கண்கவர் இல்லங்கள்

வீடு என்பது வெறும் குடியிருப்பு மட்டுமல்ல; மனிதனின் அகம் சார்ந்த விஷயம். அதனால்தான் வீட்டுக்கு அகம் என்றொரு பெயரும் உண்டு. வீடு திரும்பல் என்ற வார்த்தைதான் மனிதனின் வெளி இயக்கத்தின் அச்சாக இருக்கிறது.

வீடு இருப்பின் அடையாளம்; நமக்கும் அதற்கும் மிக நெருங்கியதோர் உறவு இருக்கிறது. ஒவ்வொருவரின் நினைவுகளிலும் ஒரு வீடு இருக்கிறது.

இன்றைய அவசர யுகத்தில் பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி, உறவுகளிலிருந்து அந்நியமாகி வாழ்தல், இன்ன பிற பிரச்சினைகளால் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்திற்கு மத்தியில் கழிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, வீடு என்பது தங்கிச் செல்லும் கட்டடம் என்பதையும் தாண்டி, அமைதியான சூழலை உருவாக்கி ஆசுவாசப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

அற்புதமான ஒரு வீடும், நமக்கு அமைதியை அளிக்கக் கூடிய அதன் அமைப்பும் மன அழுத்தத்துக்கான மாமருந்தாக இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வீட்டை உருவாக்குவதில் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

“லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்’டின் பணி வெறும் தோட்டங்களை உருவாக்குவதல்ல. கட்டட உருவாக்கத்தில் ஆர்க்கிடெக்ட்டுகளின் பங்களிப்பைப் போலவே, அதன் வெளிப்புறத்தை அழகுபடுத்துவதில் லேன்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்டின் பணி இன்றியமையாதது.

லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் ஆடம்பரமல்ல, அத்தியாவசியம்தான் என்கிறார் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட் ஜெயகுமார்.

அவரிடம் பேசியதிலிருந்து கட்டடவடிவமைப்பைப் போல, வெளிப்புற வடிவமைப்பைத் திட்டமிட்டுச் செய்வதே லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்.திறந்தவெளியை அழகோடும், பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைப்பது லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்டின் பணி. பூங்காக்கள் மாதிரியான திறந்த வெளி இடத்தை வடிவமைப்பது திறந்தவெளி வடிவமைப்பில் அடங்கும்.

வீடு, தங்கும் விடுதிகள், ஓய்வுக்கால விடுதிகள் போன்றவற்றுக்கு முன்னுள்ள காலி இடத்தை வடிவமைப்பது கட்டடத்தோடு இணைந்த வடிவமைப்பாகும்.வெறும் கட்டடப் பரப்புக்குள் அடங்குவதல்ல லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர். நகரத் திட்டமிடலிலும் லேண்ட்ஸ்கேப் வடிவமைப்புக்கு முக்கிய இடமுண்டு.

திறந்த வெளியை எந்த விதத்தில் வடிவமைக்கிறோம், அந்த இடத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம், எவ்வகையில் உருவப்படுத்த வேண்டும், அழகுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பவையெல்லாம் கவனத்தில் கொண்டு வடிவமைப்பைச் செய்ய வேண்டும்.

லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் என்பதை தோட்டக்கலை சார்ந்தது என்ற ஒரே வார்த்தையில் அடையாளப்படுத்துவது சரியானதாக இருக்காது. வீட்டுத் தோட்டம் அமைப்பது அல்ல; வெறும் பசுமையான இடமாக மாற்றுவதும் அல்ல.

தோட்டக்கலை என்பது லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சரின் ஒரு பகுதி அவ்வளவே.

வீட்டுக்கு வெளியே அமைக்கப்படும் நீச்சல் குளம், விளையாட்டுக்கான இடம், அமருமிடம், ஓய்விடம், நடை பாதைகள், பாறைகள், டைல்ஸ் பதித்தல், கருங்கற்கள் பதித்தல், சில கட்டுமானப் பணிகள், நீரூற்று, நீர்வீழ்ச்சி, விளக்குகளை அமைப்பது உள்ளிட்ட மின்சாரம்சார்ந்த பணிகள், புல்வெளிகள், செடி கொடிகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை சார் பொருள்களை திட்டமிட்டு அமைப்பது என பன்முகத் தன்மை கொண்டதுதான் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்.

அழகியலை மட்டும் கருத்தில் கொண்டு லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் அமைக்கப்படுவதில்லை. அழகியலும், பயன்பாடும், சூழலியலும் கலந்து மிகக் கவனமாக உருவாக்கப்படுகிறது.

உதாரணமாக மலைசார்ந்த பகுதிகளில் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் பணி மேற்கொள்ளும் போது, மண் சரிவைத் தடுக்கும் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழை நீர் தேங்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிப்பு வரக்கூடாது. வடிகால் வசதி முக்கியம்.

வெளிப்புற வடிவமைப்பில் கட்டுமானம் தொடர்பான பணிகள் முதலில் மேற்கொள்ளப்படும். மழை நீர் மேலாண்மை, மின்தடப் பணிகள், புல்தரை, செடிகொடிகளுக்கான பாசன வசதி, நீச்சல் குளம், நீருற்று, நீர்வீழ்ச்சி ஆகிய பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும்.

பின்னர், எந்த வகையான செடிகள், மரங்கள் வைப்பது என்பதற்கான திட்ட வடிவம் இறுதி செய்யப்படும். அவற்றின் தவரவியல் பெயர், அதன் தன்மை, பூக்கும் காலம், எவ்வளவு நிழல் தரும் என்பது உள்பட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும்.

சில வாடிக்கையாளர்கள் சிலைகளை வைக்க விரும்பினால், அந்த விருப்பமும் நிறைவேற்றப்படும்.

தேவை, விருப்பம், இடம், பட்ஜெட் ஆகியவற்றைப் பொருத்து வடிவமைப்பு மாறுபடும் என்பதால் ஆயத்த ஆடை போல உடனடியாகக் கிடைக்காது.

நடுத்தரக் குடும்பத்திற்கும் இதற்கும் வெகுதூரம் என்ற அச்சம் பலரிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் அதிக இடம் தேவைப்படும் என்ற தவறான எண்ணம்தான். பத்துக்குப் பத்து இடத்தில் கூட இதனைச் செய்யலாம். ஏக்கர் கணக்கிலும் செய்யலாம். என் தனிப்பட்ட அனுபவத்தில் சொல்வதானால், பத்துக்கு பத்து இடத்திலும் லேண்ட்ஸ்கேப் செய்திருக்கிறேன், 300 ஏக்கரிலும் செய்திருக்கிறேன்.

இந்தப் பணியில் இடத்தின் அளவு முக்கியமல்ல; அளிக்கப்பட்ட இடத்தை எப்படி அழகுபடுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். பட்ஜெட்டும் அப்படித்தான்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரூ. 50 ஆயிரத்துக்கும் லேண்ட்ஸ்கேப் செய்யலாம், அதே இடத்தில் ரூ. 5 லட்சத்துக்கும் செய்யலாம்.

ஆக நமக்கான தேவைகள், நமது விருப்பம் போன்றவைதான் பட்ஜெட்டையும் தீர்மானிக்கிறது.

கட்டடத்துக்கான வரைபடம் தயாரிக்கும் போதே லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்டுகளையும் கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில், கட்டுமானப் பணி முடிந்த பிறகு லேண்ட்ஸ்கேப் அமைப்பது என்பது குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது.

லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெச்சர், கட்டடத்தோடு ஒன்றியிருக்க வேண்டுமே தவிர தனித்து அன்னியமாக இருக்கக் கூடாது. கட்டடப் பணிகள் ஆரம்பிக்கும் போதே எங்களோடு கலந்தாலோசித்தால், குறிப்பிட்ட அறையிலிருந்து வீட்டின் வெளியை ரசிப்பதற்கான வடிவமைப்பு, நடைபாதைக்குச் செல்ல கதவு, கட்டடத்தின் எந்தப் பகுதியும் பாதிக்காத வகையில் மிகச்சிறப்பான வெளிப்புற வடிவமைப்பு போன்றவற்றைச் செய்ய உதவிகரமாக இருக்கும் என்றார்.

புதிதாக வீடு கட்டுபவர்கள், இனி லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் குறித்தும் யோசிப்பது அவசியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE