வேலையற்றவனின் டைரி 18 - கணேஷ்-வசந்த்..!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

பிப்ரவரி 27. எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு தினம். அன்று நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக‌‌, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயிருக்கும் தம்புச் செட்டித் தெருவுக்குச் சென்றிருந்தேன். அந்த‌த் தெருவில் நுழைந்து, “வக்கீல் சார்” என்று சத்தமாக அழைத்தால், அடுத்த நொடி, ஆயிரம் வக்கீல்கள் உங்கள் முன்பு வந்து நிற்பார்கள். லஞ்ச் நேரத்தில் சென்றால், நீங்கள் ஒரு வக்கீலின் மீது மோதி, வேறொரு வக்கீலின் மீது விழுந்தால், உங்களைத் தூக்கிவிடுபவர் நிச்சயம் ஒரு வக்கீலாகத்தான் இருப்பார்.

நான் வக்கீல்களுக்குள் நுழைந்து நடந்தபோது, எதிரே நீல நிற டீஷர்ட்டில் ‘குட் மார்னிங்’ என்று நட்டநடு மதியத்தில் காலை வணக்கம் சொன்ன, இடது கையில் மல்ட்டி கலர் பேண்ட் அணிந்திருந்த, பிங்க் நிறத்தில் நெயில் பாலீஷ் பூசியிருந்த, நைக் செருப்பணிந்திருந்த அந்த மூக்கு நுனி மச்சப் பெண்ணை நான் கூர்ந்து பார்க்கவில்லை(?) என்பதால் சரியாக வர்ணிக்க முடியவில்லை.

இதற்கு நடுவிலும், எனக்கு கணேஷ்-வசந்தின் நினைவு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவின் துப்பறியும் கதைகளில் வரும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான கணேஷ்-வசந்தின் அலுவலகம், இந்த தம்புச் செட்டித் தெருவில்தான் இருந்தது. அவர்கள் டிஃபன் சாப்பிட்ட ராமகிருஷ்ணா ஹோட்டல் இன்னும் இருக்கிறது. எத்தனையோ அழகழகழகழகிய இளம் பெண்கள் அவர்களைத் தேடி வந்த தம்புச் செட்டித் தெரு இன்னும் அங்கேயேதான் இருக்கிறது. ஆனால் கணேஷும் வசந்தும் இல்லை. 80-களில் கணேஷும், வசந்தும் இல்லாமல் போயிருந்தால், இன்று இந்த ‘வேலையற்றவனின் டைரி’ கிடையாது.

பள்ளிக் காலத்தில், நான் படித்த முதல் சுஜாதா கதையே, கணேஷ்-வசந்த் தோன்றும் ‘ஒருத்தி நினைக்கையிலே’ நாவல்தான். கமலாக்கள் ‘களுக்’ என்று சிரித்த, விமலாக்கள் வெட்கத்துடன் கதவுக்குப் பின்னால் மறைந்த, குதிரைகளின் குளம்படிகள் புழுதி பறக்க ஒலி எழுப்பிய, ராஜகோபால்கள் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக்கொண்ட கதைகளிலிருந்து சுஜாதா அப்படியே என்னைத் தூக்கி வேறு ஒரு உலகில் போட்டார்.

தமிழில் வழக்கமாகக் கதை சொல்லும் முறைகளை சுஜாதா முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருந்தார். ஆளை அள்ளிக்கொள்ளும் அப்படி ஒரு சுவாரசியமான நடை. அந்தக் கதையில் வரும் கணேஷின் புத்திசாலித்தனமும், வசந்தின் இளமை ததும்பும் அரட்டைகளும் 16 வயதில் இருந்த என்னை சுஜாதாவின் பிற கதைகளைத் தேடி அலைய வைத்தன‌. எனக்கு மட்டுமல்ல. ஏறத்தாழ இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு கணேஷ்-வசந்தை ஏன் மிகவும் பிடித்தது?

சுஜாதா அன்றைய கதைகளில் இருந்த சம்பிரதாயமான வர்ணனைகள், வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இளைஞர்கள் விரும்பக்கூடிய, மிகவும் புதுமையான, படு துள்ளலான நடையில் எழுதினார். உதாரணத்திற்கு ‘பாதி ராஜ்யம்’ குறுநாவலில் கணேஷ் தன்னை அறிமுகம் செய்துகொள்வதைப் பாருங்கள்:

“என்னைச் சந்தியுங்கள். சட்டம் என் தொழில். வக்கீல் என்று குடை பிடித்துக்கொண்டு, அழுக்குக் கோட்டு அணிந்துகொண்ட பொடி ஆசாமியை நினைவுபடுத்த விரும்பவில்லை. வழக்கறிஞர் என்று தமிழ் சினிமாவில் கடைசி ஸீனில் மழமழவென்று ஷவரம் பண்ணிக்கொண்டு, “கனம் கோர்ட்டார் அவர்களே…” என்று சுட்டு விரலை அபரிமிதமாகப் பிரயோகிக்கும் நபரையும் ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நான் இளைஞன்- அதாவது 32 வயதை இளமை என்று ஒப்புக்கொண்டால்..!”

கணேஷ் பக்குவமான, புத்திசாலியான, சற்றே முதிர்ந்த இளைஞன் என்றால், வசந்த் ‘மௌனராகம்’ கார்த்திக் போல் (இன்னும் இதை மிஞ்சிய கேரக்டர் வரவில்லை) துள்ளலான, நகைச்சுவையுடன் பேசும், இளம்பெண்களிடம் ஜொள்ளு விடும், அவர்களை விதம் விதமாக வர்ணிக்கும் இளைஞன்.

‘ஆயிரத்தில் இருவர்’ நாவலில் ஒரு பெண்ணிடம், “பேசாமல் வந்தால் எப்படி? மௌனமா இருந்தா உங்க அழகு பயங்கரமா ஜாஸ்தி ஆயிட்டிருக்கு” என்று பேசிய வசந்தின் உரையாடலில் இருக்கும் மெலிதான கவித்துவத்தை உணர முடிகிறதா? ‘யவனிகா’ நாவலில், “டமில் கொச்சையா பேசுவேன்” என்று பேசும் ஹிந்திக்கார நடிகையிடம், “தமிழ் பேசுறீங்களே... அதுவே தமிழன்னை செய்த பாக்கியம்ங்க. மணியை முழுங்கின குயிலை முழுங்கினாப்ல” என்று பேசும் வசந்த் இன்றைக்கும் இளைஞர்களின் டார்லிங்.

இளைஞர்களுக்கு கணேஷ்-வசந்தைப் பிடித்ததற்கான பிரதான காரணம், கணேஷிடமிருந்த அற்புதமான புத்திக்கூர்மை. ஆனால் கணேஷைவிட வசந்தை இளைஞர்களுக்குச் சற்றுக் கூடுதலாகப் பிடிக்கும். ஏனெனில் இளம் வயதில் இளைஞர்களுக்குப் பெண் மட்டுமே உலகம். பெண்களிடம் அவர்கள் சொல்ல நினைத்தவற்றை, பெண்களிடம் அவர்கள் செய்ய விரும்பிய குறும்புகளை அவர்களின் சார்பாக வசந்த் செய்தான். இதை இளம்பெண்களும் ரகசியமாக ரசித்தார்கள். தனது வசந்த் கதாபாத்திரத்தின் புகழைப் பற்றி சுஜாதா ஒரு பேட்டியில், “பெண்கள் நிறைய பேர் வசந்துக்குக் கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க... தே ஃபீல் தே வில் லூஸ் சம்திங் சார்மிங். அது மட்டுமல்ல, ஒன் ரீடர் சென்ட் எ டெலிகிராம். நான் அவனுக்கு வந்து என் ப்ளட்டை கொடுக்கத் தயாரா இருக்கேன்னு” என்று கூறியிருக்கிறார்.

