படித்த பள்ளியிலேயே ஆசிரியராக வேலை கிடைத்தால் சந்தோஷம். அதைவிட இரட்டிப்பு சந்தோஷம், இசை கற்றுக் கொடுத்த குருவே தன்னுடைய மாணவியின் இசையமைப்பில் பாடி அவரை ஆசீர்வதிப்பது. அந்தப் பெருந்தன்மைக்குரிய குரு, இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா.
அந்த அதிர்ஷ்டக்கார மாணவி எஸ்.ஜே. ஜனனி!
பவதாரிணி, ரெஹைனா, ஸ்ருதி ஹாசன் என இசை அமைப்பாளராகத் தமிழ் சினிமாவில் மெட்டுப் போட்ட பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நந்தன் இயக்கும் ‘பிரபா’ என்னும் திரைப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் இந்த வரிசையில் சேர்கிறார் 22 வயதேயான ஜனனி.
இசையால் ஒரு போராட்டம்
போராட்ட குணமுள்ள ஒரு பெண்ணைப் பற்றிய கதைதான் ‘பிரபா’. முதல்முதலாக ஜனனி இசையமைப்பது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கர்னாட்டிக், வெஸ்டர்ன் கிளாஸிக்கல் இரண்டையும் முறையாகப் படித்திருக்கும் இவர், ஏறக்குறைய எட்டுக்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். “சினிமாவுக்கு இசையமைக்க அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு நான் ரெடியாகவே இருந்தேன். ஆனால், நந்தன் சார், ஒரே வாரத்துல பாடல்களை முடிக்கணும் என்று சொன்னபோது, ஒரு நிமிடம் யோசித்தேன். பிறகு, சவாலா எடுத்துக்கிட்டு கம்போஸிங்கிற்குத் தயாரானேன். கம்போஸிங், ரிதம், அரேஞ்ச்மென்ட் எல்லாவற்றையும் ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன். இடையில் என்னோட எம்.ஃபில்., செமஸ்டர் எக்ஸாமையும் பேலன்ஸ் பண்ண வேண்டியிருந்தது” என்கிறார் ஜனனி.
வாத்தியங்களில் புதுமை
ஹார்ப், ஷாஹி பாஜா, பஹ்ரைனி, அக்லென், ஹவுட், ஹார்மோனிகா, அக்கார்டின்… இவை எல்லாம் என்ன தெரியுமா? இவை எல்லாமே ஜனனி, இசையமைப்பதற்குப் பயன்படுத்தியிருக்கும் வாத்தியங்கள். தற்போது இசையமைப்பதற்கு அதிகம் பயன்படுத்தாத பல ஸ்டிரிங், ரிதம், புளோவிங் இன்ஸ்ட்ரூமென்ட்களை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். 80 சதவீதம் (live music orchestra) வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கும்படி இசையமைத்திருக்கிறார்.
குருவின் ஆசீர்வாதம்
தன்னுடைய குரு பாலமுரளி கிருஷ்ணா, ‘உனக்காக பாடுவேன்’ என்று ஆசீர்வதித்து பாடியதை நெகிழ்ச்சியோடு சொல்ல ஆரம்பித்தார். “இந்த வயதிலும் என்னுடைய குருநாதருக்கு இருக்கும் டெடிகேஷன் யாருக்கும் வராது. அவரை ரிகார்டிங் தியேட்டருக்கு அழைத்துக் கொண்டுவருவதற்காக என்னுடைய அம்மா அவருக்கு போன் செய்திருக்கிறார். போனை எடுத்த உதவியாளர், சாரிடம் “எத்தனை மணிக்கு வருவது என்று கேட்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார். என்னுடைய குருஜியோ, போன் செய்தது என்னுடைய அம்மாதான் என்பதை அறியாமல், “இன்னைக்கு நான் யாரையும் பார்க்க முடியாது. யாரையும் வரச்சொல்லாதே. எல்லா புரோக்ராமும் கேன்சல் பண்ணிடு. எனக்கு ரிகார்டிங் இருக்கு” என்று சொல்லி விட்டாராம்.
ரிகார்டிங் தியேட்டரில் பாட்டை வாங்கிப் பார்த்து இரண்டு மூன்று முறை என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான்… அவரின் குரலில் ‘பூவே…’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை ஒரே டேக்கில் பாடிவிட்டார்! அதோடு அதையே பேதஸாகவும் பாடிக் கொடுத்தார். “பாடி முடித்ததும். திருப்தியா… உன்னோட திருப்திதான் முக்கியம்” என்றார். எனக்கு றெக்கை முளைக்காததுதான் குறை…” என்றவர் படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாட்டை ரிகார்டிங் செய்த அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தார்.
உணர்வுகளைப் பேசும் இசை
குழந்தையை மீட்கப் போராடும் தாயின் போராட்டம். இதுதான் படத்தின் ‘பிரபா’ படத்தின் ஒன்-லைன். ஆனாலும் டூயட், பேதோஸ், மான்டேஜ் ஸாங், குத்துப்பாட்டு… என எல்லாப் பாடல்களையும் வைப்பதற்கு ஏற்ற சிச்சுவேஷன்கள் ஜனனிக்குக் கிடைத்திருக் கின்றன. “ஏதோ பாடல் வரிகளுக்கு டியூன் போட்டோம் என்றில்லாமல் ஒவ்வொரு பாட்டிலும் அந்த சிச்சுவேஷனுக்கான ‘மூட்’ இசையில் வெளிப்படும் என்று சொல்லும் ஜனனி, “அந்த ‘மூட்’ சிறிதும் தங்களின் குரலில் குறையாமல் ஹரிஹரன், ஸ்வேதா மோகன், விஜய் பிரகாஷ் ஆகியோர் பாடியிருக்கின்றனர்” என்கிறார்.
“என்னோட யு.ஜி. படித்த ஃபிரண்ட் – சவும்யா. காலேஜ் கல்சுரல்ஸ்களில் எல்லாம் பாடுவார். அவரை “சும்மா டிராக் பாடிட்டு போ என்று கூப்பிட்டு ‘வா மாமா வயசுக் கோளாறு… வத்திப்போச்சு பாலாறு...’ என்னும் பாடலைப் பாடவைத்தேன். அவரின் குரல் டைரக்டருக்குப் பிடித்துப் போய்விடவே, அவரையே மெயின் சிங்கராக அந்தப் பாடலைப் பாடினார். ஆக, முதல் படத்திலேயே ஒரு பின்னணிப் பாடகியை அறிமுகப்படுத்திய திருப்தியும் எனக்குக் கிடைச்சிருக்கு” என்றார் அந்தப் பாடலை மெலிதாக ‘ஹம்’ செய்தபடி ஜனனி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago