திருமண வேலைகளைத் திட்டமிடுவது எப்படி?

By டி. கார்த்திக்

கல்யாணம் பண்ணிப் பார்... திருமணத்துக்காகச் செய்யப்படும் செலவையும் உடல் உழைப்பையும் மையப்படுத்தி வந்த பழமொழி இது. திருமண வேலை என்றாலே பலருக்கும் தலையே சுற்றிவிடும். எந்த வேலையைச் செய்வது, எந்த வேலையை விடுவது என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் இருக்கும். ஆனாலும், திட்டமிட்டுச் செய்தால் திருமண வேலையை எளிதாக்கிவிடலாம்.

முதலில் திருமணம் என்றால் என்னென்ன வேலைகள் இருக்கும் என்று பட்டியலிட வேண்டும். மண்டபம் பிடிப்பதில் தொடங்கி நல்ல சமையல்காரர் அல்லது கேட்டரிங் காண்டிராக்டரைப் பிடிப்பது, துணி எடுப்பது, திருமணப் பத்திரிகை தேர்வு செய்வது, அதை அச்சடிக்க கொடுப்பது, மேளதாள ஆட்களைத் தேர்வு செய்வது, முகூர்த்தப் பட்டு வேஷ்டி, சேலை எடுப்பது, போட்டோ எடுக்க ஆர்டர் கொடுப்பது, தாலி செய்வது, மாலை செய்ய ஆர்டர், மண்டபத்தை அலங்கரிக்க ஆட்களைத் தேடுவது, ஸ்பீக்கர் வைப்பது, பந்தல் போடுவது எனத் திருமண வேலைகளைச் சொல்லி மாளாது.

இதில் முதன்மையான பணி என்றால், நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே நல்ல மண்டபம் பிடிப்பதுதான். எந்த மண்டபம் வசதியானது, வாடகை குறைவானது என்பதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும். நாம் நினைக்கும் முகூர்த்தத் தேதிக்கு மண்டபம் கிடைக்காவிட்டால், வேறு எந்த முகூர்த்தத் தேதியில் மண்டபம் கிடைக்கும் என்பதை உறுதி செய்து அந்தத் தேதிக்கு அட்வான்ஸ் கொடுப்பதில் தவறில்லை. அதற்கு ஏற்ப முகூர்த்த நாளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேதிகளை முன்கூட்டியே முடிவு செய்வது நல்லது.

முகூர்த்தத் தேதியும், மண்டபமும் முடிவாகிவிட்டால் பத்திரிகை தேர்வு செய்து, அதை அச்சடிக்கக் கொடுத்துவிட்டால் வேலை முடிந்துவிடும். சமையல்காரரை தேர்வு செய்யும்போது பலரையும் பட்டியலிட்டு, அவர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவும். ஏற்கெனவே அவர் சமையல் செய்த அனுபவத்தை நம் நண்பர்கள், உறவினர்கள் மூலம் அறிந்து கொள்வதும் நல்லது. திருமணத்தில் சாப்பாடு சரியாக இல்லையென்றால், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு இதைப் பற்றியே எல்லோரும் பேசுவார்கள் என்பதை நினைவில் வைக்கவும்.

திருமணப் பணியில் இன்னொரு முக்கியமான பணி, துணி எடுப்பது. கல்யாண மாப்பிள்ளை, பெண் தவிர்த்து வீட்டில் உள்ள உறுப்பினர்கள், முக்கிய உறவினர்கள் எனப் பலருக்கும் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அனைவரையும் வெறுப்பேற்றிவிடுவார்கள். ஒரே கடையில் துணி எடுப்பதே நல்லது. நம் பணி விரைவாகவும், சுலபமாகவும் முடிக்க இதுவே வழி.

இதேபோலத்தான் சீர்வரிசை பொருட்களையும் ஒரே கடையில் வாங்க முயற்சிக்கலாம். பொதுவாக எல்லோரும் ஒரே நேரத்தில் சீர்வரிசை பொருட்களை வாங்கி வைத்திருக்க மாட்டார்கள். வீட்டில் அவ்வப்போது வாங்கிய பொருட்களை மூட்டை கட்டி வைத்திருப்பார்கள்.

எனவே எந்தெந்தப் பொருட்கள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டு, இல்லாத பொருட்களை மட்டும் வாங்கலாம். பழைய பொருட்களைப் பாலிஷ் போடுவதன் மூலம் அவையும் புதுப்பொருள்கள் போலக் காட்சியளிக்கும்.

போட்டோ, வீடியோ ஆர்டர் எடுப்பது, முகூர்த்தப் பை அச்சடிப்பது, ஸ்பீக்கர் கட்டுவது, வாழை மரம் கட்டுவது, பந்தல் போடுவது போன்ற சிறு பணிகளை வீட்டு உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ விட்டுவிட்டால், இதற்காக மெனக்கெடுவது குறையும். அந்த நேரத்தில் மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.

திருமண வேலையில் முக்கியமானது அழைப்பிதழ் அனுப்புவது. முதலில் உறவினர்கள், நண்பர்கள் பெயரைப் பட்டியலிட்டுக்கொள்வது நல்லது. முக்கியமான உறவினர்கள் என்றால் பெற்றோர் சென்று கொடுத்துவிட்டு வரலாம். மற்றவர்களுக்கு வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மூலம் அழைப்பிதழ் கொடுத்தால் பணி விரைவாக முடியும். எல்லோருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் காலம் மலையேறிவிட்டது. இந்தக் காலத்தில் அழைப்பிதழைத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டு, போனில் ஒருமுறை அழைப்பு விடுத்தால்கூட யாரும் கோபித்துக்கொள்வது இல்லை.

இப்படி வேலைகளைப் பிரித்துப் பார்த்தால் திருமண வேலைகளை எளிதில் முடித்துவிடலாம்.

இந்த வேலையெல்லாம் சரிப்பட்டு வராது... திருமண நாளன்று நேராக வந்து அட்சதை தூவினால் போதும் என்று சொல்லுமளவுக்கு திருமணக் காண்டிராக்டர்களும் வந்துவிட்டார்கள். நம் பட்ஜெட்டைக் கூறிப் பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும், திருமண வேலை டென்ஷனில் இருந்து விடுபட்டு அழைப்பிதழ் கொடுக்கும் பணியை மட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்