போர்த்துக்கீசியர்களின் வருகையால் வியாபாரம் பெருகத் தொடங்கியிருந்த 16-ம் நூற்றாண்டின் கேரளம். நிலப்பிரபுத்துவம் அகங்காரமாக ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். மீன் பிடிக்கும் ஒரு சிறுவனுடன் கதை தொடங்குகிறது. அவனுடைய தந்தை கோயிலில் ‘அருள்’ வழங்குபவராக அறிமுகம் செய்யப்படுகிறார். அப்போது முகத்தில் வண்ணம் பூசிய ஓர் அந்நியன், அவர்கள் வீட்டுக்கு வந்து அவனுடைய தந்தையைப் போரிட அழைக்கிறான். அதுநாள்வரையில் மறைத்துவைத்திருந்த தனது உண்மையான அடையாளத்தை அந்த அந்நியன் வெளிப்படுத்தியதால் அதிர்ச்சி அடைகிறார் அவனுடைய தந்தை. அதன் பிறகு நடக்கும் மோதலில், அவரது தலை துண்டிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்த அந்நியனின் பெயர் ஒடயன் என்பதும் அவன் கேரளத்தின் மலபார் பகுதி அரசருக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிராகப் புரட்சியில் இறங்கி இருப்பதும் தெரியவருகிறது. கைதேர்ந்த சதுரங்க ஆட்டக்காரனின் நேர்த்தியோடு அடுத்தடுத்துப் பல காட்சிகள் அரங்கேற, வேட்டையனும் வேட்டையாடப்படுபவனும் தங்கள் நிலைகளில் மாறிமாறிப் படிப்பவர்களை வசியம் செய்கிறார்கள்.
எதிராளியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து, அதற்கு எதிர்வினையாற்றுவதில் மூன்று முக்கிய அம்சங்கள்: ஒரு போர்த்துக்கீசிய துப்பாக்கி வீரன், மந்திர தந்திரங்கள் அறிந்த ஒரு மூதாட்டி, ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படும் ஒடயனின் சோகம் என்று விறுவிறுப்பாக நகர்கிறது இக்கதை.
புரட்சியின் உதயம்
தச்சொலி ஒதனனைப் பற்றிக் கோழிக்கோட்டில் இருக்கும் வடகரை பகவதியம்மன் கோவிலில் இன்றும் கதை கதையாகச் சொல்கிறார்கள். கேரளத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயிற்றை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து, 64 நேரடி மோதல்களில் வென்ற மாவீரன் அவர். அவரை மனதில் வைத்தே ஒடயன் என்ற கிராஃபிக் நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவரது பெயரைக் குறிக்கும் வகையில் (ஒடய) இருந்தாலும், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான புரட்சியின் உதயமாகவுமே இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
தச்சொலி ஒதனனின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள் இக்கதையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். வடக்கன்பாட்டுகளில் சொல்லப்பட்ட பல நாட்டுப்புறக் கதைகளையும் அழகாகக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார், காமிக்ஸ் ஆசிரியர் சுஹாஸ் சுந்தர்.
நம்முடைய மண் சார்ந்த கதைகளை ஆவணப்படுத்த பல உத்திகள் உள்ளன. அதில் கதைகள் வாயிலாக வெளிப்படுத்துவது காலம்காலமாக பின்பற்றப்பட்டுவரும் ஒரு முறை. அதையே ஒரு கிராஃபிக் நாவல் வடிவில் கொண்டுவர முயன்றிருக்கிறார், கதாசிரியர் சுஹாஸ். மலபார் என்றழைக்கப்பட்ட அந்தக் கால கேரளத்தில் நிலவிய வாழ்க்கைமுறையைக் கதைமாந்தர்களின் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார், சுஹாஸ்.
வண்ணமற்ற ஓவியங்கள்
இந்தக் கதையில் ஒடயனின் முகத்தில் இருக்கும் வண்ணத்தைத் தவிர்த்து, பெரும்பாலான பக்கங்கள் வண்ணமின்றி உருவாக்கப்பட்டுள்ளன. கதையில் இருக்கும் வன்முறையின் அழகியலை வெளிப்படுத்த இது உதவுகிறது என்கிறார் ஓவியர் தீபக் ஷர்மா.
ஒடயனுக்கும் உன்னியார்ச்சாவின் சகோதரனுக்கும் இடையே நடக்கும் சண்டையின்போது, ஒடயனின் தந்திரத்தை வெளிப்படுத்த மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்கை உருவகமாக தீபக் வரைந்து இருக்கிறார். அதைப் போலவே கோணங்களில், அளவீட்டில் என்று எப்படியெல்லாம் வித்தியாசப்படுத்தி ஒரு காட்சியை அளிக்க இயலுமோ, அப்படி வரைந்து சுஹாஸ் சுந்தரின் கதையைத் தொட முடியாத உச்சத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார் தீபக்.
வசனத்தை மிஞ்சும் ஓவியங்கள்
வசனங்களால் பக்கத்தை நிரப்பாமல், ஒரு காமிக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வந்துள்ளது ஒடயன். கூர்மையான கத்தியைப் போன்ற வசனங்கள் புத்தகம் முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. தனது முகத்தில் வண்ணம் இருப்பதற்கான ரகசியத்தை ஒடயன் உடைக்கும்போது, வண்ணம் பூசப்பட்ட முகமும் எப்படி ஒரு அடையாளமாக மாறுகிறது என்பதை விளக்கும்போது, ஓவியங்களும் வசனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடுகின்றன.
ஜப்பானிய மாங்கா கதைகளில் புகழ்பெற்ற ‘லோன் வுல்ஃப் & கப்’ என்ற தொடரைப் போலவே ஒரு தொடரை மண் சார்ந்து உருவாக்க ஆசைப்பட்டார் சுஹாஸ். ஐந்து பாகங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது இந்த கிராஃபிக் நாவல்.
இந்திய காமிக்ஸ் வரலாற்றில் ஒடயன் ஒரு மைல்கல் எனலாம்.
தலைப்பு: ஒடயன் (Odayan) (ஆரம்பம் & யுத்தம்)
கதாசிரியர்: சுஹாஸ் சுந்தர்
ஓவியர்: தீபக் ஷர்மா
வெளியீடு: 2013 (முதல் பாகம்) & 2015 (இரண்டாம் பாகம்).
பதிப்பாளர்: நிடோஹோ மீடியா / பாப் கல்சர்
கதை: 16ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக ஆரம்பித்த புரட்சி.
கதை வரிசை: மொத்தம் ஐந்து பாகங்கள். இந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது பாகம் வர இருக்கிறது.
சிறப்பு: சிறந்த கதைக்கான இந்திய காமிக்-கான் விருது.
சுஹாஸ் சுந்தர்: கேரளத்தைச் சேர்ந்த சுந்தர், பொறியியல் – எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். பணி நிமித்தமாக பெங்களூரு, அமெரிக்கா என்று சுற்றியவர், கார்பரேட் நிதியுதவி பெற்று காமிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது ஜப்பானைச் சேர்ந்த ஒரு அனிமேஷன் நிறுவனத்துடன் இணைந்து கார்ட்டூன் ஷோக்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தீபக் ஷர்மா: கொல்கத்தாவைச் சேர்ந்த தீபக், ரஷ்ய ஓவியரான கென்டி டார்ட்டகோப்ஸ்கியின் அதிதீவிர ரசிகர். தீபக்கின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்த சுஹாஸ், நாம் இருவரும் இணைந்து காமிக்ஸ் தொடர்களைத் தயாரிக்கலாமா என்று கேட்டார். அதன்பிறகு லெவல் 10 காமிக்ஸில் சில கதைகளுக்கு வரைந்துவிட்டு, ஒடயனைத் தொடங்கினார், தீபக்.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு:TamilComicsUlagam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago