப்போது எனது பயமெல்லாம் வேறு. அந்தப் புள்ளங்க செல்ஃபி எடுத்துச்சுல்ல? அந்த ஒளிப்படத்தில் அவர்களுக்குப் பின்பக்கம், அநேகமாக நானும் இருக்கக்கூடும். அந்தப் படத்தை அவர்கள் வாட்ஸ் அப்பில் ஏற்றி, அதை எனது எதிரிகள் யாராவது பார்த்து, “இளம் பெண்களுடன் ‘இளமை புதுமை’ எழுத்தாளர் கும்மாளம்…” என பரப்பிவிட்டுவிட்டால்... என்று நினைக்கும்போதே பக்கென்று பதறி, குப்பென்று வியர்க்கிறது.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்