கல்யாணிக்குக் கிடைக்கும் கைதட்டல்கள்!

By வா.ரவிக்குமார்

‘சரியாகப் பேச்சு வராத சிறப்புக் குழந்தையாக இருந்த நான் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். பியானோவையும் வயலினையும் சிறந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்வதற்கு என்னுடைய அம்மா உதவினார். நான் ஒரு விஞ்ஞானியாக உயர்ந்ததற்கு என்னுடைய இசை அறிவே அடிப்படையாக அமைந்தது’ தன்னுடைய சுயசரிதையில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டிருக்கும் வரிகள் இவை!

ஐன்ஸ்டைனை விஞ்ஞானியாக்கிய அதே இசை, பலரின் நோய்களையும் குணப்படுத்தும் என்பது அறிவியலுக்கே ஆச்சரியமான விஷயம்தான். ராகங்களைக் கொண்டே நோய்க்கான சிகிச்சைகளையும் உடலுக்கான ஆரோக்கியத்தையும் பெற முடியும் என்னும் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர் மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள். மருத்துவப் பயனுள்ள ராகங்கள் குறித்து குன்னக்குடி வைத்தியநாதன், வீணை எஸ். காயத்ரி போன்ற பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் இசை மேதைகளான மொசார்ட், பீதோவன் ஆகியோரின் சில இசைக் கோப்புகளைக் கேட்பதன் மூலம் மனித மூளையில் ஏற்படும் மாற்றங்களை அளப்பதற்கு இ.சி.ஜி. போன்று இ.இ.ஜி. (Electroencephalogram) என்னும் கருவி பயன்படுத்தப்படுகின்றது.

இப்படி அறிவியல் ரீதியாகப் பயன்தரும் ஒரு விஷயமாக இசை இன்றைக்கு அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே சென்னை, பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் இருக்கும் ரமேஷ், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கர்னாடக இசையின் ராகங்களைப் பயன்படுத்தி இசைப் பயிற்சி அளிக்கிறார். இதற்காகவே தன்னுடைய 20 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக ராகச் சக்கரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். கர்னாடக இசையில் பரிச்சயம் இல்லாவிட்டாலும், எவரும் அணுகும் வகையில் இருப்பதுதான் இதன் சிறப்பு!

ஐ.ஐ.டி.யில் எம்.எஸ். ஃப்ளூயிட் மெக்கானிசம் படித்துவிட்டு, ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியில் இருப்பவர் ரமேஷ். “ஐ.ஐ.டி.யில் நடக்கும் கர்னாடக இசை நிகழ்ச்சிகளின் மூலமாகவும் வானொலியில் ஒலிக்கும் கர்னாடக இசை நிகழ்ச்சிகளின் மூலமும், நேரடியாகப் பல பிரபல வித்வான்களின் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டதன் மூலம் என்னுடைய இசை அறிவை வளர்த்துக் கொண்டேன்” என்னும் ரமேஷ், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த ராகச் சக்கரத்தின் மூலம் பயிற்சி அளித்துவருகிறார்.

‘ஃபேசஸ்’ என்னும் தன்னார்வ அமைப்பின் மூலம், ராகச் சக்கரத்தின் (நன்கொடை விலை ரூ. 500) விற்பனையில் கிடைக்கும் வருமானத்தையும், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களின் முயற்சியால் பழைய நாளிதழ்களின் மூலம் கிடைக்கும் பணத்தையும் அந்தந்தப் பள்ளிக்கு அருகில் இருக்கும் மாற்றுத் திறனாளியின் நலனுக்காகப் பணியாற்றும் தன்னார்வ அமைப்புகளின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவி செய்துவருகிறார் ரமேஷ்.

“சங்கராபரணம், கீரவாணி, மாயாமாளவகௌளை, நடபைரவி, கௌரிமனோகரி, கல்யாணி போன்ற சில ராகங்களை மிகவும் முக்கியமாகக் கையாளுகிறேன். இந்த ராகங்களை வாசிக்கும்போது, சிறப்புக் குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாற்றங்கள் உருவாவதைப் பார்த்திருக்கிறேன். கல்யாணி ராகத்தைக் கேட்கும்போது சில சிறப்புக் குழந்தைகள் கைதட்டிச் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். 72 மேளகர்த்தா ராகங்களையும் உள்ளடக்கிய ராகச் சக்கரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். ஒவ்வொரு ராகத்தின் ஸ்வரஸ்தானத்தையும் கீபோர்டின் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளால் அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

குழந்தைகள் அந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு எளிமையாகப் பழகுவார்கள். சிறப்புக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே தாள ஞானம் நன்றாக இருக்கும். அவர்களுக்கு அபாரமான ஞாபகத் திறனும் இருக்கும். இசையைக் கேட்பதைவிட, வாசிப்பதில் பல பயன்கள் அடங்கியிருக்கின்றன. முக்கியமாகச் சிறப்புக் குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம், படிப்படியாக அவர்களின் மூளையின் கட்டுப்பாட்டுக்கேற்ப அவர்களின் கைவிரல்கள் செயல்படத் தொடங்கும். கண்களின் பார்வைத் திறன், மூளையின் செயல் திறன், மோட்டார் ஆக்டிவிடி என ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படும்” என்கிறார் ரமேஷ்.

பொதுச் சமூகத்தினரையும் சிறப்புக் குழந்தைகளையும் இணைக்கும் பாலமாக இசை இருக்கிறது. இது மிகவும் சிறந்த வழியும்கூட. பெற்றோர்கள் தங்களின் சிறப்புக் குழந்தைகளோடு இந்த அட்டவணையில் உள்ளபடி தினமும் அரை மணிநேரம் அவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினால், 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை அந்தக் குழந்தைகளிடம் உணர முடியும் என்று அவர் கூறுகிறார்.

ஆந்திரத்தின் வாரங்கல் பகுதியில் இருக்கும் மனோ விகாஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் 350 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் சிறப்புக் குழந்தைகளாக இருக்கின்றனர். இந்த இல்லத்தில் இந்தச் சக்கரத்தின் மூலம், இந்தக் குழந்தைகளுக்கு இலவசமாக கீபோர்ட் பயிற்சியளிக்கிறார் ரமேஷ்.

சில மிதமான அதிர்வுகளைத் தரும் ராகங்களை வாசிக்கும்போது, அது அவர்களின் இடது, வலது பக்க மூளையின் நரம்புகளைத் தூண்டுகிறது. இதன் மூலம் இவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கிறது. மூளையில் இருக்கும் நியூரான் மோட்டார்களின் செயல்திறன் கூடுகிறது. உடலின் மற்ற பாகங்களை அது இயக்குவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் அவர்களின் ஐ.க்யூ. திறன் அதிகரிக்கிறது என்னும் ரமேஷ், இன்றைக்கும் இதுதொடர்பாக நான் தினமும் படிக்கிறேன். அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன் என்கிறார்.

சில மிதமான அதிர்வுகளைத் தரும் ராகங்களை வாசிக்கும்போது, அது அவர்களின் இடது, வலது பக்க மூளையின் நரம்புகளைத் தூண்டுகிறது. இதன் மூலம் இவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கிறது. மூளையில் இருக்கும் நியூரான் மோட்டார்களின் செயல்திறன் கூடுகிறது. உடலின் மற்ற பாகங்களை அது இயக்குவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் அவர்களின் ஐ.க்யூ. திறன் அதிகரிக்கிறது என்னும் ரமேஷ், இன்றைக்கும் இதுதொடர்பாக நான் தினமும் படிக்கிறேன். அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன் என்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்காவி லிருக்கும் நரம்பியல் மருத்துவர் டாக்டர் ராமனுடன் ரமேஷ் உரையாடியிருக்கிறார். ராமன், ஒரு சிறந்த இசை அறிஞரும்கூட. இவர் இசையின் மூலம் கர்ப்பிணியின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்துவருபவர்.

“பழக்கவழக்கங்களில் குறைபாடுள்ளவர்கள் என்று பலர் சிறப்புக் குழந்தைகளை அடையாளப்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான அவர்களின் போராட்டம்தான் அது. சிறப்புக் குழந்தைகளுக்கு அவர்களின் எண்ணத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க ஒரு பாலம் தேவையாக இருக்கிறது. அதை மிகக் கச்சிதமாகக் கட்டமைக்கும் இசைப் பாலம்தான் இந்த ராகா சக்கரம்” என்கிறார் ரமேஷ்.

- தொடர்புக்கு: 9445360139

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்