மேடம்... கோவிச்சுக்காதீங்க. ‘நெட்' உயரம் கூட இல்லை. அதுக்குள்ள உங்க பொண்ணை டென்னிஸ் கோச்சிங்குக்கு சேர்க்க வந்துட்டீங்களே. ஸாரி மேடம்! நான் இவங்களுக்கு கோச்சிங் தர முடியாது!”
“என் பொண்ணுக்கு டென்னிஸ் கோச்சிங் தர முடியாதுன்னா சொல்லிடுங்க. அவ ரொம்ப சின்னவளா இருக்கா அப்படிங்கிறதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். நான் வேற ஆளைப் பார்த்துக்குறேன்!”
“அப்படியா... சரி. உங்க பொண்ணு எப்படி விளையாடுறாங்கறதைப் பார்க்குறேன். அப்புறம் முடிவு பண்ணலாம்!”
தன்னுடைய ‘ஹிட்டிங் பார்ட்னர்' உடன் சேர்ந்து அந்தச் சின்னப் பெண் தன்னிடம் வரும் பந்துகளை லாவகமாகச் சமாளிக்கிறாள். ‘குட் பால் சென்ஸ்' என்று அந்த கோச் அவளைப் பாராட்டுகிறார். அவளைத் தன் மாணவியாக ஏற்றுக்கொள்கிறார்.
மேற்கண்ட உரையாடல் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தாய்க்கும், சானியாவின் முதல் கோச் ஆன காந்துக்கும் இடையில் நடைபெற்றது. அப்போது சானியாவுக்கு வயது ஏழு!
ஏழு வயதில் டென்னிஸ் விளையாடப் பழகினார். அப்புறம் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். மகளிர் டென்னிஸ் சங்கம், ஆசியன் கேம்ஸ், காமென்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்கள் வென்றார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றார். எல்லாவற்றுக்கும் சேர்த்து மகுடம் வைத்தது போல விம்பிள்டன் போட்டிகளில் கோப்பைகள் வென்றார்.... என்று சொல்லி ‘சுபம்' போட்டு விடக் கூடிய அளவுக்கு இந்தப் பெருமைகள் எல்லாம் சானியாவுக்கு மிகச் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை.
இந்தச் சாதனைகளைப் படைக்க அவர் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது ‘ஏஸ் அனகன்ஸ்ட் ஆட்ஸ்' எனும் புத்தகம். இது சானியா மிர்சாவின் சுயசரிதை. எனினும், சானியாவுடன் சேர்ந்து அவரின் தந்தை இம்ரான் மிர்சாவும், பத்திரிகையாளர் ஷிவானி குப்தாவும் இணைந்து எழுதியுள்ளனர். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பித்த இந்தப் புத்தகம் கடந்த வாரம் வெளியானது.
சானியா ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில், ஹைதராபாத்தில் பிறந்தார். அவரின் தந்தை அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். ‘மிடில் கிளாஸ்' குடும்பம் என்ற நிலை மேலும் கீழே இறங்கியபோது, அவரின் உறவினர்களால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு சில காலம் அவர்கள் தங்கியிருந்தனர். அங்கு இம்ரான் மிர்சா சம்பாதிப்பது வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது. இம்ரான் தன் கவலைகளை மறக்க அவ்வப்போது டென்னிஸ் விளையாடுவார். அப்போது தன்னுடன் சானியாவையும் அழைத்துச் செல்வார். இப்படித்தான் சானியாவுக்கு டென்னிஸ் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. ஆனால் அவரை நல்ல கோச்சிங் மையத்தில் சேர்த்து விடத் தங்களின் பொருளாதார நிலை அனுமதிக்காததை நினைத்து, சானியாவின் தாய் அழுதார்.
பிறகு அவர்கள் இந்தியா வந்தவுடன் நடைபெற்றதுதான் மேற்கண்ட உரையாடல். ஆம். சானியாவின் டென்னிஸ் வாழ்க்கை கண்ணீருடன்தான் ஆரம்பிக்கிறது. கண்ணீருடன்தான் இப்போதும் அவரின் ‘ரேங்க்கிங்' உயர்கிறது. காரணம், அவ்வப்போது அவரைச் சுற்றி எழும்பும் சர்ச்சைகள்.
இதுவரையிலான உலக டென்னிஸ் வரலாற்றில் ‘பெஸ்ட் ஃபோர்ஹேண்ட்' திறன் உடைய மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளில் சானியாவுக்கு முதல் ஐந்து இடங்களில் இடம் உண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அந்தத் திறமையை இழக்கும் அளவுக்கு அவரின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர், கால்கள், மூட்டுப் பகுதிகள், வயிறு, முதுகு என அவருக்குக் காயம் படாத இடங்களே இல்லை. இந்தக் காயங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு கட்டத்தில் அவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களுக்கு விடை கொடுக்க நேர்ந்தது. தனது டென்னிஸ் வாழ்க்கையில், அவர் மேற்கொண்ட முடிவுகளில் மிகச் சிறந்த முடிவு அது!
அதன் பிறகு இன்னொரு பிரபல வீராங்கனையான மார்டினா ஹிங்கிஸ் உடன் சேர்ந்து மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் சானியா கவனம் செலுத்தினார். விளைவு அடுத்தடுத்து ‘கிராண்ட் ஸ்லாம்' பட்டங்களாக வாங்கிக் குவிக்கிறார். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தின் சில மாதங்கள் வரை இந்த ஜோடி இடைவிடாது வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கை 41. தற்சமயம் மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர் ஒன்' ஜோடி ‘சான்டினா' (சானியா, மார்டினா ஆகிய பெயர்களின் சுருக்கம்) தான்.
தன் உடலில் ஏற்பட்ட காயங்களால் சானியா அழுததை விட ஊடகங்களின் தவறான சித்தரிப்புகளால் அவர் அழுததுதான் அதிகமாக இருக்கும்.
தான் அணிந்திருக்கும் மூக்குத்தி பற்றி, குட்டைப் பாவாடை பற்றி, மசூதியை ‘அவமதித்தது’ பற்றி, தேசியக் கொடியை ‘அவமதித்தது ’பற்றி, லண்டன் ஒலிம்பிக் போட்டி சமயத்தில் தனக்கான ‘பார்ட்னரை' தேர்வு செய்யும் உரிமை பறிபோனது பற்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்தது பற்றி... எனப் பல பிரச்சினைகள் அவரைப் ‘பற்றிப் பற்றி' தொடர காரணமாக இருப்பது அவரின் ‘கிளாமர்'. அதனால்தான் அவர் ‘மீடியா டிலைட்' ஆகவும் இருக்கிறார். இந்தியாவின் முதல் ‘கிராண்ட் ஸ்லாம்' வீராங்கனை அழகாக இருப்பது அவரின் பிரச்சினை இல்லையே.
‘துறுதுறு' வேகமும், ‘தடதட' ஓட்டமும் தேவைப்படுகிற டென்னிஸ் விளையாட்டில், அதற்கேற்ற உடை அணிவது வீரர்களின் தேர்வு. சானியாவும் அப்படித்தான் இருந்தார். இது சில அடிப்படைவாதிகளின் கண்களை உறுத்தியது. சானியா மீது ‘ஃபத்வா' விடுக்கப்பட்டது.
இந்த ‘ஃபத்வா' குறித்து இந்தப் புத்தகத்தில் அவர் விளக்கம் தருகிறார். அதனுடைய சாராம்சம் இதுதான்:
“அகராதியின் படி, ‘ஃபத்வா' எனும் அரபுச் சொல்லுக்கு ‘கருத்து' என்ற அர்த்தம் வரும். குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு இஸ்லாமிய மார்க்க நெறிகளின் படி, ‘முஃப்தி' எனும் மதகுரு தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதுதான் ஃபத்வா. அது ஒரு அறிவுரை. அவ்வளவுதான்.
நான் அணிந்திருக்கும் உடை குறித்து குறிப்பிட்ட அந்த நிருபருக்கு ஏன் அவ்வளவு ஆர்வம் எனத் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு மார்க்க அறிஞரிடம் கருத்து கேட்டால் அவர் ‘இதெல்லாம் சரியில்லை' என்றுதான் சொல்வார். அதே மார்க்க அறிஞரிடம் தொலைக்காட்சியில் பெண்கள் ஆடிப் பாடுவதைப் பார்க்கும் இஸ்லாமிய ஆண்கள் குறித்து கருத்து கேட்டால், முற்றிலும் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு கருத்தைத்தான் சொல்வார்.
ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால், இவ்வாறு அறிவிக்கப்படும் ‘ஃபத்வா' என்பதை, குறிப்பிட்ட ஆணையோ, பெண்ணையோ கொல்வதற்கான அனுமதி என்ற பொருளில் புரிந்து கொள்வது தவறு.
என்னைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு தனிநபரும் தனக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்கிறார். ஆனால், நான் கடவுள் விதிக்கும் விதி மற்றும் விருப்பத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தச் சர்ச்சையில், தனிப்பட்ட விதத்திலும், பொதுவெளியிலும் நான்தான் பலிகடா ஆனேன். மற்றவர்கள் தப்பிவிட்டனர். இதெல்லாம் கடவுளின் விருப்பமாகவும் இருக்கலாம். என்னுடைய பாவங்களுக்கான தண்டனையாகவும் இருக்கலாம். எனினும், என்றேனும் ஒரு நாள் இந்த விஷயங்கள் குறித்து நானும் ‘ஃபத்வா' கேட்பேன்!”
இப்படிப் பல பிரச்சினைகளுக்கிடையில், தொடர்ந்து தன் விளையாட்டின் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்தி வரும் சானியா சொல்லும் ‘சக்சஸ் சீக்ரெட்' என்ன தெரியுமா?
“கடினமாக உழைக்கத் தயாராக இருங்கள். ஏனென்றால் வலி தற்காலிகமானது. வெற்றியோ நிரந்தரமானது!”
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago