என் வாசகர்கள் பெரும்பாலும் இளைஞர்களே என்பதால் அவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பது என்னுடைய சுவாரஸ்யமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இன்றைய இளைய தலைமுறையைப் பற்றிச் சிந்தித்தால் சாக்ரடீஸைப் போலவே கவலைதான் மிஞ்சுகிறது. அவர் சொன்னார்: “நம்முடைய இளைஞர்களுக்கு ஆடம்பரம்தான் பெரிதாக இருக்கிறது. நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை. பெரியோரையும் பெற்றோரையும் மதிப்பது இல்லை. வெறுமனே வம்பு பேசித் திரிகிறார்கள்.” இதற்கும் மேல் இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். இதை இளம் வயதில் நான் வாசித்தபோது எந்த வயதிலும் இதுபோல் பேசக் கூடாது என்று எனக்குள் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டேன். ஆனால் அதே வார்த்தைகளை இப்போது நான் சொல்ல நேர்ந்தது நகை முரணா, வயோதிகமா என்று தெரியவில்லை.
முன்பு இருந்து, இப்போதைய இளைய சமுதாயத்திடம் இல்லாமல் போய்விட்ட முதல் விஷயம் அரசியல் பிரக்ஞை. அப்போதைய இளைஞர்களிடம் தங்கள் தேசத்தைப் பற்றிய ஒரு கனவு இருந்தது. சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டம் என்ற மூன்று நிகழ்வுகளை அப்போதைய இளைய சமுதாயம் எப்படி எதிர்கொண்டது என்பதைப் பார்த்தாலே அவர்களின் அரசியல் பிரக்ஞையைப் பற்றிப் புரிந்துகொண்டுவிடலாம்.
ஆனால் இன்றைய இளைஞர்களிடம் எந்த விதமான அரசியல் பிரக்ஞையையும் - ஏன், சமூகம் பற்றிய குறைந்தபட்ச புரிதலைக்கூட - காண முடிவதில்லை. இந்திய யதார்த்தத்தின் சிக்கலான முரண்பாடுகளைச் சிறிதும் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ரத்த தானம் செய்வது, கடற்கரையில் குப்பை பொறுக்குவது, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான மாரத்தன் ஓட்டம் செல்வது, Olive Ridley ஆமையைக் காப்பாற்றுவது போன்ற செயல்பாடுகளைத்தான் தங்களின் உச்சகட்ட அரசியல் கடமையாகக் கருதுகிறார்கள்.
இன்றைய இளைஞர்களின் ஒரே லட்சியம் பணம் சேர்ப்பதாக இருக்கிறது. அதற்கேற்றாற் போலவே மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பத்து வயதுக் குழந்தையின் கனவு இன்று ஆப்பிள் ஐஃபோன். அதன் விலை ரூ. 55,000. இதுவே கல்லூரி மாணவனாக இருந்தால் மோட்டார் சைக்கிள். வாகனத்துக்கு அடுத்தபடியான தேவை, கணினி. வெறும் கணினி அல்ல; Mac கணினி. இப்படிப் பள்ளிப் பருவத்திலேயே பல லட்சங்களுக்கான தேவையை வைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டதால் வாழ்க்கை முழுவதுமே அவர்களின் ஒரே இலக்கு பணமாக ஆகிவிடுகிறது.
வாசிப்பும், மொழித் திறனும் இல்லாமல் போனதால் இப்போதைய இளைஞர்களின் பேச்சு மொழி வெறும் ஐம்பது வார்த்தைகளில் குறுகிவிட்டது. பத்தாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வெறும் ஐம்பது வார்த்தைகளில் தங்களுடைய சமூக வாழ்க்கையையும், சிந்தனையையும் குறுக்கிக்கொண்டிருப்பது மிகப் பெரிய கலாச்சாரத் துயரம் என்றே சொல்லலாம். இதன் காரணமாகத் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறிவிடக்கூடிய அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எந்த மொழியுமே தெரியாத – ஐம்பது வார்த்தைகளை மட்டுமே பேசத் தெரிந்த ஒரு கூட்டத்தை மனித வரலாற்றில் 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் பார்க்கலாம் போல் தோன்றுகிறது.
