குளுமையான மூங்கில் பந்தல், ஓரமெங்கும் குட்டிக் குட்டித் தொட்டிச் செடிகள் எனக் கேரளச் சாலைக்குள் நடந்து செல்லும் உணர்வுடன் மனதை அரவணைத்துக் கொள்கிறது நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள சஞ்சீவனம். இது பாரம்பர்ய உணவுகளுக்கான நிகழ்காலக் காட்சியகம். ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி ராஜாவை வரவேற்பதைப் போல பணியாளர்கள் வாஞ்சையுடன் வரவேற்கிறார்கள். இவ்வுணவகத்தின் பிரசித்திபெற்ற உணவு ராஜகீயம். ராஜகீயம் என்னும் சொல்லுக்கு ராஜ பாவனை, நல்லாட்சி எனப் பொருள் தருகிறது அகராதி. ஆனால் விருந்துண்பவர்களுக்கு ராஜ உபசாரம் அளிப்பதாலே இப்பெயர் வந்த்திருக்கும் எனச் சாப்பிட்டு முடித்தவர்கள் எண்ணலாம். அந்த அளவுக்கு இருக்கிறது இதன் சுவையான உணவும் உபசரிப்பும்.
உள்ளே நுழைந்துமே உணவகம் எங்கும் ஒரு மெல்லிசைபோல நிறைந்திருக்கும் அருஞ்சுவையின் மணம் வருபவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. பரிமாறத் தலை வாழை இலை விரிக்கிறார்கள். முதலில் சுவைக்க நேந்திரம் பழத் துண்டுகளும் தேங்காய்த் துருவலும் தருகிறார்கள். பொதுவாக உணவு உட்கொள்வது குறித்துப் பல தரப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. சத்தான உணவை உணபதை விட அதைப் எப்படி உண்ண வேண்டும் என்பதே முக்கியம். இதற்கு இலக்கணமே இருக்கிறது. இங்குள்ள பணியாளர்களே தாங்கள் பரிமாறும் பதார்த்தங்களை எதையெதை எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பண்புடன் விளக்குகிறார்கள். இவை எல்லாவற்றுக்குள்ளும் இருக்கு நம் உணவுப் பாரம்பர்யத்தின் நுட்பம் வியக்கக்கூடியதாக இருக்கிறது.
அதன் பிறகு ஐந்து வகையானசாறுவருகிறது. பேரீச்சம் பழச் சாறு, கடலைச் சாறு, காய்கறிச் சாறு, கறிவேப்பிலை சேர்ந்த மோர், செவ்வரிசிக் கொதி நீர் என இவை ஐந்தும் வலமிருந்து இடமாக அடுக்கிவைக்கப்படுகின்றன. இதை இதே முறையில் வலதுமிருந்து இடமாகப் பருகச் சொல்கிறார்கள். சாறு பருகும் முன் முதலில் அதன் வாசனையை நுகர்ந்து உள்ளுக்குள் வாங்கிக்கொள்ளும்போதே ஓர் ஆரோக்கியமான அனுபவத்திற்கு உடல் தயாராகிக்கொள்வதை உணர முடிகிறது.
அடுத்ததாக வேகவைக்காத புட்டு பரிமாறப்படுகிறது. இது மிதமான இனிப்புடன் கூடுதல் சுவை தருகிறது. வாயினுள் ஒட்டிக்கொள்ளாமல் எளிதாக மென்று விழுங்கக்கூடியதாகவும் இருக்கிறது. அடுத்ததாக காய்கறி சாலட். பாதி வேகவைத்த காய்கறிக் கூட்டுகள், அதைத் தொடர்ந்து முழுவதும் வேகவைத்த காய்கறிக் கூட்டுகள் எனச் செவ்வரிசிச் சாப்பாட்டுக்கு வருவதற்குள் ஐந்து நிலைகளைக் கடந்துவிடுகிறோம். இவ்வளவு சாப்பிட்டும் சோர்வோ அயற்சியோ ஏற்படுவதில்லை. உற்சாகத்துடனும் வழக்கத்தைவிடக் கூடுதலான ஆவலுடன் இந்த உணவு விளையாட்டில் ஈடுபடத் தோன்றுகிறது. முக்கிய உணவாக செவ்வரிசிச் சோறும் அரிசிச் சோறும் பருப்புடன் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாது வழக்கமான சாம்பார், மோர்க் கொழம்பு, ரசம், மோர் எல்லாமும் புதிய சுவையில் கிடைக்கின்றன.அடுத்ததாக தித்திப்பான பாயசம். இவை அனைத்தையும் உண்டு முடித்ததும் சிறு கிண்ணத்தில் தேன் தருகிறார்கள். பாயாசம் சாப்பிட்ட பிறகு அந்தச் சுவையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தேனைத் தவிர்க்க நினைத்தால் தேன் செரிமானத்திற்காக அளிக்கப்படுகிறது என்கிறார்கள். இங்குள்ள உணவுத் தயாரிப்பு முறையில் புளி, சீனி, மிளகாய்த் தூள் போன்ற உடலுக்கு அசெளகர்யம் தரும் பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக தக்காளி, நாட்டுச் சர்க்கரை, மிளகு போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
இறுதியாகத் தரப்படும் வெற்றிலை கூட பான்மசாலா, சுண்ணாம்பு இல்லாமலே தருகிறார்கள். இவ்வளவு உணவுகளைச் சாப்பிட்ட பிறகு அசதியாக உறங்கலாம் என்றெல்லாம் தோன்றவில்லை. அதுமட்டுமல்ல சாப்பிட்ட 3மணி நேரத்திற்குள் உணவு செரித்துத் திரும்பவும் அந்தச் சுவையை மனம் அசைபோடத் தொடங்குகிறது. அதுதான் நம் பாரம்பரியத்தின் தனிச் சுவை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago