பசி போக்கும் பேஸ்புக் பக்கம்

ஃபேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் பொழுதுபோக்குக்குத் தீனி போடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவை பசித்தவர்களுக்கு உணவும் வழங்கிவருகின்றன. கோயம்புத்தூர் உணவு வங்கியின் பேஸ்புக் பக்கம் ( >https://www.facebook.com/groups/1152727148089065/?fref=nf), வாட்ஸ் அப் குழு மூலம்தான் இந்தச் சேவை நடைபெற்றுவருகிறது.

சென்னை உணவு வங்கியின் சேவைகளைப் பார்த்து, கோவையில் உணவு வங்கியின் கிளையைத் தொடங்கியிருக்கிறார் அதன் நிறுவனர் வைஷ்ணவி.

இதை அவர் ஆரம்பித்தபோது முதல்முறையாகப் பத்துப் பொட்டலங்கள் உணவை வழங்கியிருக்கிறார். இப்போது குறைந்தபட்சம் 150 பொட்டலங்களை வழங்குகிறார்கள்.

தங்களின் முகநூல் பக்கத்தில் 2000-க்கு மேற்பட்டவர்களும், வாட்ஸ் அப் குழுவில் 50-க்கும் மேற்பட்டவர்களும் இருப்பதாகத் தெரிவிக்கிறார் அவர். வாட்ஸ் அப்பில் தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, கோவை வ.உ.சி. மைதானத்தில் சந்தித்துக் களத்தில் பணியாற்றுகிறார்கள்.

வாரம் இரு முறை அதாவது, வியாழன் மாலை 6 மணிக்கும், ஞாயிறு காலை 11 மணிக்கும் உணவுகளை வழங்குகிறார்கள். ஆனால், மீதமாகும் உணவைப் பெறுவதில்லை.

பணம் பெறுவதில்லை

இவர்கள் யாரிடமும் உதவியைப் பணமாகப் பெற்றுக்கொள்வதில்லை. வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புகிறேன் என்று சொல்பவர்களிடம்கூட, ஆன்லைனில் பிரெட், பழங்கள், பிஸ்கட்டுகளை ஆர்டர் செய்யச் சொல்லி அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

வாரத்துக்கு இரு முறை உணவைக் கொடுப்பதை வழக்கமாக்கியிருப்பதால், சிலர் இவர்களுக்காகவே காத்திருப்பதும் உண்டாம். நிறையப் பேர் இவர்களின் முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு தங்களின் தினசரிச் சமையலைக் கொஞ்சம் அதிக அளவில் செய்து இவர்களுக்கு வழங்குகிறார்கள்.

உணவு தர முடியாதவர்கள் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாகப் பணியாற்றுகிறார்கள். “நேரடியாகச் சிலரின் பசியைப் போக்கிய மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைக்கிறது” என்கிறார் வைஷ்ணவி.

உலகப் பசியாளர்கள் தினமான மே 28 அன்று கோவையில் பேரணி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது இந்த அமைப்பு. இந்த நிகழ்வில் உணவை வீணாக்கக் கூடாது என்ற கருத்தில், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி)மாணவர் குழு மூலம் தெரு நாடகங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.

உலக மக்கள் தொகையில் சுமார் 90 கோடிப் பேர் பசியோடும் பட்டினியோடும் வாழ்வதாகச் சொல்லப்படும்போது இப்படிப் பசிபோக்கும் இளைஞர்களின் சேவை அவசியம் தேவையே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE