பெய்யலாம் பெய்யாமலும் போகலாம்…

By ரிஷி

மழையைவிட சுவாரஸ்யமானவை மழை பற்றிய அறிவிப்புகள். இயற்கையைக் கணிப்பதில் நமது அறிவு போடும் கண்ணாமூச்சி ஆட்டத்தையே பெரும்பாலான மழை அறிவிப்புகள் அப்பட்டமாக்குகின்றன. வானம் கடுமையாக இருண்டுகொண்டிருக்கும் நேரத்தில் மழை வருமா, வராதா என்ற சந்தேகத்துடன் ஏதாவது ஒரு தொலைக்காட்சியைத் திருப்பினால் போதும். அங்கே ஒளிபரப்பாகும் வானிலை அறிவிப்புகள் நம்மைத் தலைசுற்றவைக்கும். வழக்கம்போல் ஒரு அதிகாரி மழை வருவது பற்றிய தகவலைச் சரமாரியாகப் பொழிந்துகொண்டிருப்பார்.

பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமாகவோ கனமாகவோ மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சில இடங்களில் மழை பெய்யலாம். சில இடங்களில் மழை பெய்யாமல் போகலாம் என எல்லாவிதமான வாய்ப்புகளையும் ஒன்றுகூட்டி சொல்லிமுடித்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார். இப்போது மழை வருமா, வராதா என்ற சந்தேகம் முன்னைவிட வலுப்பெற்றுவிடும். எதற்கும் முன்னேற்பாடாக மழை வர வாய்ப்புண்டு எனக் கருதி மழைக் கோட்டையோ குடையையோ எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்ல வெளியில் கிளம்புவார்கள் சில அதிஜாக்கிரதை ஆசாமிகள். என்றைக்குமில்லாமல் அன்றைக்குப் பார்த்து வெயில் சுள்ளென்று முகத்தில் அறையும். சில அழுத்தக்கார ஆசாமிகள் அதெல்லாம் மழை வராது என்று மெத்தனமாகச் சில நாட்களில் வெளியில் கிளம்புவார்கள். அப்போதோ வரலாறு காணாத மழை கொட்டித் தீர்க்கும்.

வங்காள விரிகுடாவில் மையம்கொண்டிருக்கும் குறைவழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து அங்கேயே நிலைபெற்றதன் காரணமாகச் சென்னையிலும் திருவள்ளூரிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகும். முந்திய நாளே நல்ல மழை பெய்ததே, அதனால் இன்றும் கனமழை வந்துவிடும் என நினைத்துப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பார்கள். குழந்தைகள் குதூகலத்துடன் பள்ளிக்கூட நினைப்பின்றி வீட்டில் வளைய வளைய வருவார்கள். வீட்டையே ஒருவழி பண்ணிவிடுவார்கள் சமத்துக் குழந்தைகள். ஆனால் அன்றுதான் வானம் எந்த நாளிலும் இல்லாத மாதிரி அமைதியாகக் காணப்படும். அம்மாக்களின் அர்ச்சனை மழையில் நனைவார் மழை வரும் எனச் சொன்ன அதிகாரி.

சொன்னபடியே மழை ஒருவேளை கொட்டித் தீர்த்தால் தொலைக்காட்சிகள் பாடு கொண்டாட்டம்தான். இரண்டு, மூன்று பைட்டுகள். “தொடர்ந்து வெயில் அடிச்சு ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தோம். இப்ப இந்த மழை பெஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்குது, க்ளைமேட் ரொம்ப நல்லாயிருக்குது. மழையை நல்லா என்சாய் பண்ணினோம்” என்று யாரவது ஒருவர் நீட்டி முழக்குவார். எதிர்க்கட்சி அலைவரிசை என்றால் போதும், மைக் முன்னர் பேசுபவர், “மழை பெஞ்சது மகிழ்ச்சியா இருந்தாலும் ரோடெல்லாம் ஒரே தண்ணியா கொட்டிக் கிடக்குது, எங்கேயும் போக முடியலை. இதை அரசுக் கவனித்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுப்பார்.

ஆனால் இவற்றைப் பற்றிய கவலை ஏதுமற்று மழை பெய்யலாம், பெய்யாமல் போகலாம். வருணனை வாரண்ட் போட்டா அழைத்துவர முடியும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்