‘சென்னை வீக்எண்ட் ஆர்டிஸ்ட்ஸ்’ என்னும் ஓவியர்கள் குழு, 377-வது மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் விதமாக லலித் கலா அகாடமியில் ஆகஸ்ட் 22-ம் தேதியிலிருந்து 28-ம் தேதிவரை ஓவியக் காட்சியை நடத்துகிறது.
‘சிடபிள்யூஏ’ (CWA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தக் குழு, 2012லிருந்து செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையில் ஏதாவது ஓர் இடத்தில் ஒன்றுகூடி வரைவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் இந்தக் குழுவினர். அப்படி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, இவர்கள் பதிவுசெய்துவந்த சென்னை மாநகரத்தின் பன்முக அழகு இந்த ஓவியக் காட்சியில் ஓவியங்களாக விரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு ஓவியர்களின் 250 ஓவியங்கள் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஓவியக் காட்சியின் ஒரு பகுதியாக ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மனோஹர் நடராஜன் போன்றவர்களின் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ‘சிடபிள்யூஏ’ குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரான முரளிதரன் அழகர், பெங்களூரில் வசித்தபோது ‘பெங்களூர் வீக்எண்ட் டிராயிங் கிளப்’பில் செயல்பட்டுவந்திருக்கிறார். அவர் சென்னைக்கு வந்தவுடன், இங்கும் அப்படி ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அப்படிதான், 2012-ல் அவரும் கணபதி சுப்பிரமணியம் என்பவரும் இணைந்து ‘சிடபிள்யூஏ’ குழுவை உருவாகியிருக்கிறார்கள். “எங்களுடைய குழுவில் பல்வேறு தளங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள், தொழில்முறை ஓவியர்கள் என எல்லாத் தரப்பினரும் இருக்கின்றனர். வரைய வேண்டும் என்ற அடிப்படையான ஆர்வமிருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தி வரைய வைப்பதுதான் எங்கள் குழுவின் நோக்கம்” என்று சொல்கிறார் முரளிதரன் அழகர்.
ஏற்கெனவே, மெட்ராஸ் தினக் கொண்டாட்டத்தில் ‘சிடபிள்யூஏ’ குழுவினரின் ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் ஓவியக் காட்சியை முதன்முறையாக இவர்களே ஒருங்கிணைத்திருக்கின்றனர். “சென்னையில் ஒவ்வொரு வாரமும் நாங்கள் சென்று வரைந்த இடங்களின் ஓவியங்களோடு, எங்கள் குழுவினரின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ‘டிரிப்ளட்ஸ்’ (triplets) என்ற தலைப்பிலும் ஓவியங்களை வைத்திருக்கிறோம். ஒரே கருப்பொருளில் வரையப்பட்டிருக்கும் மூன்று ஓவியங்களின் தொகுப்பு இது” என்கிறார் முரளிதரன் அழகர்.
இந்தக் காட்சியில் சென்னையின் கடலோரக் காட்சிகள், அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள், பூங்காக்கள், நீர்நிலைகள், கோவில்கள், ஜார்ஜ் டவுன் போன்ற பழைய மெட்ராஸ் இடங்கள் முதலான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த ஓவியக் காட்சியில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்களின் ஓவியங்கள் ‘டிரிப்ளட்ஸ்’ பகுதியில் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. புத்தரை அமைதி, அதிகாரம், புனிதம் என மூன்று நிலைகளில் சீனாவின் ‘பேப்பர் கட்டிங் ஸ்டைலில்’ வரைந்திருக்கிறார் வினோத் குமார். இவர் தொழில்முறை ஓவியர். “இந்தக் குழுவின் செயல்பாடுகள் ஓர் ஓவிய இயக்கமாக உருபெற்றால் கலைத் துறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்தக் குழு என்னைப் போன்ற ஓவியர்களுக்கு ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தருகிறது” என்கிறார் இவர்.
இருபத்தைந்து வயதாகும் பரத்வாஜ், தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘சிடபிள்யூஏ’வில் செயல்பட்டுவருகிறார். இவர் சிற்பங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று ஓவியங்களை வரைந்திருக்கிறார். “எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ஓவியக் கலையை இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ள இந்தக் குழு பெரிய உதவி செய்கிறது. வார இறுதியில் என்னைப் போன்றே ஆர்வமிருக்கும் நபர்களுடன் சேர்ந்து வரைவது அலாதியான அனுபவம்” என்கிறார் பரத்வாஜ்.
பரபரப்பான நகர வாழ்க்கையின் வேலை பளுக்கிடையில், வீக்எண்டை ஓவியம் வரைவதற்காக ஒதுக்குவது பெரிய ஆறுதலாக இருக்கிறது என்று சொல்லும் லிஜு, “இந்தக் குழுவில் செயல்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. குழுவினர் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய இடத்தேர்வை ஆலோசனையாகச் சொல்லலாம். மூத்த ஓவியக் கலைஞர்களின் ஆலோசனைகளும் நேரடியாக எங்களுக்குக் கிடைக்கின்றன. இந்தக் குழுவில் இயங்குவது தொடர்ந்து ஓவியங்கள் வரைய வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கிறது” என்கிறார்.
‘சென்னை வீக்எண்ட் ஆர்டிஸ்ட்ஸ்’ குழுவினரின் செயல்பாடுகள் ஃபேஸ்புக்கில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தக் குழுவில் உறுப்பினராகுவதற்குப் பெரிய விதிமுறை எதுவும் இல்லை. ஆர்வமுடன் தொடர்ந்து ‘சிடபிள்யூஏ’வின் செயல்பாடுகளில் கலந்துகொண்டாலே போதுமானது.
மேலும் விவரங்களுக்கு: > https://www.facebook.com/groups/ChennaiWeekendArtists/
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago