‘லா டெசிமா!’
‘கிங் ஆஃப் க்ளே’ என்று போற்றப்படும் ரஃபேல் நடால் கடந்த வாரம் ரோலந்த் கரோஸ் மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் வென்றவுடன், சமூக ஊடகங்களில் வைரலான வார்த்தை இது.
அப்படியென்றால், ஸ்பானிய மொழியில் ‘பத்தாவது முறையாக’ என்று அர்த்தம். ஆம், பத்தாவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருக்கும் ஒரே வீரர் ரஃபேல். இந்த பட்டத்தை அதிக முறை வென்றிருக்கும் ஒரே வீரரும் ரஃபேல்தான்!
இந்தப் பத்து மட்டுமல்ல; இந்த ஆண்டு நடைபெற்ற மான்டி கார்லோ (மாஸ்டர்ஸ்), பார்சிலோனா ஓபன் (ஏடிபி 500) ஆகிய போட்டிகளிலும் பத்தாவது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார் ரஃபேல். இதுவரை டென்னிஸ் வரலாற்றில் வேறு எந்த ஒரு வீரருமே செய்யாத சாதனை இது.
உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப் பட்டியலில் தற்சமயம் 2-வது இடத்தில் இருக்கும் ஒரு வீரர் இப்படியான சாதனைகள் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால், அவருக்கு ஏற்பட்ட கால் மூட்டு, மணிக்கட்டுக் காயம் போன்றவற்றால், எங்கே அவரின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்று டென்னிஸ் ரசிகர்கள் அஞ்சிய காலம் ஒன்று இருந்தது.
அப்படியான நிலையில், அவர் தன் காயங்களிலிருந்து மீண்டு வந்து படைத்திருக்கும் இந்தச் சாதனையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ரோலாந்த் கரோஸ் மைதானத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை ‘ஸ்டாத் ரோலாந்த் கரோஸ்’ என்று அழைக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். ஆனால், டென்னிஸ் வீரர்களோ அந்த மைதானத்தை ‘மர்டர் வால்’ (கொலைச் சுவர்) என்று அழைக்கிறார்கள். இங்கு எப்பேர்பட்ட வீரரும் ரஃபேல் நடால் உட்பட, மண்ணைக் கவ்வாமல் இருந்ததில்லை.
ஜான் மெக்கன்ரோ, போரிஸ் பெக்கர், ஸ்டெஃபான் எட்பர்க், ஆந்த்ரே அகாஸி என ஓய்வுபெற்ற வீரர்கள் தொடங்கி ரோஜர் ஃபெடரர், ஆண்டி முர்ரே, நோவாக் ஜொகோவிச், ஸ்டான் வாவ்ரிங்கா என இன்றிருக்கும் வீரர்களில் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் அனைவரும் இங்கு தோல்வியைத் தழுவிக் கண்ணீருடன் விடைபெற்றிருக்கிறார்கள்.
ஆனால், இந்த வரிசையில் ரஃபேல் நடாலைச் சேர்த்துவிட முடியாது. காரணம், அந்த மைதானத்தோடு ரஃபேலுக்கு உள்ள பரிச்சயம்தான். இத்தனைக்கும் ரஃபேல் நடால் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதும் இங்கேதான். அது நடந்தது 2005-ம் ஆண்டு. அப்போதிலிருந்து 2008-ம் ஆண்டு வரை தொடர்ந்து இங்கு வெற்றி வாகை சூடினார் அவர். அந்தத் தொடர் வெற்றி 2009-ம் ஆண்டு தடுக்கப்பட்டது. அந்த ஆண்டு இங்கு நடைபெற்ற போட்டியில் ராபின் சோடர்லிங்கிடம் ரஃபேல் வெற்றியைப் பறிகொடுத்தார்.
ஆனால், அடுத்த ஆண்டே, ராபின் சோடர்லிங்கைப் பழி தீர்த்தார் ரஃபேல். பிறகு 2014-ம் ஆண்டு வரை அவர் பிரெஞ்சு ஓபனில் தொடர் வெற்றிகளைப் பெற்றார். அவர் கடைசியாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது 2014-ம் ஆண்டில்தான். அந்தத் தொடர் வெற்றிக்கு மீண்டும் 2015-ம் ஆண்டு நோவாக் ஜொகோவிச் மூலம் தடை ஏற்பட்டது. அதன் பிறகு காயம் காரணமாக 2016-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின் இடையிலேயே அவர் விலக வேண்டிய நிர்பந்தம் உண்டானது.
ரோலாந்த் கரோஸ் மைதானம் களிமண் நிறைந்திருக்கும் பகுதி. இங்கு ‘சர்வ்’ செய்யப்படும் பந்துகள் மெதுவாக, ஆனால் மிக உயரத்துக்கு ‘பவுன்ஸ்’ ஆகி வரும். அந்தப் பந்துகளைச் சரியான ‘டைமிங்’கில் திருப்பி அனுப்ப வேண்டும். பந்து வரும் திசையை நோக்கி ஓடுவதற்கு இங்கே வீரர்களுக்குச் சரியான வேகம் கிடைக்காது. மழைக் காலத்திலோ இன்னும் மோசம். மைதானம், டென்னிஸ் ராக்கெட் ஆகியவற்றில் ஒட்டிக்கொண்டு பந்து சரியான வேகத்தில் போகாது. கோடைக்காலத்தில் இன்னும் மோசம். ஒவ்வொரு முறை பந்து விழும்போது எழும் தூசி ஒரு பக்கம், அந்தப் பந்து ‘ஸ்கிட்’ ஆவது இன்னொரு பக்கம், மைதானம் தனது ஈரத் தன்மையை இழந்து வீரர்களை வியர்வை மழையில் நனையவைப்பது மற்றொரு பக்கம் எனப் பெரும் சவால்களைக் கொண்ட மைதானம் இது.
இங்கு விளையாடும் வீரர்களின் உடல், மனம், ஆன்மா என எல்லாவற்றையும் கூறுபோட்டுப் பார்த்துவிடக் கூடிய இந்த மைதானத்தில் ரஃபேல் நடால் மட்டும் எப்படித் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்? காரணம், பயிற்சியும் பழக்கமும்தான்! தொடர்ந்து பத்து ஆண்டுகள் இந்த மைதானத்தில் விளையாடியிருப்பதால், அந்த மைதானத்தின் நெளிவு சுளிவுகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி. தவிர, உடலில் என்னதான் காயங்கள் ஏற்பட்டாலும் அதை மீறித் தன் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவதால்தான் அவருக்குத் தொடர் வெற்றிகள் இங்கு சாத்தியமாகின்றன. அதனால்தான் அவருக்கு ‘களிமண் மைதானத்தின் ராஜா’ என்று பெயர்.
தற்போது கிடைத்திருக்கும் வெற்றியால் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார் ரஃபேல். சுமார் மூன்றாண்டுகள் காத்திருந்து பெற்ற வெற்றி இது. இன்னும் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றால், ரோஜர் ஃபெடரரின் சாதனையைச் சமன் செய்வார்.
இந்தச் சாதனைகளின் மயக்கத்தில் ரஃபேல் நடால் மூழ்கிவிடாமல், அடுத்து நடைபெறவிருக்கும் விம்பிள்டன் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
வெல்வார் என்று நம்புவோம்!
மொத்த கிராண்ட் ஸ்லாம்
பட்டங்கள்: 15
தரவரிசை: 2
ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள்: 1
பிரெஞ்சு ஓபன் பட்டங்கள்: 10
அமெரிக்க ஓபன் பட்டங்கள்: 2
விம்பிள்டன்: 2
ஏடிபி வேர்ல்டு டூர் மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள்: 30
ஏடிபி வேர்ல்டு டூர் 500 பட்டங்கள்: 18
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago