லியாண்டர் பயஸின் ரத்தத்தில் ஒலிம்பிக் போட்டி கலந்திருக்கிறது என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றினாலும், உண்மை என்னவோ அதுதான். இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பயஸ் பங்கேற்பது இது ஏழாவது முறை. கடந்த 24 ஆண்டுகளாக ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்காக அவர் பங்களித்துவருகிறார். 1992-ல் இந்தியாவுக்காக முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் அவர் விளையாடியபோது, அவருக்கு 19 வயது. இப்போது 43 வயது. ஆனால், அவருடைய மனதிலும் உடலிலும் டென்னிஸுக்கான வீரியம் மட்டும் குறையவேயில்லை.
ஒலிம்பிக் ரத்தம்
பயஸ் மட்டுமல்ல, அவருடைய அப்பா வேஸ் பயஸ் 1972 மியூனிக் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றவர். பயஸின் அம்மா ஜெனிபர் கூடைப்பந்து வீராங்கனை.
1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் டென்னிஸ் தனிநபர் பிரிவில் லியாண்டர் பயஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். 1952-க்குப் பிறகு இந்தியாவுக்காக ஒரு தனிநபர் வென்ற ஒலிம்பிக் பதக்கம் அது. இதையடுத்து, 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை 12 பேர் மட்டுமே இந்தியாவில் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்கிறார்கள். அவருடையது ஒலிம்பிக் ரத்தம்தான் என்பதில் இனி சந்தேகம் தேவையில்லை.
4 வருஷ சமாதானம்
ரியோ ஒலிம்பிக்கில் ரோஹன் போபன்னாவுடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் போட்டியில் பயஸ் விளையாட இருக்கிறார். அதேநேரம் பயஸுடன் ஜோடி சேர்ந்து விளையாட போபன்னா விரும்பவில்லை. அகில இந்திய டென்னிஸ் சங்கம் வலியுறுத்தியதன் அடிப்படையில், பயஸுடன் ஜோடி சேர அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 2012 ஒலிம்பிக் போட்டிகளின்போது, இரட்டையர் தரவரிசையில் பயஸ் முதல் 10 இடங்களுக்குள் இருந்தார். ஆனால், பழைய பகை காரணமாக பயஸுடன் ஜோடி சேர மறுத்த மகேஷ் பூபதி, போபன்னாவுடன் ஒலிம்பிக்குக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல பயஸ் மறுத்தாலும், விஷ்ணுவர்தனுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். வழக்கத்துக்கு மாறாகக் கலப்பு இரட்டையரில் சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாட சர்ச்சைக்குரிய வகையில் பயஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் போணி ஆகவில்லை. டென்னிஸ் பிரிவில் எல்லோருக்கும் ஏமாற்றத்தைத் தந்த ஓலிம்பிக் அது.
சிறு வயது மேதமை
அப்போது போபன்னாவுடன் பூபதி இணைந்து ஆடியதற்குச் சமாதானப்படுத்தும் விதமாகவே, தற்போது போபன்னாவுடன் பயஸ் ஜோடி சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், சர்ச்சைகளைத் தாண்டி டென்னிஸ் மீதான பயஸின் காதலையோ, அவருடைய திறமையையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
1990-ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஜூனியர் சாம்பியன் பட்டங்களை ஒரே ஆண்டில் வென்றது மட்டுமல்லாமல், ஜூனியர் தரவரிசையில் முதலிடத்துக்கும் பயஸ் வந்தார். தன் டென்னிஸ் வாழ்க்கையை இரட்டையர் பிரிவுகளுக்கானதாக பயஸ் மாற்றிக்கொண்டபோது, மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் தொடர் வெற்றியைச் சுவைக்க ஆரம்பித்தார்.
இரட்டையரில் சாதனை
இதுவரை ஆண்கள் இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 8 பட்டங்களையும், கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 10 பட்டங்களையும் அவர் வென்றிருக்கிறார். ஆண்கள் இரட்டை யரில் மூன்று பட்டங்கள் மகேஷ் பூபதியுடன் ஆரம்ப காலத்தில் வென்றவை. பிற்பாடு பூபதியுடனான உறவு கசந்துபோனது. பூபதி தவிர, ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் ரஃபேல் நாடால், ஆண்டி முர்ரே, ஸ்டான் வாவ்ரின்கா என உலகின் ஸ்டார் வீரர்களுடன் சேர்ந்து டென்னி்ஸ் பந்துகளை பயஸ் விரட்டியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் மார்டினா ஹிங்கிஸுடன் ஃபிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றதன் மூலம், நான்கு கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பட்டங்களையும் குறைந்தபட்சம் ஒரு முறை வென்றவர் என்ற பெருமையை பயஸ் பெற்றுள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இதே சாதனையை நீண்டகாலம் முன்பே அவர் நிகழ்த்திவிட்டார்.
எதற்கும் பயமில்லை
இவ்வளவு நீண்ட, வெற்றிகரமான சர்வதேச டென்னிஸ் வாழ்க்கை வேறு எந்த இந்திய வீரருக்கும் அமைந்தது இல்லை. இந்தக் காலத்தில் உடல் அளவில் தளர்ந்துபோயும்கூட, பயஸ் மீண்டு வந்துள்ளார். 2003-ல் மூளைப் புற்றுநோய் இருந்ததாகச் சந்தேகப்பட்டு அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடாவில் சிகிச்சை பெற்றார். அதிர்ஷ்டவசமாக அது வெறும் ரத்தக்கட்டி என்று பின்னர் கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சைக்காக அவருடைய டென்னிஸ் வாழ்க்கைக்கு ஆறு மாதம் விடுமுறை விட வேண்டியிருந்தது.
“நான் எதைக் கண்டும் பயப்படுவதில்லை. நான் என்னை நம்புகிறேன். அதைவிட, என் கூட்டாளியை நம்புகிறேன்" என்பதுதான் பயஸின் டென்னிஸ் தாரக மந்திரம். இந்த முறை பதக்கத்தோடு இந்தியாவை மகிழ்விப்பாரா...? பார்ப்போம்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago