காதல் வழிச் சாலை 06: சந்தேகத்துக்கு இங்கே இடமில்லை!

காதலைத் திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் ‘அப்செஷன்’ பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். சாதாரணமாகவே காதலில் இந்த அப்செஷன் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். காதலிக்கப்படுபவரும் ஏற்றுக்கொண்டு எல்லாம் சரியாகப் போனால் அந்த அப்செஷன் லேசாகக் குறையவும் செய்யும். ஆனால் பழகுவதற்கு மறுத்தாலோ பழகிவிட்டு வெறுத்தாலோதான் இந்த உணர்வு விஸ்வரூபம் எடுக்கும். நம்மில் உள்ள கீழ்ப்படிதலற்ற ‘ஈகோ’ பல்வேறு உத்திகளைக் கையாண்டு எதிர்ப்பாலினத்தை வளைக்கப் பார்க்கும்.

அன்பு குறைந்து ஆளும் வெறி அதிகரிக்கும். ஏற்கெனவே உளவியல் கோளாறுகள், போதைப் பழக்கங்கள் மற்றும் ஆளுமைக் கோளாறுகளால் (personality disorders) பாதிக்கப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசம். மனப் பதற்றம், மனச் சோர்வு, அதீத பயம் போன்ற உளவியல் கோளாறுகளின் தாக்கம் இப்பொதெல்லாம் நிறைய இருக்கிறது. மது முதலான போதைப் பழக்கங்களும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வேலையைச் செய்கின்றன. சினிமாக்களும், அவற்றைப் பிரதிபலிக்கும் காதல் சம்பந்தமான வன்முறைச் சம்பவங்களும் மேலும் மேலும் அந்த உளவியல் சிக்கல்களை அதிகமாக்குகின்றன.

பசியில்லை தூக்கமில்லை

லேசான எண்ணச் சுழற்சியாக இருந்தது, ஒரு நோயாக மாறித் தலைவிரித்து ஆடத் தொடங்குவது தான் பிரச்சினையின் ஆரம்பம். அடித்தளம் சரியில்லாத கட்டிடத்தின் மீது இடி விழுவதைப் போன்றது இது. தெளிவான சிந்தனை உள்ளவர்கள் காதலிக்கத் தொடங்கினாலே, ‘பசிக்கலை, தூக்கம் போகுது, குழப்பமாக இருக்கு, நடக்குமா இல்லையான்னே தெரியலை’ என்று பாதி நேரம் புலம்பலிலேயே கழியும். இதில் தவறில்லை. ஆரோக்கியமான காதல் என்று பின்னாளில் பேரெடுத்த காதல்கள்கூட இப்படி ஆரம்பித்தவையாக இருக்கலாம்.

ஒரு சாதாரண க்ரஷ், இன்ஃபாச்சுவேஷன் என்று தொடங்கினாலும் மனங்களும் குணங்களும் ஒத்துப்போகும்போது அந்தக் காதல் நாகரிகமடைந்துவிடுகிறது. ஆரம்பம் எப்படியிருந்தாலும் அது எடுத்துச் செல்லப்படும் விதத்தைப் பொறுத்தே அது ஆரோக்கியமான காதலா அல்லது அவஸ்தை கொடுக்கிற துன்புறு காதலா என்பதை முடிவுசெய்ய முடியும்.

“என்னப்பா வெளியில் இருக்கியா? சரி ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வந்ததும் என்னைக் கூப்பிடு” - இது ஆரோக்கியமான காதல். “நீ போன் பண்ணலையேன்னு இங்கே நான் கிடந்து தவிச்சிக்கிட்டுருக்கேன். என்னைவிட அப்படி என்ன உன் ஃப்ரெண்ட்ஸ் முக்கியமாப் போச்சா?” - இது அப்செஷனல் காதல். காதல் நம்மை வளர்த்தெடுக்கும். அப்செஷன் நம்மை டென்ஷனாக்கும். வளர்ச்சி இருக்காது. மருட்சியும் விரக்தியும் பதற்றமும் பயமும் குழப்பமும்தான் இருக்கும். எவ்வளவு தொலைவில் நம்மவர் இருந்தாலும் எள்ளளவு பயமும் சந்தேகமும் இல்லாமல் இயல்பாக இருப்பதே காதல்.

பின்தொடரும் தொந்தரவு

அப்செஷன் நம்மை மெல்லக் குழப்பி முழு நோயாளியாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. இறுதியில் ‘ஸ்டாக்கிங்’ (stalking) என்ற பின்தொடரும் தொந்தரவால் பாதிக்கப்பட்டு அவரைச்சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்துவிடுவோம். போகுமிடமெல்லாம் பின் தொடர்வது, ஒளிந்திருந்து பார்ப்பது, அவரை அறிந்தவர்களிடத்திளெல்லாம் விசாரிப்பது, அவர் எதிர்பார்க்காத வித்தியாசமான இடத்தில் அல்லது நேரத்தில் அவர் முன் போய் நிற்பது, அவர் வீட்டு வாசல், வாகனம் போன்றவற்றில் குறிப்புகள் எழுதி அவரைக் குழப்புவது, அந்தத் தெருவிலேயே சுற்றிச் சுற்றி வருவது என்ற நிகழ்வுகள் தொடர் கதையாகிவிடும். அப்செஷன் என்ற சூறைக்காற்றின் மத்தியில் சிக்கி அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்ட நிலை இது.

இது இன்னும் உச்சத்துக்குப் போனால் நிலைமையே வேறு மாதிரி இருக்கும்.

‘அதோ அவர் என்னைத்தான் அழைக்கிறார், என்னிடம்தான் அவரது காதலைச் சொல்ல வருகிறார். ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் தடுக்கிறார்கள். அவரது படத்தில் விரக தாபத்தில் அவர் பாடும் பாட்டு என்னைக் குறித்துத்தான். வேறு யாருக்கும் எங்கள் காதல் தெரியாது’ – சமூகத்தில் பிரபலமான ஒருவரைப் பார்த்துச் சாதாரணமான ஒருவர் இப்படிக் காதல் நோயால் வாடுவதும் ஒரு விசித்திரமான கோளாறுதான். அதைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.



“எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம். அவரை நேரில் பார்த்தப்போ அவ்வளவா பிடிக்கலை. ஆனால் வீட்டில் ஜாதகம் எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க. அவர்கிட்ட பேசும்போது ரொம்ப எரிச்சல்படறேன். ஆனா அவர் ரொம்ப அன்பா இருக்காரு. என்னை மனைவியாகவே நினைக்கறாரு. என் மனசு நிலையா இல்லை. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இப்படியே இருந்தா ரெண்டு பேர் குடும்பத்திலேயும் பிரச்சினை வரும். சில சமயம் அவரை நினைச்சா பாவமா இருக்கு.

நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சொன்னா இதெல்லாம் போகப் போகச் சரியாகிடும்னு சொல்றாங்க. எனக்காக வாழறதா இல்லை என் குடும்பத்துக்காக வாழறதான்னு புரியலை. ஒரே குழப்பமா இருக்கு. நான் நினைச்ச மாதிரி அவர் இல்லை. என் மனசு நிறைய நெகட்டிவா யோசிக்குதுன்னு மட்டும் புரியுது. அரேஞ்ச்டு மேரேஜ் என்றாலே இப்படித்தான் இருக்குமா? போகப் போகத்தான் பிடிக்குமா? நான் என்னதான் செய்யட்டும்?”

– எனக்கு வந்த இமெயில்களில் ஒன்று இந்தக் கடிதம். இந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான பெண்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கும். அவருக்கு நான் சொல்கிற பதில்தான் அனைவருக்கும்.

அன்புத் தோழி… நீங்கள் நன்றாகக் குழம்பியிருக்கிறீர்கள். வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து மட்டும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. புற அழகைவிட அக அழகு முக்கியம். யாரையும் காதலிக்கவில்லை என்கிறீர்கள். அவர் உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒரு மாதத்தில் திருமணம் என்று இருக்கும்போது எத்தனை ஏற்பாடுகள் முடிந்திருக்கும்? அவ்வளவு ஏற்பாடும் உங்கள் சம்மதம் இல்லாமலா நடந்திருக்கும்?

நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள். சினிமாத்தனமான எதிர்பார்ப்புகள் ஏதும் இருந்தால் விட்டொழியுங்கள். வாழ்க்கை வேறு, சினிமாக்களின் கற்பிதம் வேறு. நிஜ வாழ்க்கைக்கு அவை ஏற்புடையதாக இருக்காது. இப்படி ஆகிவிடும், அப்படி நேர்ந்துவிடும் என்று எதிர்மறையாக நினைப்பது என்பது உளவியல் ரீதியாக மனப்பதற்றம் (anxiety disorder) என்ற வகையறாவில் சேர்த்தி. உங்கள் உள்ளுணர்வை நம்புகிறீர்கள் என்றால் உங்களுக்குக் குழப்பம் வராது. ‘கல்யாணத்தை நிறுத்துங்கள்’ என்று முதலிலேயே சொல்லியிருப்பீர்கள். வெளித்தோற்றத்தில் அவர் உங்கள் கணவன் என்ற இமேஜுக்குப் பொருந்தவில்லை என்பதாகத்தான் அங்கலாய்க்கிறீர்கள். அது சரிவராது.

வாழ்க்கை ஒரு நெடும் பயணம். நல்ல வேலை, தேவைக்குத் தகுந்த பணம், நன்மக்களைப் பெறுதல், அனைவரும் ஆரோக்கியமாக இருத்தல், வீட்டுக்கு முதலிலும் நாட்டுக்குப் பிறகும் பயனுள்ளவர்களாக இருத்தல்… இப்படிப் பல பரிமாணங்களைக் கொண்டது நிஜ வாழ்க்கை. ‘தாலி கட்டிய பின்னர்தான் தலை தூக்கி என் கணவனையே பார்த்தேன்’ என்று சொன்ன அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் திருமணத்துக்கு முன் எவ்வளவோ பேசுகிறோம், பரிமாறிக்கொள்கிறோம். பொறுமையாக யோசியுங்கள். நடைமுறை நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். புற அழகு குறையக் குறைய அக அழகு அதிகரிக்கும் அதிசயம் காதலில் நடக்கும். அதை அனுபவித்து உணருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் நல்லதே நடக்கும், திருமண வாழ்த்துகள்!

போகப் போகத்தான் பிடிக்குமா?

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்