இளைஞர்களுக்கு கணேஷ்-வசந்தைப் பிடித்ததற்கான பிரதான காரணம், கணேஷிடமிருந்த அற்புதமான புத்திக்கூர்மை. ஆனால் கணேஷைவிட வசந்தை இளைஞர்களுக்குச் சற்றுக் கூடுதலாகப் பிடிக்கும். ஏனெனில் இளம் வயதில் இளைஞர்களுக்குப் பெண் மட்டுமே உலகம். பெண்களிடம் அவர்கள் சொல்ல நினைத்தவற்றை, பெண்களிடம் அவர்கள் செய்ய விரும்பிய குறும்புகளை அவர்களின் சார்பாக வசந்த் செய்தான். இதை இளம்பெண்களும் ரகசியமாக ரசித்தார்கள். தனது வசந்த் கதாபாத்திரத்தின் புகழைப் பற்றி சுஜாதா ஒரு பேட்டியில், “பெண்கள் நிறைய பேர் வசந்துக்குக் கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க... தே ஃபீல் தே வில் லூஸ் சம்திங் சார்மிங். அது மட்டுமல்ல, ஒன் ரீடர் சென்ட் எ டெலிகிராம். நான் அவனுக்கு வந்து என் ப்ளட்டை கொடுக்கத் தயாரா இருக்கேன்னு” என்று கூறியிருக்கிறார்.

சுஜாதா தனது கணேஷ் கதாபாத்திரத்தை 1968-ல் ‘நைலான் கயிறு’ நாவலில் அறிமுகப் படுத்தினார். பின்னர் 1973-ல் ‘ப்ரியா’ தொடர்கதையில் அவர் வசந்தை அறிமுகப்படுத்திய பிறகு கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. பிறகு ஏறத்தாழ 35 ஆண்டுகள், கணேஷும் வசந்தும் காலத்துக்கேற்றாற்போல் தங்களை அப்டேட் செய்துகொண்டு, அந்தந்த காலத்துக்குரிய இளைஞர்களின் மொழியில் பேசினர். இன்றைய 4G யுகத்தில் சுஜாதாவின் இல்லாமை மிகவும் உறுத்துகிறது. ஒருவேளை இன்று சுஜாதா உயிரோடிருந்தால், இந்த ஃபேஸ்புக் காலத்தில் இவ்வாறு எழுதியிருப்பார்:

வசந்த், “ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா... தெறிச்சு கலீச்சுன்னு கிராக்கிவுட்டா சாலுமா…” பாடலைப் பாடியபடி மொபைலில் ஃபேஸ்புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். கணேஷ் லேப்டாப்பில் ஏதோ நோண்டியபடி, “பரவால்ல வசந்த், திபெத்திய மொழி பாட்டுல்லாம் பாடக் கத்துகிட்ட” என்றான்.

“பாஸ்… இது தமிழ் சினிமா பாட்டு”

“இது தமிழ்ன்னா, தமிழ்த் தாய் உங்கள எல்லாம் தம்புச் செட்டித் தெருல துரத்தித் துரத்தி அடிப்பாங்க”

“அதை விடுங்க பாஸ். நேத்துத்தான் ஒரு பொண்ணு ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துச்சு. ஆளு செம ரகளை. அக்செப்ட் பண்ணினேன். இப்ப சாட்ல வருது” என்றவன் சாட்டில் அந்தப் பெண்ணிடம், “உங்கள ஒரு டான்ஸ்ல பாத்துருக்கேன்” என்று தனது வழக்கமான தூண்டிலை வீசினான். பதிலுக்கு

“யூ ஆர் ஸோ நாட்டி… ஐ லைக் யூ” என்று பதில் வர… வசந்த் பரவசத்துடன், “பாஸ்… ஐ லைக் யூன்னு சொல்றா பாஸ்…” என்று அலறினான்.

கணேஷ், “ரொம்ப சந்தோஷப்படாத. அது ஃபேக் ஐடியா இருக்கும்” என்றான்.

“உங்களுக்குப் பொறாமை. எப்படி ஃபேக் ஐடின்னு சொல்றீங்க?”

“அந்த ஐடில நான்தான் நேத்து உனக்கு ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தேன். அந்த ஃபோட்டோல இருக்கிற பொண்ணு, பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலி” என்று கூற, “பாஸ்…” என்று ஹைடெசிபலில் கத்தினான் வசந்த்.

- கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்