வேலையற்றவனின் டைரி 23 - இவ்வளவுதாங்க கல்யாணம்!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

அநேகமாக உலகிலேயே அதிக அளவில் காதல் கவிதைகள், காதல் கதைகள் எழுதப்படும், காதல் திரைப்படங்கள் எடுக்கப்படும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக இன்றும், நமது பெரும்பாலான திருமணங்கள், வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள்தான். இந்த வீட்டுத் திருமண ப்ராசஸ், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைமுறை அளவுக்கு மிக மிகச் சிக்கலானது.

திருமணம் என்றால் முதலில், மாப்பிள்ளையும் பெண்ணும்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மூரில் முதலில் ஜோசியரைத்தான் பார்ப்பார்கள். ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரப்போகிற வாழ்க்கைத் துணைநலத்தை ஒளிப் படத்தில் பார்த்துவிட்டு, கனவில் குலுமனாலிக்குப் போய் ஒரே ஸ்வெட்டருக்குள், “24 மணி நேரத்துல, எல்லா செகன்டும் அழகா இருக்கிற ஒரே பொண்ணு நீதான்” என்று பயங்கர ஃபீலிங்காகப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜோசியர்கள், “ஜாதகம் பொருந்தல. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா, குடும்பமே கோவிந்தா கோவிந்தா...” என்று குண்டைத் தூக்கிப் போடுவார்கள்.

ஜாதகம் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில்தான், பெண் பார்க்கும் படலம் நடைபெறும்.

மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குச் சற்று முன்பு, தனது தம்பியை வீட்டைச் சுற்றி, துரத்தித் துரத்தி அடி பின்னி எடுத்த பெண்ணை அமுக்கி, அலங்கரித்து, அறைக்குள் உட்காரவைப்பார்கள். அதற்கும் முன்பாக அப்பெண்ணுக்கு அழகான தங்கைகள் இருந்தால் கோயிலுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அனுப்பிவிடுவார்கள் (அதென்னவோ நம்மாட்களுக்கு, பார்க்கப்போகும் மணப்பெண்ணை விட, பெண்ணின் தங்கைகளையே எப்போதும் பிடித்துவிடும்).

முதலில் ஸ்வீட், காரம் வரும். நீங்கள் முதலாவதாக வரும் மாப்பிள்ளை என்றால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அல்லது அடையாறு ஆனந்த பவன். நீங்கள் எத்தனையாவது ஆள் என்பதைப் பொறுத்து ஸ்வீட் ஸ்டாலின் ரேஞ்ச் குறைந்துகொண்டே வந்து, கடைசியில் தெருமுனை பல்ராம் பலகாரக் கடையில், சென்ற வாரம் போட்ட மைசூர்பாகுதான் உங்களுக்குக் கிடைக்கும்.

பொதுவாக இந்த இனிப்பு, காரத்தைத் திருமணப் பெண் எடுத்து வரும் பழக்கம் கிடையாது. காபியைத்தான் பெண் எடுத்துவருவார். ஸ்வீட்டை வேறு ஒரு சொந்தக்காரப் பெண்தான் எடுத்துவருவார். அந்தப் பெண் கொஞ்சம் அழகாக இருந்துவிட்டால், நம்ம மாப்பிள்ளைப் பசங்கள் அந்தப் பெண்ணை சந்தோஷத்துடன் பார்ப்பார்கள். இதைக் கவனிக்கும் பெண்ணின் அப்பா உஷாராகி, “பொண்ணு காப்பி எடுத்துட்டு வரும்” என்று ஐந்து வினாடி மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போடுவார். அடுத்து, பெண் வருவார்.

நல்லவேளை, இப்போதெல்லாம் பெண்கள் தலை குனிந்து வருவது குறைந்துவிட்டது. பட்டுப்புடவைகூட அரிது. சுடிதாருடன் குடுகுடுவென்று ஓடி வந்து, சோஃபாவில் ஸ்டைலாக அமர்ந்துகொள்கிறார்கள். பிறகு மாப்பிள்ளையைக்கூடச் சரியாக பார்க்காமல், முதலில் தன் ஆயுட்கால எதிரியைத்தான் பார்ப்பார்கள் (வேறு யார்? மாமியார்தான்). பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் பார்க்காததுபோலப் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த நேரத்தில் டைம் பாஸ் செய்வதற்காக, பெண்ணின் அப்பா, தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கிரிக்கெட் மேட்ச்கூடப் பார்த்திராத பையனின் அப்பாவிடம், “நேத்து விராட் கோலி அடிச்சான் பாருங்க” என்று கூற... பையனின் அப்பா, “எந்த கோலி? எவன அடிச்சான்?” என்று திருதிருவென்று விழிக்க... அது ஒரு சைட் ட்ராக்.

பிறகு, ‘நாங்க போய்ப் பேசிட்டுத் தகவல் சொல்றோம்’ என்று கிளம்புவார்கள். மாப்பிள்ளையின் சகோதரிகள், பெண்ணைவிட அழகு குறைவாக இருந்தால் அவர்கள், “ம்... பொண்ணு வெள்ளையாதான் இருக்கு... ஆனா சோகை வெளுப்பு. கொஞ்சம் அழுத்தமான பொண்ணா இருக்கும் போலத் தெரியுது. நீங்க முடிவு பண்ணிக்குங்க" என்பார்கள். அப்படி, இப்படிப் பேசி ஒரு முடிவுக்கு வந்து, பெண் வீட்டாரிடம் மற்ற விவகாரங்கள் எல்லாம் பேசி, திருமணத்திற்கு நாள் குறிப்பார்கள்.

திருமணம் முடிவானவுடன், மாப்பிள்ளை வீட்டார் அளிக்கும் குடைச்சலைவிட, ஏற்கெனவே திருமணமான பெண்ணின் அக்காக்கள் கொடுக்கும் குடைச்சல்தான் அதிகம். மணப்பெண்ணிற்கு, அவர்களுக்குப் போட்டதைவிட ஒரு ஐந்து பவுன் கூடப் போட்டுவிட்டால், முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வார்கள். “எனக்கெல்லாம் நாப்பது பவுன்தானே போட்ட. நானும் உன் வயித்துலதானே பொறந்தேன். இல்ல... கோயில்ல கிடந்து எடுத்துட்டு வந்தியா?” என்று அம்மாவிடம் முகத்தை நொடிக்க... இழப்பை ஈடு செய்வதற்காக, இப்போது கொஞ்சம் காஸ்ட்லியாக புடவை வாங்கித் தந்தாலும், இவர்கள் கொஞ்சம் மனக்குறையோடுதான் இருப்பார்கள்.

திருமண நாள்தான், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். அன்று மிகவும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள், மாப்பிள்ளையின் அக்கா அல்லது தங்கை கணவர்கள். இவர்கள் மாமனார் வீட்டுக்கு வரும்போதே, தாசில்தார் அலுவலகத்துக்கு வரும் கலெக்டர் போலக் கொஞ்சம் விறைப்பாகத்தான் வருவார்கள். மாமனார் வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம். இவர்கள், ‘எனக்கு மரியாதை தரல’ என்று எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுகள். இவர்களைக் கவனிக்க ஒரு தனி பாம் ஸ்குவாடைப் போட்டு, ரொம்ப கேர்ஃபுல்லாக டீல் செய்ய வேண்டும். அப்படி டீல் செய்தும், சாப்பாட்டில் அவர்களுக்கு உடைந்த அப்பளம் வைத்துவிட்டால், “டேய்… உடைஞ்ச அப்பளம் வச்சு அவமானப்படுத்திட்டாங்கடா. கல்யாணத்த நிறுத்துங்கடா...” என்று டெரர் முகம் காட்டுவார்கள்.

இந்த கலாட்டாக்களுக்கு நடுவே, இந்தத் திருமண மண்டப தேவதைகள் பண்ணும் அழகிய அலப்பறைகள் தனி. மணவீட்டாரின் உறவினர் வீட்டு வயசுப் பெண்கள், திருமண தினத்தன்று தனி அவதாரம் எடுக்கிறார்கள். தலைக்குக் குளித்துவிட்டு, எண்ணெய் தடவாமல் லூஸ் ஹேருடன், மல்லிகைப்பூ... ஜிமிக்கிகள், பட்டுப் பாவாடை தாவணியுடன் அவர்கள் நடமாடும்போது, சுமாரான தேவதைகள்கூட சூப்பராகவும், சூப்பரான தேவதைகள் சூப்பர் டீலக்ஸ் தேவதைகளாகவும் உருமாறி உலாவர... பசங்கள் மொய் கவர் பின்னால் கவிதை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இந்த தேவதைகள், வாலிபப் பசங்கள் தங்களைக் கவனிப்பது தெரிந்துவிட்டால் அவ்வளவுதான்.

நெற்றியில் வந்து விழாத தலைமுடியைப் பின்னால் பின்னால் தள்ளிக்கொண்டு, ஒரு செயற்கையான உற்சாகத்துடனும், அலட்டலான முகபாவத்துடனும், சத்தமாகத் தோழிகளிடம் பேசியபடி, பசங்கள் தன்னைப் பார்க்கும்போது, நாக்கு நுனியை உள்கன்னத்தில் அழுத்தி, ஒரு சுழட்டு சுழற்றும்போது கன்னத்து சதை ஒரு அலை போல உயர்ந்து, இறங்கும் பாருங்கள்… பசங்கள் அத்தனை பேருக்கும் ஜிர்ரென்று ரத்தம் மண்டையில் ஏறும்.

பிறகு இந்த வாண்டுப் பசங்கள் விஷயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மணப்பெண் வீட்டுக் குழந்தைகளுக்கும், மாப்பிள்ளை வீட்டுக் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் அடிதடி சண்டை, ஒரு திருமணத்தையே நிறுத்திவிடும் அளவுக்கு மகாசக்தி வாய்ந்தது. சற்றுமுன் கிச்சனில் 10 குலோப்ஜாமூன்களை முழுங்கிவிட்டு வந்திருக்கும் பெண் வீட்டு குண்டுப் பையன், மாப்பிள்ளை வீட்டுப் பையனை அடித்துவிட்டு, உஷாராகி, அவனே அழுது ஊரைக் கூட்டிவிடுவான். பஞ்சாயத்தின்போது பையனின் அம்மா, “எங்க வீட்டு ஆளுங்களுக்கெல்லாம் இந்த மாதிரி கைய நீட்டுற பழக்கம் கிடையாது.

உங்காளுங்கதான் முதல்ல அடிச்சிருப்பாங்க. நீ அழாதடா செல்லம்” என்று பையனின் கண்களைத் துடைத்துவிடுவார்கள். பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டில், “வார்த்தையப் பார்த்து விடணும். எங்க வீட்டு ஆளுங்க மட்டும் ரௌடியா?” என்று கேட்க, “அதான் பாத்தோமே… நிச்சயதார்த்தத்துல…” என்று அவர்கள் கேட்க, “ஏன் நிச்சயதார்த்தத்துல என்ன?” என்று இவர்கள் எகிறுவார்கள். விஷயம் பெரியவர்கள் சண்டையாக தீவிரமாக மாற, குண்டுப் பையன் நைஸாக நழுவி, பதினோராவது குலோப்ஜாமூனை முழுங்க கிச்சனுக்குச் சென்றுவிடுவான்.

இவ்வாறு ஒரு மாதிரியாக கல்யாணம் முடிந்து, சிறிது காலத்திற்குத் தம்பதிகள் எப்போதும் கண்களில் தாபத்துடன், இரண்டடி உயரத்தில் மிதந்துகொண்டிருப்பார்கள். மிதந்து முடித்து, அவரவர்களின் மோக அளவுக்கேற்ப, மூன்று முதல் ஆறு மாதங்களில் மெல்லத் தரைதட்டி, “ஏங்க... என் போர்வையக் கொஞ்சம் மடிச்சு வைச்சுடுறீங்களா?” என்று புது மனைவி கொஞ்சலாகக் கேட்பாள். இப்போது சற்றே தெளிந்திருக்கும் கணவன், “என்னது... போர்வைய நான் மடிச்சு வைக்கணுமா? என்னத்த பிள்ளை வளர்த்து வச்சுருக்காங்களோ?” என்பான்.

“என்ன பத்தி என்ன வேணும்ன்னாலும் சொல்லுங்க. எங்க வீட்ட ஏன் இழுக்குறீங்க?”

“ஏன் இழுத்தா என்ன? பெரிய கலெக்டர் குடும்பம்...”

“உங்க வீடு மட்டும் பெரிய கவர்னர் குடும்பம்...”

அவ்ளோதாங்க கல்யாணம். பிறகு கலெக்டரும், கவர்னரும் சேர்ந்து பஞ்சாயத்து செய்தாலும் இந்தப் பிரச்சினை தீரவே தீராது.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்