வயலின் வாசிக்கும் இளைஞன், பார்வையற்றோர், தரையில் கடை விரித்து பொம்மைகளை விற்கும் வியாபாரி, பலூன் மாமா, சோர்ந்துபோயிருக்கும் பர்ஸ் வியாபாரி இப்படிச் சிலர் சுரங்கப் பாதையில் காணப்படுக்கிறார்கள். பார்வையற்ற அந்தச் சிறுமி சுரங்கப் பாதையின் மத்தியில் இருக்கும் பருத்த தூண் அருகில் நிற்கிறாள். அவளைப் பலர் கடந்து செல்கிறார்கள்.
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வில் பொருந்திக் கிடக்கும் வலியை அந்த இளைஞரின் வயலினிலிருந்து எழும் நாதம் உணர்த்துகிறது.
அந்தச் சிறுமியின் மெல்லிய குரல் நம் மனதில் கனமேற்றுகிறது. எளிய பாடல் வரிகள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன. ‘நதி போகும் கூழாங்கல் பயணம்’ என்னும் தமிழச்சி தங்கபாண்டியனின் வரிகளில் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாட, இத்தனையும் ஒருசேரக் காட்சிப்படுத்திய ‘பிசாசு’ திரைப்படத்துக்கு இசையமைத்தவர் அரோள் கரோலி.
அருள் முருகன் தேனியைச் சேர்ந்தவர். சினிமா துறையில் அருள் எனப் பலர் இருப்பதால் ‘அரோள்’ எனப் பெயரைமாற்றினார் இயக்குநர் மிஷ்கின். அருளைக் கவர்ந்த இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இத்தாலிய வயலின் இசை மேதை கரோலி. ஆகவே அவர் பேரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டார்.
படிப்பா, இசையா?
அரோள் படித்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். சமையலறைக் கரண்டிகள் சிறுவன் அரோள் கையில் இசைக் கருவியானதைப் பார்த்த அப்பா, “இவன் கிட்ட இசை இருக்கு” என அம்மாவிடம் சொன்னார். ஐந்து வயதில் கர்னாடக சங்கீத வயலின் வகுப்பில் அரோள் சேர்த்துவிடப்பட்டார்.
“எனக்கு ஏழு வயதிருக்கும்போது ரோஜா படம் வெளிவந்தது. ‘சின்ன சின்ன ஆசை’ பாட்டைக் கேட்ட உடனே குஷியாக கர்னாடக சங்கீத வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போதே வாசித்துப் பார்த்தேன். ‘சாஸ்திரிய சங்கீதம் வாசிக்கும் இடத்தில் சினிமா பாடலா?’ என டென்ஷனாகிவிட்டார் குரு.
அன்றுதான் திரையிசை மீதான என்னுடைய ஆர்வத்தைப் பார்த்தார் அப்பா” என்கிறார் அரோள். அதன் பிறகு ஆசிரியர் சென்ட் பீட்டரிடம் மேற்கத்திய இசையில் பியானோ கற்றுக்கொள்ளச் சேர்த்துவிடப்பட்டார்.
12 வயதில் வயலின் மேதை கன்னியாகுமரியின் சிஷ்யன் ஆனார் அரோள். இன்றுவரை கன்னியாகுமரியிடம் வயலின் கற்றுக்கொள்வதாகப் பெருமிதம் கொள்கிறார். குருவோடு இணைந்து மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.
படிப்பில் சுட்டியாக இருந்தாலும் பிளஸ் டூ முடித்ததும், “இசைதான் என்னுடைய வாழ்க்கைனு தோணுது அப்பா. மேற்கொண்டு படிக்க விரும்பலை. இசையிலேயே இருக்கிறேன் என அப்பாகிட்ட கேட்டேன்” என்கிறார். எதிர்காலத்தைப் பற்றிய பயம் காரணமாக வேலைக்கான படிப்பாக சி.ஏ. படிக்க அனுப்பப்பட்டார். பெற்றோர் பேச்சை மீற முடியாமல் சி.ஏ. படித்து முடித்து ஆடிட்டராக வேலையிலும் சேர்ந்தார்.
எல்லாம் இசைக்காக
முதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் இசைக் கருவிகளாக அது மாறியது. “ஹோம் ஸ்டூடியோ செட் பண்ணத் தேவையான கருவிகளை ஒவ்வொன்றாக வாங்கினேன். சொல்லப்போனால் சவுண்ட் மிக்ஸிங், புரோகிராமிங் போன்ற இசையின் தொழில்நுட்பங்களையெல்லாம் யூடியூப் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன்” என்கிறார்.
சொந்த இசை ஆல்பங்களை உருவாக்கிக்கொண்டிருந்த இவருக்கு, ஒரு கட்டத்தில் இசையைத் தவிர வேறெதையும் நினைக்க முடியவில்லை. “2012-ல் வேலையை விட்டேன். ஆனால் வீட்டில் சொல்லப் பயந்து மறைத்துவிட்டேன்.
ஆனாலும் வீட்டுக்குத் தேவையான பணத்தை என்னுடைய சேமிப்பிலிருந்து தந்துகொண்டிருந்தேன்” என்கிறார். தான் இசையமைத்த டெமோ சிடிக்களைத் திரைத்துறையில் ஒவ்வொருவரிடமும் தந்திருக்கிறார்.
ஆனால் சினிமாவில் யாரையும் தெரியாத நிலை. செல்வாக்கு மிக்க குடும்பப் பின்னணியும் இல்லாததால் திறப்பு கிடைக்கவில்லை. கையிருப்பும் காலியானது.
“விரக்தியடைந்தேன். ஆனாலும் இதுதான் நீ இருக்க வேண்டிய இடம்; நீ இசையமைப்பாளர்தான் என மனதுக்குள்ளேயிருந்து ஒரு குரல் அழுத்தமாகச் சொன்னது” என்கிறார். ஒருவழியாக நண்பர் ஒருவர் மூலமாக இயக்குநர் மிஷ்கினைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
உண்மையான சவால்
அடுத்ததுதான் நிஜமான சவால் வந்தது. முன் தயாரித்த டெமோ இசையைக் கேட்க மறுத்தார் மிஷ்கின். இரண்டு முழு நீளத் திரைக்கதைகளைச் சொல்லி அதற்கு ஏற்ப பின்னணி இசையமைக்கச் சொன்னார். தன்னுள் இருந்த இசையின் வெவ்வேறு அம்சங்களை அழகாகக் கோத்துக் கொடுக்க அதில் பிரமித்துப்போனார் இயக்குநர். முதல் பட வாய்ப்பு கைகூடியது.
“படத்துக்கு ஏற்றவாறு என் மனதில் ஓடிய இசையை வயலினில் வாசித்துப் பதிவு செய்திருந்தேன். அது மிகவும் பிடிக்கவே ‘நதி போகும் கூழாங்கல் பயணம்’ பாடலை அதை அடிப்படையாக வைத்து உருவாக்கினோம்” என்கிறார்.
படம் முழுக்க சிம்ஃபனி இசை பாணியில் 40 பீஸ் ஆர்கெஸ்டிரா வைத்து பிரம்மாண்டமாக இசை உருவாக்கப்பட்டது. “அது சாத்தியமானதற்கு இசையை ரசிக்கும்; மதிக்கும் படக் குழு மிகவும் முக்கியக் காரணம்” என்கிறார் அரோள்.
‘பிசாசு’ படம் கண்ட வெற்றி பாண்டியராஜ் இயக்கிய ‘பசங்க-2’ பட வாய்ப்பைத் தேடித் தந்தது. குழந்தைகள் பற்றிய படம் என்பதால் இசையிலும் குழந்தைகளின் உலகைக் கட்டி எழுப்ப முயன்றார் அரோள். தற்போது மிஷ்கின் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’, இயக்குநர் வெற்றி மாறனும் ஃபாக்ஸ் ஸ்டார் புரொடக் ஷனும் இணைந்து தயாரிக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ உள்ளிட்ட படங்களுக்கு உற்சாகமாக இசையமைத்துவருகிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago