வேலையற்றவனின் டைரி 10 - கமல்ஹாசனும் காளிமுத்துவும்

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

2009, டிசம்பரில் ஒரு பனிக்கால இரவு.

இணையத்தில் நான், “Wrapper and title sells books’ என்ற கட்டுரையைப் படித்துவிட்டு படுத்தபோது, 12 மணிக்கு மேல் இருக்கும். வித்தியாசமான, கவனத்தை ஈர்க்கும் தலைப்பிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. 2010, ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவர இருந்தது. அந்தப் புத்தகத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்று எனது மூளையின் அத்தனை ஒயர்களையும் ஒன்றாக இணைத்துச் சிந்திக்க ஆரம்பித்தேன். தொகுப்பில் வரும் அனைத்துக் கதைகளின் தலைப்புகளையும் மனதில் ஓடவிட்டு, உருண்டு புரண்டு சிந்தித்து, ஏறத்தாழ 3 மணியளவில் நான் தலைப்பை முடிவு செய்தபோது இந்தியாவில் என்னையும், ஏ.ஆர். ரஹ்மானையும் தவிர எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தலைப்பு: கமல்ஹாசனும், காளிமுத்துவும். கல்கி வார இதழில் அதே தலைப்பில் வெளிவந்த சிறுகதை அது. அதற்கு முந்தைய ஆண்டு வெளிவந்த எனது ‘தீராக்காதல்” புத்தகம், சென்னைப் புத்தகக் காட்சியில் 150 பிரதிகள் விற்றதற்கே எனக்குக் கன்னாபின்னாவென்று புல்லரித்திருந்தது. வெறும் காதலுக்கே இப்படிப் புல்லரித்ததென்றால், காதல் இளவரசன் கமல்ஹாசனால் எவ்வளவு புல்லரிக்கும்? இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்த எனது தோளில் நானே தட்டி, “சூப்பர்ரா சுரேந்திரா” என்று பாராட்டிவிட்டுத் தூங்கினேன்.

அன்றைய கனவில், கமல்ஹாசனே அந்தப் புத்தகத்தை நேரு ஸ்டேடியத்தில் வெளியிட்டு, “நண்பர் சுரேந்தர்நாத்தை எனக்கு அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே தெரியும்” என்று கூற… முன்வரிசையில் அமர்ந்திருந்த எனது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தனர். பிறகு புத்தகம் அமோகமாக விற்பனையாக… ஹிக்கின்பாதம்ஸ் வாசலில் திரண்ட வாசகர்கள், புத்தகங்கள் தீர்ந்துபோனதால் வன்முறையில் ஈடுபட… காவல் துறையினர் கண்ணீர் குண்டுகள் வீசி வாசகர்களைக் கலைத்தனர்.

பின்னர் நான் டிவியில் தோன்றி, “புத்தகங்கள் அச்சாகிக்கொண்டிருக்கிறது. அது வரையிலும் வாசகர்கள் அமைதி காக்குமாறும், எவ்வித வன்முறைச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்” என்றும் வேண்டுகோள் விடுத்த பிறகுதான் வாசகர்கள் அடங்கினர். ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில், “Violence in Bookshop” என்ற தலைப்பில் விவாதம் நடத்திய அர்ணாப் கோஸ்வாமி என்னிடம், “Mr. Surendarnath… Mr. Surendarnath… Let me speak… let me speak….” என்று என்னைப் பேசவிடாமல் அவரே பேசிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலை எழுந்தவுடன், எனது பதிப்பாளரும், நண்பருமான புகழேந்தியைச் சந்தித்து தலைப்பைச் சொல்ல… அவர், “நல்ல டைட்டில். தீராக்காதல விட இது சூப்பரா போகும்” என்றார். பிறகு ஒரு நண்பனிடம் தலைப்பைச் சொன்னேன். அவன் புதிதாகக் காதலிக்க ஆரம்பித்த பெண் போல் கண்கள் மின்ன, “தலைப்புக்கே புத்தகம் பிச்சுகிட்டுப் போகும்டா” என்றவன் என்னிடம் மெதுவாக, “புத்தகம் வர்ற வரைக்கும் தலைப்ப வேற எழுத்தாளர்ங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணாத. காப்பியடிச்சுடப் போறாங்க” என்று நல்லவேளையாக எச்சரிக்கை செய்ததால் தலைப்பு தப்பியது. பிறகு அந்தத் தொகுப்பிற்கான கதைகளை டைப் செய்தவரிலிருந்து, பதிப்பகத்தின் விற்பனையாளர்கள் வரை அனைவரும் “டைட்டில் பின்னுது சார்…” என்று சொல்லும்போதெல்லாம் ஒரு மாதிரியாக, கெத்தாக, கைப்புள்ள வடிவேலு போல் தலையாட்டிக்கொண்டேன்.

2010 புத்தகக் காட்சி ஆரம்பித்தது. முதல் நாள் சற்று தாமதமாகச் சென்ற நான், பதிப்பக ஸ்டாலில் இருந்த விற்பனையாளரிடம், “என்ன பாண்டியன்? கமல் புக்கு எப்படி போகுது?” என்றேன். அவர் என்னை உணர்ச்சியில்லாமல் பார்த்தபடி, “என்னன்னு தெரியல…. ஒண்ணுகூட போகலையே சார்….” என்று கூற…. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. தொடர்ந்து அவர், “போன வருஷம் தீராக்காதல்லாம் வந்த ஒரு மணி நேரத்திலேயே பத்து காப்பி போச்சு சார்” என்றபோது எனக்கு நெற்றியில் வியர்த்தது.

அப்போது ஒருவர் எனது தீராக்காதல் புத்தகத்துடன் பில் போட வந்தார். பாண்டியன் அவரிடம், ‘இந்தப் புத்தகமும் அதே ஆத்தர்தான்” என்று ‘கமல்ஹாசனும் காளிமுத்துவும்’ புத்தகத்தை நீட்டினார். அவர் கையால் கூடப் புத்தகத்தைத் தொடாமல் நடையைக் கட்ட… ஆத்தராகிய நானும் நடையைக் கட்டினேன். பின்பு வந்த நாட்களில் விற்பனை ஆனாலும், பெரிதாக ஒன்றும் விற்பனை ஆகவில்லை.

பிறிதொரு நாள் சென்றபோது பாண்டியன், “இன்னைக்கி புத்தகக் காட்சில கமல் பேச வர்றாரு. உள்ள இந்தப் பக்கம் வந்தாருன்னா அவரு கைல ஒண்ணு தள்ளிவிட்டுடலாம்” என்று கூற… எனக்குள் கட் ஷாட்களாக ‘நேரு ஸ்டேடியம், ஹிக்கின்பாதம்ஸ்’ கலவரக் காட்சிகள் ஓடின. ஆனால், கமல் புத்தகக் காட்சிக்குள் வரவே இல்லை. அந்தச் சென்னைப் புத்தகக் காட்சியிலும், பிறகு பிற ஊர்களிலும் அந்தப் புத்தகம் குறைவாகத்தான் விற்பனையானது. தலைப்பில் புகழ்பெற்ற கமல் இருந்தும், அந்தப் புத்தகம் அவ்வளவாக விற்பனை ஆகாததற்கான காரணத்தைக் கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில்தான் கண்டுபிடித்தேன்.

பிறிதொரு நாள் சென்றபோது பாண்டியன், “இன்னைக்கி புத்தகக் காட்சில கமல் பேச வர்றாரு. உள்ள இந்தப் பக்கம் வந்தாருன்னா அவரு கைல ஒண்ணு தள்ளிவிட்டுடலாம்” என்று கூற… எனக்குள் கட் ஷாட்களாக ‘நேரு ஸ்டேடியம், ஹிக்கின்பாதம்ஸ்’ கலவரக் காட்சிகள் ஓடின. ஆனால், கமல் புத்தகக் காட்சிக்குள் வரவே இல்லை. அந்தச் சென்னைப் புத்தகக் காட்சியிலும், பிறகு பிற ஊர்களிலும் அந்தப் புத்தகம் குறைவாகத்தான் விற்பனையானது. தலைப்பில் புகழ்பெற்ற கமல் இருந்தும், அந்தப் புத்தகம் அவ்வளவாக விற்பனை ஆகாததற்கான காரணத்தைக் கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில்தான் கண்டுபிடித்தேன்.

ஒரு வாசக நண்பர் எனது எட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்தார். ஸ்டாலில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தவுடன், “சார்… நான் விகடன்ல உங்க கதைகளைப் படிச்சிருக்கேன்…” என்று ஆரம்பித்தவர், கால் மணி நேரத்திற்கு என்னை எக்கச்சக்கமாகப் புகழ… அவர் என்னைப் புகழ்ந்த ரேஞ்சைப் பார்த்தால், தத்திமுத்தி எப்படியும் 2096-ல் நான் தமிழக முதலமைச்சராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிந்தன. சரி… இவ்வளவு புகழ்கிறாரே… கமல் புத்தகத்தையும் வாங்கியிருப்பார் என்று பார்த்தால் அவர் அதை வாங்கவில்லை. நான், “இந்த புத்தகத்தைப் பாக்கலையா நீங்க?” என்று “கமல்ஹாசனும் காளிமுத்துவும்” புத்தகத்தைக் காண்பித்தேன். அவர் ஆர்வம் காட்டாமல் “இருக்கட்டும் சார்… அப்புறம் வாங்கிக்குறேன்” என்றார்.

நான் மனதைத் தளரவிடாமல் ஒரு லேகிய வியாபாரி போல், “இதுல பாத்தீங்கன்னா சார்… மொத்தம் 25 கதை இருக்கு சார். காதல், நகைச்சுவை, தேசப்பற்று, குடும்பப் பாசம்ன்னு அத்தனையும் இருக்கு சார். 224 பக்கங்கள் கொண்ட டெமி சைஸ் புத்தகத்தோட விலை வெறும் நூறு ரூபாய்தான் சார். நீங்க சரவணன்பவன்ல ஒரு தோசையும், காபியும் சாப்பிட்டா ஆவுற காசு சார்…” என்று கூறிவிட்டு மூச்சுவிட்டேன். அப்போதும் அவர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், “இருக்கட்டும் சார்…” என்று புத்தகத்தை வைத்துவிட்டார். கடுப்பான நான் கிட்டத்தட்ட அவரை மிரட்டுவது போல், “ஏன் சார் வாங்கல?” என்றேன்.

அவர், “தலைப்பைப் பார்த்து, நடிகர் கமல்ஹாசனையும், அரசியல்வாதி காளிமுத்துவையும் ஒப்பீடு செய்து எழுதப்பட்ட ஆய்வு நூல்னு நினைச்சுகிட்டேன். அப்புறம், நீங்க கதைன்னு சொன்ன பிறகும்கூட வாங்கத் தோணல சார்” என்று கூறியபோதுதான் ஒரு தலைப்பு, ஒரு வாசகரின் மனதில் என்னவிதமான சித்திரங்களை உருவாக்கும் என்று தெரிந்தது. ‘கமல்ஹாசனும் காளிமுத்துவும்” கதையில், ஒரு அழகிய பெண், கமல்ஹாசன் போன்ற அழகிய ஆணைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவாள். ஆனால், அழகற்ற ஒரு கிராமத்து காளிமுத்துவைத் திருமணம் செய்துகொள்வாள். மற்றபடி அரசியல்வாதி காளிமுத்துவுக்கும், கதைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ ஆய்வு நூல் என்று நினைத்துத் தெறித்து ஓடிவிட்டார்கள்.

ஆனால், இந்தத் தலைப்புக்காகவே வாங்கிய சிலரும் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ஒருவர் போன்செய்து, “சார்… உங்க கமல்ஹாசனும், காளிமுத்துவும் படிச்சேன் சார்…” என்றார். நான், “நீங்க ஏற்கனவே என் கதைகளையெல்லாம் படிச்சிருக்கீங்களா?” என்றேன்.

“இல்லங்க. நீங்க யாருன்னே தெரியாதுங்க. நான் இங்க கமல் ரசிகர் நற்பணி இயக்கத்துல இருக்கேன்” என்றார்.

இரண்டு வாரத்திற்கு முன்பு, புதுக்கோட்டையிலிருந்து ஒருவர் போன்செய்து, “சார்… உங்க கமல்ஹாசனும், காளிமுத்துவும் படிச்சேன் சார்” என்றார்.

“நீங்க ஏற்கனவே என் கதைகளைப் படிச்சிருக்கீங்களா?” என்றேன்.

“இல்லங்க”

“அப்படியா…. உங்க பேரு என்ன?” என்றேன்.

“காளிமுத்து”

- தொடரும்
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்