கடந்த இருபதாண்டுகளாக இளைஞர்களிடம் மாறி வரும் இன்னொரு போக்கு, குடும்ப உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக ஜாதி அபிமானம் இறுகி இருக்கிறது. நவ நாகரிகம் பெருகி junk வாழ்க்கை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு ஜாதி அபிமானமும் அதிகமாகிவிட்டது. லட்சியம், மொழி, கலாச்சாரம் போன்ற சத்தான விஷயங்களை இழந்ததால் ஏற்பட்ட வெறுமை உணர்வைச் சமன் செய்ய இளைய சமுதாயத்துக்குக் கிடைத்திருக்கும் பிடிமானமாகச் செயல்படுகிறது ஜாதி.
இந்த நிலையை எப்படி மாற்றலாம் என்று யோசித்தால் கல்வி அமைப்பில் அடிப்படையான மாற்றங்களைச் செய்தால் ஒழிய வேறு வழி எதுவும் இல்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு மாணவனுக்கு இவ்வளவு வேலைப் பளுவும் அது சம்பந்தமான மனச் சோர்வும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் பெர்லினில் வைத்து என் நண்பருடைய புதல்வனிடம் எல்லா இந்தியர்களையும் போலவே ஒரு கேள்வியைக் கேட்டேன். பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த அவனிடம் “அடுத்த ஆண்டு எந்தப் படிப்பில் சேரப் போகிறாய்?” என்றேன். இது போன்ற கேள்வியை அப்போதுதான் அவன் எதிர்கொண்டான் போலும். “இன்னும் யோசிக்கவில்லை அங்கிள்” என்றான். இப்போது எனக்குக் குழப்பம். “அது எப்படிச் சாத்தியம்? ஏதோ ஒரு படிப்பைத் தேர்வு செய்துதானே ஆக வேண்டும்?” அப்போதும் அவனுக்கு என் கேள்வி புரியவில்லை.
என் நண்பர் பதில் சொன்னார். “அப்படியெல்லாம் இங்கே அவசியம் இல்லை. அவனுக்கு Skiing-ல் நல்ல ஆர்வம் உண்டு. எனவே அடுத்த ஆண்டு ஆல்ப்ஸ் மலைக்குப் போய் ஸ்கீயிங் விளையாடப் போகிறான். படிப்பு பற்றி அப்புறம்தான் யோசிப்பான்.” ஆம் என்று பையன் தலையாட்டினான்.
சில ஆண்டுகள் கழித்து அந்தப் பையனை மீண்டும் சந்தித்தேன். ஸ்கீயிங் முடித்துவிட்டு, இப்போது ஒரு பகுதி நேர வேலை செய்து கொண்டே கல்லூரியில் மொழியியல் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். சொல்ல மறந்துவிட்டேன், அந்தப் பையனுக்கு அவனுடைய சொந்த மொழியான ஜெர்மன் தவிர ஸ்பானிஷ், ஆங்கிலம், ஹீப்ரூ ஆகிய மொழிகள் தெரிந்திருந்தன. ஹீப்ரூ? உலகின் பழைய மொழிகளில் ஒன்று என்பதால் ஆர்வம் ஏற்பட்டதாம். இது தவிர, ஜெர்மனியின் முக்கியமான எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், ஐரோப்பிய சினிமா போன்ற எல்லாவற்றிலும் நன்கு பரிச்சயம் உள்ளவனாக இருந்தான். இவ்வளவுக்கும் படிப்பில் ஆர்வம் இல்லாத ஒரு சராசரி மாணவன்.
நல்ல சினிமா, நல்ல இசை, நல்ல இலக்கியம், அதோடுகூடப் பயணம், மொழித் திறன் போன்றவையே பொழுதுபோக்காகவும் மாறக்கூடிய சமூகச் சூழலை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுக்காமல் இன்றைய இளைஞர்கள் பற்றிக் கருத்து சொல்வதே தவறு. அந்த வகையில் நான் எழுதியதை நானே மறுதலிக்கிறேன்.
(இக்கட்டுரையின் முழு வடிவத்தை தி இந்து தீபாவளி மலர் 2014-ல் காணலாம்.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago