வீடு அல்லது மனை வாங்க வாங்கப்போகிறீர்களா? எந்தப் பகுதியில் வாங்குவது என்று முடிவு செய்து விட்டீர்களா? வாங்கப் போகும் இடத்தில் வீடு அல்லது மனை விலை நிலவரங்கள் பற்றி விசாரித்தீர்களா? மனை அல்லது வீட்டின் விலை கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? - இதுபோன்ற கேள்விகளுக்குத் தகவல்களைத் தெரிவிக்கத் தனியார் கட்டுமான நிறுவனங்கள் நிறைய உள்ளன. வீதிக்கு வீதி தரகர்கள் உள்ளனர். ஆனால், இதுபோன்ற தகவல்களைத் திரட்டிக் குறியீடு முறையில் தேசிய வீட்டு வசதி வங்கியும் (National Housing Bank) பொதுமக்களுக்குத் தெரிவித்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வங்கி அளிக்கும் ‘ரெசிடெக்ஸ்’ (Residex) குறியீடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ரெசிடெக்ஸ் என்பது சென்செக்ஸ் குறியீடு போன்றதுதான். பங்குச் சந்தையில் பங்குகளின் விலை என்ன? பங்குகளின் விலை குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா என்பதைச் சென்செக்ஸ் குறியீடு மூலம் குறிப்பிடுவது போல நகரங்களில் வீடு, மனை விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா? தற்போதைய நிலவரம் என்ன போன்ற தகவல்களை அளிப்பதுதான் ரெசிடெக்ஸ் குறியீடு. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகளைக் குறியீடு முறையில் சொல்வதைப் போல ரெசிடெக்ஸ் குறியீடு முறையில் தேசிய வீட்டு வசதி வங்கி குறிப்பிடுகிறது. சொத்தின் சந்தை மதிப்பு, வழிகாட்டு மதிப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்கள், வீட்டுக் கடன் அளிக்கும் வங்கிகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாகக் குறியீடு வெளியிடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் ஒருபகுதியாகக் கடந்த 2007ஆம் ஆண்டில் மத்திய அரசு, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இணைந்து நாட்டில் முக்கிய நகரங்களில் ரெசிடெக்ஸ் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தின. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலும் அறிமுகமானது. தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை என இரு நகரங்கள் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வீடு, மனை மதிப்புகளின் தகவல்களை ரெசிடெக்ஸ் மூலம் தேசிய வீட்டு வசதி வங்கி பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
2007ஆம் ஆண்டில் அடிப்படை புள்ளிகளைக் கொண்டு தற்போது ஒவ்வொரு ஆண்டும் 4 முறையோ அல்லது இரு முறையோ வீடு, மனை மதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்?
‘’ நிறைய பயன் உள்ளது. பங்குச் சந்தை தொழிலில் உள்ளவர்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளின் விலை மதிப்பைப் பார்த்து அதை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். அதேபோல நாம் வீடு, மனை வாங்குவதை ரெசிடெக்ஸ் குறியீடு அறிந்து வாங்க முடியும். நாம் வீடு வாங்க உத்தேசித்துள்ள பகுதியில் சொத்தின் விலை தற்போது என்ன? 3 மாதங்களுக்கு முன்பு என்ன விலை? குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டு நாம் அதை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். அல்லது இன்னும் காத்திருக்கலாமா என்றும் முடிவு எடுக்கலாம். தரகர்கள் மூலம் நாம் விசாரிக்கும் போது அவர்கள் அளிக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்பதை நம்மால் ஆராய முடியாது. வீட்டின் விலையை இஷ்டத்துக்கு அதிகரித்துச் சொல்லவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் தகவல் ஆதாரபூர்வமானது. வீடு அல்லது மனை வாங்கும் முன்பு ரெசிடெக்ஸ் குறியீடுகளைப் பார்த்துச் சென்றால், அதன் அடிப்படையில் வீட்டை விற்பவர்களிடம் நாம் அடித்துப் பேசலாம்’’ என்கிறார் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன்.
சென்னையைப் பொறுத்தவரை ரெசிடெக்ஸ் குறியீட்டுக்காக 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் அருகருகே உள்ள 3 அல்லது 4 பகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து கடைசியாக 2013ஆம் ஆண்டு ஜூலை-செப்டம்பர் மாதங்களுக்கான குறியீடு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. கோவையைப் பொறுத்தவரை 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ரெசிடெக்ஸ் குறியீடுகளைத் தேசிய வீட்டு வசதி வங்கியின் http://www.nhb.org.in/Residex/Data&Graphs.php என்ற இணையதளத்திலும் பார்க்காலாம். வீடு, மனை வாங்கத் திட்டமிடுவோர் இந்த இணையதளத்தைப் பார்வையிடுவது நல்லது. வெளி மாநில நகரங்களில் சொத்து வாங்குபவர்களுக்கும் ரெசிடெக்ஸ் குறியீடு வழிகாட்டுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago