18 வயசு திருவிழா

By ஜெய்

வாழ்க்கை என்றால் வீடு, சாப்பாடு, கல்லூரி, வேலை மட்டுமல்ல. கொண்டாட்டமும் வேணும் அல்லவா? ஆனால் இன்றைக்கு ‘லீவு கிடைக்கவில்லை’ போன்ற காரணத்தால் திருவிழாக்களைத் தள்ளிப்போடுகிறோம். ஆனால் நாம் தவறவிடுவது வெறுமனே ஒரு திருவிழாவை அல்ல, வாழ்க்கையில் நினைவில் கொள்ளத்தக்க ஒரு கொண்டாட்டத்தை.

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடிகளிலிருந்து கொஞ்சம் இளைப்பாற நமக்குக் கொண்டாட்டங்கள் அவசியம். அதனால் காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு தினம் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் வியாபாரத் தந்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தத் தினங்களெல்லாம் கொண்டாட்டத்துக்கான வாய்க்கால்கள்.

தினங்கள் பிரதானமல்ல; ஆனால் கொண்டாட்டங்கள் ஏதோ ஒருவகையில் புத்துணர்வைத் தரத்தானே செய்கின்றன. பரபரப்பான உலகத்தில் நட்பையும் உறவையும் நினைத்துக்கொள்ள இளைஞர்களுக்கு இத்தகைய நாட்கள் தேவைதானே?

கொண்டாட்டத்தின் கதை

இப்படியொரு கொண்டாட்டத்துக் கானது ‘களிமண் திருவிழா’. இதன் பின்னணியிலும் வியாபாரம்தான் உள்ளது. ஆனாலும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை. மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடும் திருவிழா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பழைய பாரதிராஜா படங்களில் செம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அப்படியான திருவிழாதான் ‘களிமண் திருவிழா’. இதில் ஒருவர் மேல் ஒருவர் களிமண்ணை வாரி இறைத்துக் கொண்டாடுகிறார்கள். தென் கொரியத் திருவிழாவான இதற்குப் பதினெட்டு வயதுதான் ஆகிறது. 1998-ம் ஆண்டு போராயாங் என்னும் தென் கொரியக் கடற்கரை நகரத்தில்தான் இந்தத் திருவிழா முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

போராயாங் நகரக் கடற்கரையான டெய்சனில் கிடைக்கும் களிமண் விஷேச குணமுடையது. இஸ்ரேலில் உள்ள சாக்கடலில் கிடைக்கும் களிமண்தான் உலகத்திலேயே கனிம வளம் மிக்க களி மண்ணாகச் சொல்லப் படுகிறது. ஆனால் இந்தக் களிமண்ணைக் காட்டிலும் டெய்சன் கடற்கரைக் களி மண்ணுக்குக் கனிம வளம் அதிகம்.

ஜெர்மானியம், பெண்டோனைட், ரேடியட் ஆகிய கனிமங்கள் இந்த மண்ணில் இருக்கின்றன. கனிமச் சத்து கொண்ட இந்தக் களிமண்ணைப் பயன்படுத்திப் பலவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான முறையில் உடல்பொலிவு பெற முடியும் எனச் சொல்லப்படுகிறது.

ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பது அந்தப் பகுதியின் முக்கியத் தொழில். இந்தக் களிமண் ஒப்பனைப் பொருள்களுக்குத் தென்கொரியா முழுவதும் வரவேற்புண்டு. ஆனால் இதன் சிறப்பை மேலும் விரிவுபடுத்தத்தான் இந்தக் களிமண் திருவிழாவை போராயாங் நகர நிர்வாகம் ஒருங்கிணைக்கத் தீர்மானித்தது. இதன் விளைவால் இந்தத் திருவிழா தென்கொரியாவைத் தாண்டியும் பரவியிருக்கிறது.

1998-ல் முதன்முதலில் களிமண் திருவிழா தொடங்கப்பட்டபோது 3 லட்சம் பேர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். முதன்முதலில் 16 விதமான ஒப்பனைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் 16 வகையான நிகழ்ச்சிகளுடன் இந்தத் திருவிழா நான்கு நாள் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்தத் திருவிழாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஏழு நாள் கொண்டாட்டமாகி, இப்போது பத்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்தத் திருவிழாவில் உலகெங்கிலுமிருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

வண்ணக் களிமண்

தென்கொரியர்கள் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உற்சாகத்துடன் கலந்துகொள்கிறார்கள். தென்கொரியாவின் ஈர்க்கக்கூடிய சுற்றுலா அம்சங்களில் இந்தக் களிமண் திருவிழாவும் ஒன்று. இந்தக் களிமண் திருவிழாதான் தென்கொரியாவில் வெளிநாட்டவர் அதிகம் பங்குகொள்ளும் திருவிழாவாகவும் இருக்கிறது. உலகெங்கிலும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறந்த திருவிழா என்னும் விருதையும் இது வாங்கியிருக்கிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ், தாய்லாந்தின் பட்டாயா போன்ற கொண்டாட்டத்தின் நிலமாக மாறிவிடும் போராயாங் நகரம். உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கிவிடுவார்கள். இந்தக் காலகட்டம் தென்கொரியாவில் கோடைக்காலம்.

இந்தத் திருவிழாவில் பல வண்ணங்கள் உள்ளன. களி மண்ணைப் பீய்ச்சி அடிப்பது, வண்ணக் களிமண்ணைப் பூசுவது என அட்டவணை இட்டுக் கொண்டாடுகிறார்கள். சிறைக்கூடம்போல பலூன் கூடம் உருவாக்கி அதற்குள் ஒளிந்து விளையாடும் முறையும் உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்குள் மண்பூசி விளையாடுவதும் உள்ளது. ஸ்பானிஷ் தக்காளித் திருவிழா குறித்த புகைப்படக் கண்காட்சியும் உள்ளது.

களிமண் மூலம் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவும் இந்த ஒப்பனைப் பொருள்கள் குறித்த சர்ச்சையும் இடையில் கிளம்பி ஓய்ந்தது. இந்தத் திருவிழாவும் வியாபார நோக்கமும் விமர்சிக்கப்பட்டன.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்தக் கொண்டாட்டத்திற்கான கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்