ஒரு பக்கம் ‘தல - தளபதி' பக்தர்களின் சொற்போர், மறுபக்கம் முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்கில் இருந்தபடியே நொடிதோறும் ட்விட்டரில் கொட்டும் ‘ஸீன் பை ஸீன்' ரிவ்யூக்கள்... சமூக வலைதளங்களில் உள்ள இந்த விசித்திரங்களுக்கு இடையே சத்தமின்றி ஆக்கபூர்வமாகவும் இயங்கிவருகின்றன சில ஃபேஸ்புக் குழுக்கள்.
இத்தகைய ‘க்ளோஸ்ட் குரூப்'களில் ஒன்றாக, தமிழ் பேசும் தீவிர சினிமா ஆர்வல நெட்டிசன்களின் தாகத்தைத் தீர்த்துவருகிறது ‘தேர்ஸ்ட் ஃபார் சினிமா' ஃபேஸ்புக் குழு ( >https://www.facebook.com/groups/ThirstForCinemas/). திரைப்பட மாணவர்கள் தொடங்கி ஐ.டி. பணியாளர்கள் வரை வெவ்வேறு துறைகளில் இயங்கிவரும் இளைஞர்களான பரத், தீபன், ஸ்ரீ, மனோரஞ்சன், புவனேஷ், குரு, செல்வகுமார் ஆகியோரால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொங்கப்பட்ட இந்தக் குழுவில் தற்போது 13,500 உறுப்பினர்கள்.
உள்ளூர் உலக சினிமா முதல் வெளிநாட்டு உள்ளூர் படங்கள் வரை திரைப்படங்கள் குறித்த பகிர்வுக்கும் விவாதத்துக்கும் வித்திடும் இந்தக் குழு, தமிழில் ஃபேஸ்புக்கில் உலவும் பலரிடையே ரொம்பவும் பிரபலம்.
‘தர்ஸ்ட் ஃபார் சினிமா' குரூப் உருவானதன் பின்னணி குறித்து அதன் நிர்வாகிகளுள் ஒருவரான பரத் கூறும்போது, "நாங்கள் ஏழு பேரும் ஃபேஸ்புக்கில் வேறொரு திரைப்படக் குழுவின் ஃபாலோயர்ஸ் ஆக இருந்தோம். ஆனால், அந்தக் குழுவில் சினிமா சார்ந்த கருத்துகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. வேறு சில கசப்பான அனுபவங்களால் நாங்கள் ஏழு பேரும் வெளியேறி, தீவிர சினிமாவை விவாதிக்கத் தனிக் குழுவை உருவாக்கினோம். அதுதான் ‘தர்ஸ்ட் ஃபார் சினிமா'. இந்தப் பக்கம் முழுக்க முழுக்க சினிமா மீது உண்மையிலேயே ஆர்வம் கொண்டவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டோம்.
சினிமா நட்சத்திரங்களின் புகழ்ப்பாடும் தளமாக இல்லாமல் தமிழ், இந்திய மற்றும் உலக மொழிகளில் வெளியாகும் நல்ல படைப்புகளை விமர்சிக்கும், ஆராதிக்கும் களமாக மாற்றினோம். முதலில் எங்கள் குழுவை நாங்கள் ஏழு பேர் மட்டுமே நிர்வகித்தோம். அதன்பின், ஃபாலோயர்களும் பகிர்வுகளும் வெகுவாகக் கூடியதால், எங்களைப் போல ஆர்வமுள்ள 50 பேரிடம் நிர்வகிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் குழுவின் தேவையற்ற கருத்துகளும் பதிவுகளும் பகிரப்படுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பாளர்களாகவே இவர்கள் செயல்பட்டுவருகின்றனர்" என்றார்.
தொடக்கத்தில் இந்தக் குழுவில் பகிர்தல் குறைவாகவே இருந்தது. நாளடைவில் ஆயிரக்கணக்கானோர் இணைந்ததால் பகிர்வுகளும் குவியத் தொடங்கின. ஒவ்வொரு மணி நேரமும் நிறைய பதிவுகள் இடப்படுகின்றன. அவற்றில் பல பகிரப்படுகின்றன. இதனைச் சமாளிக்க யாருக்கும் பயனளிக்காத பதிவுகள், தங்கள் நாயகர்களைப் பிரபலப்படுத்தும் செய்திகள், குறிப்பிட்ட தளங்களுக்குச் சாதகமான பதிவுகளை நீக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் இதன் நிர்வாகிகள்.
"எங்கள் குழுவில் இணைய விரும்புபவர்களிடம் தகுதிகள் எதையும் பெரிதாகப் பார்ப்பதில்லை. ஒருவர் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தின் பதிவுகள் அனைத்தையும் பார்ப்போம். போலியான பக்கம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு அனுமதிப்போம். நாங்கள் வகுத்துள்ள, எளிதில் பின்பற்றத்தக்க விதிமுறைகளை உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்" என்று மேலும் சில தகவல்களைத் தந்தார் பரத்.
குழுவின் இன்னொரு நிர்வாகி தீபன் தங்கள் குழுவில் விவாதிக்கப்படும் விஷயங்கள் பற்றி விவரிக்கும்போது, "நம் சினிமா அடைந்து வரும் மாற்றங்கள் போலவே பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் சரியான மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்கள் அத்தியாவசியமான இந்தக் காலகட்டத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருமே தங்கள் அளவில் விமர்சகர்கள் ஆகிறார்கள். ஒரு படம் ரிலீஸானதும் அது எந்த அளவுக்கு ரசிக்கத்தக்கது என்பதை முதல் நாளிலேயே எங்கள் குழுவில் விவாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக, வர்த்தக ரீதியில் அதிகம் கவனம் பெறாத படங்களை மிகப் பரவலாக எடுத்துச் செல்லும் பணியை ஒரு கடமையாகவே எண்ணி சினிமா ஆர்வலர்கள் செய்கிறார்கள். எப்போதோ வெளிவந்து அன்று வர்த்தகக் கவனம் ஈர்க்காத படங்களுள் ஒன்று ‘ஆரண்ய காண்டம்'. ஆனால், இன்றும் அப்படம் பற்றி எங்கள் களத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன" என்றார்.
உலக சினிமா மற்றும் தமிழ்ப் படங்கள் தவிர, இதர இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளும் இங்கே கொண்டாடப்படுகின்றன. சமீபத்தில் கூட ‘சைராட்' என்ற மராத்தி மொழித் திரைப்படம் எங்கள் குழுவில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஒரு சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பாடத்தை ரசிகர்கள் சக ரசிகர்களுக்காக நடத்தும் சமூக ஊடக பயிலரங்கமாகவே இந்தக் குழு பார்க்கப்படுகிறது. ஒரே படம் குறித்த பல கோணங்களை ஒரே இடத்தில் பகிர்ந்துகொள்ளவும் படிக்கவும் இங்கு வழிவகுக்கப்படுகிறது. இது, நம் சமூகத்தில் நல்ல படைப்புகள் உருவாகும் உத்வேகக் காரணிகளில் ஒன்றாகவும் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் சில உறுப்பினர்கள்.
தீபன் மேலும் கூறும்போது, "இந்தக் குழுவின் உறுப்பினர்களாகி நட்புடன் விவாதித்துக்கொள்பவர்கள் நேரில் இணைந்து சினிமா, குறும்படங்கள் சார்ந்து இயங்குவதும் நிகழ்கிறது" என்றார்.
மெய்நிகர் உலகில் மட்டுமின்றி, இந்த ஃபேஸ்புக் குழுவினர் நேரில் சந்தித்தும் சினிமாவைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது குடில்கள் அமைத்துப் படங்கள் காண்பது, அங்கேயே கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, விவாதிப்பது போன்றவை நடைபெறுகின்றன. தங்கள் பயணத்தின் ஊடாக ஆங்காங்கே உள்ள திரையரங்குகளுக்குச் சென்று மக்களுடன் படத்தை ரசிப்பதும் இவர்களது பாணி.
தங்கள் குழுவின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம் குறித்தும், அதன் மூலம் கிடைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்தவர்கள், "எங்களின் இந்தச் செயல்பாடுகள் மசாலா படங்களிலிருந்து சிறப்பான சினிமாவை நோக்கிச் செல்லும் ஒரு முயற்சி. இப்போது கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்து எங்கள் குழுவுக்காக தனியாகவே ஒரு வலைதளத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்துவருகிறோம்" என்கிறார்கள் உற்சாகமாக.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago