ஓரிடத்தில் மொத்தமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடினால் அந்த இடம் எப்படியான கலகலப்பு கொண்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கே இப்படி என்றால், லட்சக்கணக்கில் மாணவர்கள் திரண்டால் எப்படி இருக்கும்? அதுவும் அந்தத் திரட்சி ஒரு கேளிக்கைக்காக என்பதல்லாமல் ஒரு சமூகக் காரியத்துக்காக என்று நினைக்கும்போது, மாணவர்கள் குறித்தான நமது நம்பிக்கை பெருகத்தானே செய்கிறது. அப்படி நம்பிக்கை கொள்ளும் வகையில் தமிழரின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் திரண்டார்கள் மாணவர்கள். வெறும் ஐம்பது அறுபது பேருடன் தொடங்கிய மாணவர்கள் லட்சக்கணக்காக மாறினார்கள். அவர்கள் கையிலிருந்த கைபேசி, உலகை அவர்களை நோக்கித் திருப்பியது.
மாணவர்களின் ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காதது. கடற்கரையின் பரப்பெங்கும் அவர்களின் முழக்கங்களைச் சுமந்து சென்ற காற்றே சுவாசத்துக்குக் கிட்டியது. அண்ணா சதுக்கம் தொடங்கி கலங்கரை விளக்கம்வரை உற்சாகத்துடன் அவர்கள் நடைபோட்டார்கள். விதவிதமான பதாகைகளைத் தாங்கிய வாகனங்களில் மாணவர்கள் கடற்கரைச் சாலையை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.
போக்குவரத்தைக்கூட அவர்களே ஒழுங்குசெய்தார்கள். தாங்கள் யாரென உலகுக்குக் காட்டும் முனைப்புடன் இயங்குவது போலத் தோன்றினார்கள். யாராவதொரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி இந்த நிகழ்வைக் கவனித்திருந்தால் இதில் வெளிப்படும் கோலாகலத்தையும் கொண்டாட்டத்தையும் மீறி, அது ஒரு போராட்டம் என்பதை அவரால் உள்வாங்கிக்கொண்டிருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படி ஒரு உற்சாகத்துடன் செயல்பட்டார்கள் இளைஞர்கள். அது மிகப் பெரிய குடும்ப விழா போல் சூல் கொண்டிருந்தது. ஆண், பெண், இளைஞர், முதியவர், குழந்தை என்ற எந்தப் பேதமுமின்றி, சாதி, சமயப் பூசலின்றி அனைத்து வகையான வேறுபாடுகளையும் களைந்துவிட்டுத் ‘தமிழர்’ என்ற ஒரே இழையில் அவர்கள் இணைந்திருந்தார்கள்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தமிழக மாணவர்கள் இப்போதுதான் இவ்வளவு எழுச்சியுடன் திரண்டிருக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த சூழலில், அவர்கள் காட்டிய கண்ணியமும் கட்டுப்பாடும் இந்தியாவை மட்டுமல்ல உலகின் பிற நாட்டினரையும் வியப்புக்கொள்ள வைத்திருக்கின்றன. எந்நேரமும் தலைகவிழ்ந்து தங்கள் கைபேசியை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்கள். இப்போதோ மக்களனைவரும் தலைநிமிர்ந்து அவர்களைக் கவனிக்கும் சூழலை உருவாக்கினார்கள்.
மாணவர்கள் போராட்டம் நடத்துவதும், தங்கள் உரிமைகளுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதும் உலகெங்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட விஷயம்தான். ஆனால், மெரினா போராட்டத்தைப் பொறுத்தவரை இது பிற போராட்டங்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம், அது நடத்தப்பட்ட விதம். கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல், இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட நாள்களில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வந்த மாணவர்களே, சென்னைப் புறநகர் ரயில்களில் நிறைந்திருந்தனர்.
ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் மாணவர்களின் முழக்கம் விண்ணை அதிரவைத்தது. அதே நேரத்தில் அந்த ரயிலில் வரும் எந்தப் பயணிக்கும் அவர்கள் இடையூறு செய்யவில்லை. அவர்கள் ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். இந்த இங்கிதத்தை அறிந்த மாணவர்களாக பொதுச் சமூகத்தால் அவர்கள் கருதப்படாதவர்கள் என்பதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியதிருக்கிறது.
போராட்டக் களமாக மெரினா தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலா, திட்டமிட்ட செயலா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தக் களம் இத்தகைய மக்கள் திரளுக்கு நெகிழ்ந்துகொடுத்தது. போராட்ட நாள்களில் மெரினா முழுக்க முழுக்க மாணவர்களாலும் இளைஞர்களாலும் நிரம்பி வழிந்தது. இவர்களைத் தவிர குடும்பம் குடும்பமாக மெரினாவுக்குத் திரண்டு வந்து, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தந்து மகிழ்ந்தனர் தமிழர்கள். என்னதான் உணர்வுடன் போராடினாலும் சில நாட்களில் போராட்டக் குழுவுக்கு ஒரு அயர்ச்சி ஏற்பட்டுவிடும்.
ஆனால், இந்தப் போராட்டக் குழுவினர் அயர்ச்சி இன்றிப் போராடினார்கள். உரிமைக்காகப் போராடுகிறோம் என்ற உணர்வுடன் இரவு பகல் பாராது, எப்போதும் துள்ளித் திரியும் உற்சாகத்துடன் மெரினாவை வளையவந்தார்கள். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் சுழற்சி முறையில் கலந்துகொண்டார்கள் என்றுதான் கருத முடிகிறது. ஒரு நீரோட்டத்தில் நீர் தேங்காமல் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் மாணவர்கள் காணப்பட்டார்கள்.
கிராமத்து பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தின் முன்னே திரளுவது போல், மெரினாவில் ஆங்காங்கே சிறு சிறு குழுவாகப் பிரிந்து அமர்ந்திருந்தனர். அவர்களிடையே பல்வேறு பிரிவினர் ஜல்லிக்கட்டு பற்றியும் தமிழர் நலன் பற்றியும், நமது பாரம்பரிய விவசாயம் பற்றியும் உரையாற்றியவண்ணம் இருந்தனர். அனைவருக்குமான மேடையாக அது பயன்பட்டது. அதில் பல கருத்துகள் பேசப்பட்டன. பேச விருப்பம் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டது. இரவில் பதினோரு மணி தொடங்கி அதிகாலை 3 மணிவரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை தங்கள் கைபேசியை ஒளியூட்டி அதைக் கையுயர்த்திக் காட்டி கடற்கரை முழுவதையும் ஒளிப்புள்ளிகளாலான கோலம் போல மாற்றினார்கள். இப்படித் தங்களைத் தாங்களே அவர்கள் உற்சாகப்படுத்திக்கொண்டார்கள். தலைமை இல்லாத போதும், ஓர் ஒழுங்கைப் பின்பற்றினார்கள். கடற்கரையில் தவறிய குழந்தைகளையும் தொலைந்துபோன பொருள்களையும் உரியவரிடம் ஒப்படைத்தார்கள். இப்படித்தான் நடைபெற்றது இந்தப் போராட்டம்.
ஏழு நாட்களாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின் வழியே மாணவர்கள், தமிழரின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டை நடத்த நிலவிய தடையை அகற்றவைத்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றத் தவறிய காரியத்தை இந்த மாணவர் போராட்டம் நிறைவேற்ற வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாகத் தமிழக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது அவசரச் சட்டம் என்றபோதும் இதை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மாணவர் திரட்டிய மக்கள் திரளால் இப்படியொரு வெற்றியைப் பெற முடிந்தது குறித்த பெருமிதம் மாணவர்களிடம் உலவுவதைக் காணமுடிகிறது. அரசியல் என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன என்பன போன்ற பல விஷயங்களை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது இந்தப் போராட்டம் என்பதே யதார்த்தம்.
இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்கள் அனைத்தும் ஷிவ கிருஷ்ணா என்பவர் எடுத்தவை. அவரின் இதர ஒளிப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும்: >https://www.facebook.com/shivakrishnaphoto?hc_ref=NEWSFEED
வன்முறை என்னும் கரும்புள்ளி
தொடங்கியது முதல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமுகமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டத்துக்கு வன்முறை என்ற கரும்புள்ளி முற்றுப்புள்ளியாக அமைந்தது துரதிர்ஷ்டம். உறுதியாக அப்படிச் சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. அதுவரையான அமைதிப் போராட்டத்தின் மத்தியில் சமூக விரோதிகள் காவல் துறையின் கண்காணிப்பை மீறி எப்படிப் புகுந்தார்கள் என்பது அனைவரையும் குடையும் கேள்வி. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து செல்ல, அவர்கள் கோரிய கால அவகாசம் தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
மாணவர்கள் கலையும் முன்பே வன்முறை விதை தூவப்பட்டது. ஆங்காங்கே தீவைப்புச் சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. அவற்றுக்கும் மாணவர்களுக்கும் தொடர்பில்லை எனக் காவல் துறையே சொல்கிறது. மாணவர்கள் யாருமற்றுப் போய்விடக் கூடாதே என்ற பதற்றத்தில் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட மீனவர்கள், காவல் துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது ஏன்? தலைமை இல்லாத சூழலிலும் லட்சியத்தையே துணையாகக் கொண்டு கட்டுக்கோப்பாக நடைபெற்ற போராட்டம், எப்படி இப்படி ஒரு அலங்கோல நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதை விளக்கும் பொறுப்பைக் காவல் துறையிடம் விட்டுவிட்டு இப்போதைக்கு மாணவர்கள் கலைந்து சென்றிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago